மரபுக்கவிதை 01
thaayum_thaaramum

 

 

 

யாதும் மாகி நின்றாயே
….யாவும் அறிந்த என்தாயே
தீதும் நன்றும் உரைத்தாயே
….திண்மை நெஞ்சாய் வளர்த்தாயே
போதும் என்று உணராமல்
….பொழியும் தன்மை தந்தாயே
ஓதும் முறையும் கொடுத்தாயே
….ஒழுக்க நெறியில் காத்தாயே.!

யாது மாகி நிற்கின்றாய்
….யாவும் நீதான் என்னவளே
தீதும் என்னை நெருங்காதே
….தினமும் கண்ணாய் காக்கின்றாய்
போதும் என்ற நெஞ்சையே
….போற்றி வாழ்வோம் என்பதையே
ஓதும் தெய்வம் யாவரையும்
….ஓயா(து) வேண்டும் மனையாளே.!

விஜயகுமார் வேல்முருகன்
எண்ணூர்,சென்னை, தமிழ்நாடு.


மரபுக்கவிதை 02
thaayum_thaaramum

 

 

 

தாய் :-

” மாசுகள் கலைந்திடுவாள்
—— மகத்துவமாய் நிறைந்திருப்பாள் ;
தூசுகள் துயரங்கள்
—— துடைத்திடுவாள் புவிதனிலும்
விசுறும் தென்றலென
—— வீசுடுவாள் புன்னகையை .
ஆசிகள் தந்திடுவாள்
—— அன்புடனே வளர்த்திடுவாள் .”

தாரம் :-

” உலகத்தை சுழற்றிடுவாள்
—— உணர்வான அன்பினால்
கலகத்தைத் தடுத்திடுவாள்
—— கணவனைக் காத்திடுவாள்
பலத்தினால் ஆண்டிடுவாள்
—— பதிபக்தியால் நிறைந்திடுவாள்
மலர்களும் மயங்கிடும்
—— மனத்தினால் மலர்ந்திடுவாள் .”

தாய் :-

” உதிரத்தை உணவாக்கித்
—— ஊட்டியவள் நம்மிந்தாய்
அதியன்புக் கொண்டுநமை
—— அன்பினால் ஆக்கிடுவாள் .
கதியாகப் பற்றிடுவோம் .
—— காரிகையைக் காத்திடுவோம்
மதிபோன்ற முகத்துடனே
—— மாதாவும் மலர்ந்திடுவாள் .”
தாரம் :-
” ஆத்மார்த்தம் தந்திட்ட
—— அன்புள்ள நெஞ்சத்தால்
காத்திருக்கும் காதலுக்குக்
—— கண்மணியே காட்டாகப்
பூத்திருப்பாள் வாசமுள்ள
—— பூக்களினால் வாழ்த்திடுவோம் .
புன்னகையால் தாரமுமே
—— பூத்தவளாய் நின்றிடுவாள் .”

தாயும் தாரமும் :-

” தாயுடன் தாரமும்
—— தக்கதோர் வாழ்வினைச்
சேயுடன் சேர்ந்ததே
—— செல்வம் தரும்வாழ்க்கை .
நோயுடன் நின்றிடில்
—— நோகாமல் சேவைசெய்யும்
தாயுடன் தாரமும்
—— தருவரே நேசத்தை .”

திருமதி சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி, தமிழ்நாடு


மரபுக்கவிதை 03
thaayum_thaaramum

 

 

 

கருவினில் தாங்கிடும் கண்காணா சேயின்
உருவம் உருவகித்து உள்ளம் – உருகி
பெருவலி தாங்கியே பெற்றெடுக்கும் அன்னை
உருவத்தில் தெய்வம் உணர்.

கடவுளைக் கூடச் சுமந்தவள் தாயே
கடவுளில் மேலாய் கருணை – வடிவாய்
இருக்கின்றத் தெய்வத்தை என்றென்றும் போற்றித்
திருப்பாதம் தொட்டு வணங்கு.

உனைநம்பி வந்தே உடலா விபொருள்
தனையர்ப் பணம்செயும் தாரம் – மனையாட்சி
செய்தே மரணம் வரைவருவாள். அன்னவளும்
மெய்யில் உறைந்த உறவு.

மடியில் சுமந்தவளும் உன்பிள்ளை தன்னை
மடியில் சுமப்பவளும் வாழ்வின் – கொடியில்
உனக்காய் மணம்வீசும் உன்னதப் பூக்கள்.
மனத்துள் அவரை இருத்து.

இல்லத்தின் தூண்போல் இருக்கின்ற செல்வமாம்
நல்லன்பு காட்டுகின்றத் தாயவளும் – இல்லாளும்.
இல்லாத போதும் இருக்கின்ற அன்பால்நீ
வெல்லவே வாழ்க்கை உனக்கு.

மெய்யன் நடராஜ்
வத்தல, இலங்கை


மரபுக்கவிதை 04
thaayum_thaaramum

 

 

 

அன்பின்நல் இலக்கணமே தாய்தான் ! பாச
அணைப்பிற்கு இலக்கியமாய்த் திகழ்ப வள்தாய்
தன்வயிறு பட்டினியில் தகிக்கும் போதும்
தன்குழந்தை பசிதீர்த்து மகிழ்ப வள்தாய்
தன்பிள்ளை நோய்தனக்குத் தான்து டித்துத்
தன்னுணவு பத்தியத்தில் காப்ப வள்தாய்
வன்மம்தீக் கயவனென்று தூற்றும் போதும்
வாஞ்சையுடன் திருத்துதற்கே முயல்ப வள்தாய் !

எங்கிருந்தோ வந்தவள்தான் என்ற போதும்
எல்லாமும் கணவனென்றே தன்னை மாற்றி
பொங்கிவரும் தாய்வீட்டு நினைவ ழித்துப்
பொழுதெல்லாம் புகுந்தவீட்டின் உயர்வை எண்ணி
மங்கலத்தை மனையேற்றி மடிய ளித்து
மனந்தன்னில் கொழுநனுக்கே இடம ளித்து
செங்கதிர்போல் குலம்ஒளிரக் குழந்தை பெற்றுச்
செவ்வாழ்வை அளிப்பவளே மனைவி நல்லாள் !

தன்குருதி பாலாக ஊட்டும் அன்னை
தன்னுடலால் இன்பத்தைக் கொடுக்கும் தாரம்
தன்னுடைய மகிழ்ச்சியினை எண்ணி டாமல்
தன்குழந்தை கணவனுக்கே வாழ்வர் நாளும்
அன்பான தாயைப்போல் அரவ ணைக்கும்
அருமையான தாரந்தான் அமைந்து விட்டால்
இன்பந்தான் வாழ்க்கையிங்கே ! இல்லை யென்றால்
இவ்வுலகே நரகந்தான் நொடிகள் தோறும் !

பாவலர் கருமலைத்தமிழாழன்
ஒசூர்- 635 109, தமிழ்நாடு


மரபுக்கவிதை 05
thaayum_thaaramum

 

 

 

உதிரத்தை ஊணாக்கி உடலென்ற நம்
. . . கூட்டில் உயிரானவள் தாயடா!
இதயத்தை உனதாக்கி உயிரோடு தினம்
. . . கூடவே வந்தவள் தாரமடா!

தாரமும் தாயும் தனிச் சக்தியடா!
. . . தமக்காதல் தானியற்று வரங்களடா!
ஆதாரமானவள் ஆயுளுக்கும் தாயடா!
. . . அடுத்து வரமானவளே தாரமடா!

தாய் மடியும் எம்; சொர்க்கமடா!
. . . தரும் அன்பில் உயிர் காக்குமடா!
தாரமவள் மடியும் சொர்க்கம் தானடா!
. . . தன்னுயிர் தரும் தாய் வர்க்கமடா!

பெண்ணவர் இங்கு தெய்வப் பேறடா!
. . . பேதமில்லை இருவரும் பேசும் தெய்வமடா!
கண்ணவரே கடைசிவரை நமக்கடா!
. . . கண்ணிமையாய் காப்பதெம் கடமையடா!

பெண்ணடிமை கொள்வார் விலங்கடா!
. . . பெருங்கவி பாரதி வழியில் நில்லடா!
தன்னினம் காத்திடும் இருவரும் தாயடா!
. . . தரணியிலவர் தந்த மொழியே உயிரடா!

கவிஞர் கவியருவி வில்லூரான்
கல்லடி உப்போடை மட்டக்களப்பு, இலங்கை


மரபுக்கவிதை 06
thaayum_thaaramum

 

 

 

தாரமென விதைக்கும் விதை
தாயென உருவாவது கதை.
சாரமிகு அனுபவ உபயமாய்
தாரமே தளிர்க்கிறாள் தாயாக.
தாரம் தாயெனும் பெண்கள்
ஆரம் வாழ்வினிரு கண்கள்.
கருவேந்தும் உவக சீவன்கள்
உருவாகிறார் அன்புத் தாயாய்.

பிறந்தகத்து முத்து தாரமாகிறாள்
புகுந்தகத்தில் கருவேந்தித் தாயாகிறாள்.
உடலளித்த தாரம் தாய்மைக்
கடலாகிறாள் தாய்மை வரத்தால்.
இல்லற வட்டத்தின் ஆரம்பம்
நல்லறமாக்க வரும் தாரம்
பல்லறமாகிறது முடிவுரை தாயாய்.
வல்லாண்மையானது தாயும் தாரமும்.

மகனைப் பிரசவிக்கும் தாய்
மகனை தத்துக் கொடுக்கிறாள்
செகம் போற்றுமொரு ஆணை
நிகரில்லாத் தந்தையாக்குகிறாள் தாரம்.
தாரம் காதலின்றி வரண்டால்
கோரம் வாழ்வு பாலைவனம்.
ஈரம், காரம், சாரமிகு
தாரம் தாயும் வரங்கள்.

பா. வானதி – வேதா இலங்காதிலகம்
டென்மார்க்


6 Comments

செந்தாமரைக் கொடி · ஜனவரி 28, 2016 at 15 h 34 min

ஆகா.. வாழ்த்துகிறேன்..

Vetha.Langathilakam · ஜனவரி 28, 2016 at 19 h 15 min

எல்லோருக்கும். இனிய நன்றியும்
இனிய வாழ்த்துகளும்.

புதுமைத்தமிழ்த்தென்றல் கே. பூமதீன் · ஜனவரி 28, 2016 at 19 h 30 min

கவிஞர்களுக்குக்களம் அமைத்த தமிழ் நெஞ்சம் இணையத்துக்கு நன்றி!
தரணி போற்றும் புகழோடு தமிழ்ப்பணி செய்ய வாழ்த்துக்கள்..

SM · ஜனவரி 30, 2016 at 21 h 28 min

good

POONGAVANAM · பிப்ரவரி 12, 2016 at 19 h 32 min

மிக அருமை வாழ்த்துக்கள் பா மிக்க சந்தோஷம்

saraswathi baskaran · டிசம்பர் 15, 2016 at 7 h 52 min

மிகவும் அருமையான தொகுப்பு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...