பாடல் – 75
வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்
துணர்வுடையா னோதிய நூலும் – புணர்வின்கண்
தக்க தறியுந் தலைமகனும் இம்மூவர்
பொத்தின்றிக் காழ்த்த மரம்.
(இ-ள்.) வள்ளன்மை – வரையாது கொடுத்தலை, பூண்டான்கண் – அணியாக மேற்கொண்டவனிடத்துள்ள, செல்வமும் – பொருளும்; உள்ளத்து – உள்ளத்தில், உணர்வு உடையான் – (கேட்டதனை) நினைத்துப் பார்க்கும் இயல்புடையவன், ஓதிய நூலும் – கற்ற நூற்புலமையும்; புணர்வின்கண் – (பிறர் தன்னைச்) சார்ந்தவிடத்து, தக்கது – (அவர்க்குச் செய்யத்) தக்க காரியத்தை, அறியும் தலைமகனும் – அறியும் தலைவனும்; இ மூவர் ஆகிய இம் மூவரும், பொத்துஇன்றி – பொந்தில்லாமல், காழ்த்த – வயிரம் பற்றிய, மரம் – மரம் போல அசைவற்றவராவர். (எ-று.)
(க-ரை.) கொடையாளனிடத்துற்ற செல்வமும், அறிவொடு கற்ற அறநூலும், தன்னை யடுத்தவர்க்குச் செய்யத்தக்கதைத் தெரிந்தவனும் உறுதியான பொருள்கள் என்பது.
வள்ளன்மை : பண்புப் பெயர்; ‘வள்’ முதனிலை; ‘ள்’ : சந்தி. நூல் : காரண வாகு பெயர். செல்வமும் நூலும் தலைமகனும் எனத் திணைவிரவிச் சிறப்பினால் அஃறிணை உயர்தினை முடிபேற்றது. பொத்து : பொந்து என்பதின் வலித்தல்.