பாடல் – 57
கொட்டி யளந்தமையாப் பாடலும் தட்டித்துப்
பிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் – துச்சிருந்தான்
ஆளுங் கலங்கா முறுதலும் இம்மூன்றும்
கேள்வியுள் இன்னா தன.
(இ-ள்.) கொட்டி – தாளவோசையால், அளந்து – அளவிட்டு அமையாப் பாடலும் – அதற்குத் தகுந்தபடி பாடாத பாடலும் தட்டி – கைதட்டி, து பிச்சை – சோற்றுப் பிச்சைக்கு, புக்கு – போய், உண்பான் – வாங்கி உண்ணுபவனுடைய, பிளிற்றலும் – இரைதலும் துச்சு இருந்தான் – ஒதுக்குக்குடி யிருந்தவன், ஆளும் கலம் – (அவ்வில்லத்தான்) ஆளும் பண்டங்களை, காமுறுதலும் – விரும்புதலும்; இ மூன்றும் – ஆகிய இந்த மூன்றும், கேள்வியுள் – கேட்கப்படுபவைகளுள், இன்னாதன – இன்பத்தைத் தராதனவாம்; (எ-று.)
(க-ரை.) தாளத்துக்கு ஒவ்வாப் பாட்டும், பிச்சையெடுத்துண்பான் பேரிரைச்சலும், ஒட்டுக்குடியன் பெருவீட்டின் பொருளைக்குக் கருதுதலும் இன்பத்தைத் தராதவை.
காட்டி : தொழிலடியாகப் பிறந்த பெயர்; இ : செயப்படு பொருள் விகுதி, ஓசையை யுணர்த்தின் கருவியாகு பெயர். து – உணவு : முதனிலைத் தொழிலாகு பெயர். துச்சு – சிறிது பொழுது தங்குமிடம்.