இசைப்பாக்கள் இயற்றுதற்கு இலக்க ணத்தை
        இயற்றிட்ட திருமுருகன் வழியில் நின்று
திசைமாறிப் போகாமல் திறமை யோடு
        தித்திக்கத் தெளிதமிழாம் ஏட்டைத் தந்தார்
விசையாகத் தனித்தமிழின் இயக்க மோங்கி
        வினையாற்றத் தமிழ்க்குழுவில் பாடு பட்டார்
அசைபோட்டே சுவைக்கின்ற சங்கப் பாப்போல்
        அரும்பாக்கள் குவித்திட்டார் தங்கப் பாதான்!

படைப்பாளி யாய்மட்டும் இருந்தி டாமல்
        பசுந்தமிழின் போராளி யாக வாழ்ந்தே
தடையாக நின்றதமிழ்ப் பகையை ஓட்டித்
        தன்மானம் ஊட்டிவிட்ட பாவின் வேந்தன்
கடைவிரித்தேன் என்றுரைத்த வள்ள லாரின்
        கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெ யர்த்தே
மடைதிறந்த வெள்ளம்போல் தமிழு ணர்வை
        மனமேற்றும் பணிசெய்தார் தங்கப் பாதான்!

அமிழ்தான தமிழ்பயிற்றும் ஆசா னாக
        ஆயிரமாம் மாணவர்க்குத் தமிழை ஊட்டித்
தமிழினிலே இடவில்லை கையொப்ப மென்று
        தந்தரசு விருதுதனைத் திருப்பித் தந்தார்!
நிமிர்ந்துநின்று களத்தினிலே பாவா ணர்போல்
        நின்றபெருஞ் சித்திரன்போல் தமிழ்வ ளர்த்தே
சிமிழ்போல ஐம்பதிற்கும் மேலாம் நூல்கள்
        சிறப்பாகத் தந்தவராம் தங்கப் பாதான்!

மற்றுமொரு வள்ளியப்பா! சோளக் கொல்லை
        மண்வாசப் பொம்மைக்கும்; ஆங்கி லத்தில்
பொற்சங்கப் பாக்களினை வடித்த தற்கும்
        போற்றியீயச் சாகித்ய விருதைப் பெற்றார்!
நற்றமிழில் ஆங்கிலத்தில் புலமை பெற்ற
        நல்லறிஞர் தமிழறிஞர் வேர்சொல் லாய்வர்
நற்றொண்டு தமிழுக்குச் செய்த தாலே
        நாள்வென்று வாழ்ந்திடுவார் தங்கப் பாதான்!


2 Comments

KarumalaiThamizhazhan · ஜூன் 2, 2018 at 16 h 13 min

நன்றி ஐயா

பெண்ணியம் செல்வக்குமாரி · ஜூன் 3, 2018 at 7 h 10 min

தமிழ்வாழ தான் வாழ்ந்தவரை மிக அற்புதமாக தன் கவிதைகளால் போற்றிய ஐயா கருமலைத் தமிழாழன் அவர்களுக்குப் பாராட்டுகள்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

வான் நிலவும் வண்ண நினை(ல)வும்

பால்வெளியில் பந்தெறிந்த தேவதையிங்கு யாரோ?
பால்நிலவாய் வலம்வருமே வண்ணநிலா தானோ?
வைரவெளிப் பொட்டலிலே வந்திடுவாள் அவளே
வான்நிலவு மங்கையவள் வசங்கொள்வாள் நமையே!

காதோடு வருடுமந்த காற்றோசை போலக்
கதைபலவும் சொல்லிடுவார் நினைவோசை மேலே,

 » Read more about: வான் நிலவும் வண்ண நினை(ல)வும்  »

மரபுக் கவிதை

ஆசையக் காத்துல தூது விட்டேன்

கிள்ளை மொழியெல்லாம் கிளியேயுன் நினைவூட்ட
          மெல்ல மயக்குமென் மேவும்நிலை சொல்லுதற்குத்
துள்ளும் கயல்சரியோ?  துடிப்பான மான்சரியோ?
         

 » Read more about: ஆசையக் காத்துல தூது விட்டேன்  »

மரபுக் கவிதை

வாழ்வாங்கு வாழியவே பாட்டரசர்!

செந்தமிழின் பேரெழிலைத் தீட்டிடுவார்! நற்கவியால்
முந்தைத் தமிழ்மரபை மூட்டிடுவார்! – சிந்தையெலாம்
விந்தை புரிந்திடுவார்! மேன்மையுறும் பாட்டரசர்
சந்தம் இனிக்கும் தழைத்து!

கம்பன் கவிகாக்கும் காவலர்! போற்றியே
நம்மின் தமிழ்காக்கும் நாவலர்!

 » Read more about: வாழ்வாங்கு வாழியவே பாட்டரசர்!  »