முன்னுரை

நாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம். வாழ்க்கையை அகம் புறம் என்ற இரும்பெரும் பிரிவுகளாக பிரித்தனர். பண்டைத்தமிழர் காதல் வாழ்வை அகத்தில் அடக்கினர். அக வாழ்க்கையை களவு கற்பு என இரு வகையாக பிரித்தனர்.

சங்க இலக்கியங்களில் காணப்படும் அகச்செய்திகளைப் போலவே தமிழகத்தில் காலாங்காலமாக வழங்கி வரும் வாய்மொழிப் பாடல்களாகிய நாட்டுப்புறப்பாடல்களில் அகச்செய்திகள் காணப்படுகின்றன. எழுத்திலக்கியம் தோன்றியதற்கு முன்பே வாய்மொழிப்பாடல்கள் தோன்றின. எனவே இலக்கியத்தில் காணப்படும் அகச்செய்திகளுக்கு வாய்மொழிப்பாடல்களே தாயாக இருக்கக்கூடும் என்ற கருத்தினை இக்கட்டுரை கண்டறிந்து கூற முற்படுகிறது.
காதல் பற்றி அறிஞர்களின் கருத்து

“சொர்கத்திலிருந்து வந்த ஒளிக்கற்றை” – பைரன்
“சொர்க்கம் கொடுத்த பரிசு” – தாமஸ் கேம்பெல்
“மகிழ்ச்சியின் உயர்ந்த சொர்க்கம்” – சாட்டர்சன்
“அழகு மிக்க கனவு” – வில்லியம் சார்ப்
“காதல் என்பது தேன்கூடு” – கண்ணதாசன்

காதல் பாடல்

காதல் உணர்வைப் புலப்படுத்தும் பாடல்களை காதல் வயப்பட்டரோ பாடுகின்றனர் என்று சொல்ல இயலாது ‘முன்பு காதல் வாழ்க்கைப் பின்னணியிற் பரம்பரையாக வழங்கி வந்துள்ளன. தேவைக்கும், பாடுவோர்க்கும், கேட்போருக்கும் ஏற்ப இவை தொழிற் களப்பாடலாகவும் பொழுதுபோக்குப் பாடல்களாகவும் பாடப்படும் நிலையை அடைவதாகின்றன என்னும் கருத்து நினைவு கொள்ளத்தக்கதாகும்.

அகத்திணை மரபுகளும் நாட்டுப்புறக் காதல் பாடல்களும்

இலக்கியக் காதலர்கள் சோலையிலும் திணைப்புனத்திலும் சந்தித்து மகிழ்வதுபோல், நாட்டுப்புறக் காதலர்கள் ஆற்றோரம். குளக்கரை வயற்புறம், தென்னந்தோப்பு முதலிய இடங்களில் சந்தித்து மகிழ்கின்றனர். சங்க இலக்கிய அகத்தி;ணைப் பாடல்களில் இடம்பெறும் பல்வேறு துறைகளை ஒத்த செய்திகள் நாட்டுப்புறப்பாடல்களிலும் இடம் பெறுவதாகக் காணலாம். தோழி கூற்று, பாங்கன் கூற்று முதலியன நாட்டுப்புறப் பாடல்களில் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. தலைவனும் தலைவியும் நேராகவே பேசிக்கொண்டு தங்கள் காதலை வளர்த்துக் கொள்கின்றனர். நல்லதையும், கெட்டதையும் நேருக்குநேர் எடுத்துச் சொல்லித் தங்கள் விருப்பு வெறுப்புகளை ஒருவருக்கொருவர் வெளியிட்டுக் கொள்கின்றனர். இலக்கியங்களில் பேரிடம் பெற்ற தோழியை நாட்டுப்புறப் பாடல்களில் காணமுடியாது. ஆண்பாடும் காதற் பாடல்களில் ஆணுடைய கூற்றாக அமையும்; நாட்டுப்புறப் பாடல்கள் சங்க இலக்கிய அகப்பாடல் மரபுகளோடு பல்வேறு வகைகளில் ஒத்தும், ஒரு சில நேரங்களில் வேறுபட்டு விளங்கும் தன்மையினை காணலாம்.

நலம் புனைந்துரைத்தல்

காதலுக்கு அடிப்படையாக அமைவனவற்றுள் உடல் அழகும் ஒன்றாகும். உடலால் கவரப்பட்டு உள்ளத்தால் ஒன்றுபட்ட தலைவன் தலைவியர் ஒருவருக்கொருவர் புகழ்ந்து பேசுவதை இலக்கியத்தில் காணமுடியும்.

”முறிமேனி முத்தம் முறவல் வெளிநாற்றம்
வேலுண்கண் வேயத்தோ ளவட்கு”
(நலம் புனைந்துரைத்தல்-1113)

என வள்ளுவர் காட்டும் தலைவன் தலைவியின் எழில் நலத்தைப் புகழ்ந்து மொழிகின்றான். இதே போன்று நாட்டுப்புற மக்களும் எழில் நலங்களைப் புகழ்ந்து பாடுகின்றனர்.
தலைவியின் எழில் நலத்தைத் தலைவன் போற்றுதல்

பெண்ணின் அழகுக்கு அழகு தருவது அவளது நீண்டு வளர்ந்த கூந்தலாகும். கூந்தலின் நீளத்திற்கும் செறிவிற்கும் மயில் தோகை உவமையாகக் கூறப்படுவதை

“கலிமயில் கலாவத் தன்ன இவள்
ஓலிமென் கூந்தல் நம்வயி-னானே”
(நற்.265)

என்னும் நற்றிணைப் பாடலால் அறியலாம். நீண்டு வளர்ந்த கூந்தலை அழகிய முறையில் தூக்கி முடிந்து கொண்டை போட்ட செய்தியும் இலக்கியத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது. அவ்வாறு போடப்பட்ட கொண்டாள் தோற்றத்தை,

“… வாழைப்
பூவெனப் பொலிந்த ஓதி”

என்று சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும்.

நாட்டுப்புறப்பாடல் : அள்ளிமுடிந்த கொண்டை

நீண்ட கூந்தலையுடைய பெண்ணொருத்தியைக் காதலியாகப் பெற்ற காதலன் ஒருவன் அவளுடைய கூந்தல் நீளத்தையும், அக்கூந்தலை அவள் அள்ளி முடிந்து கொண்டை போடப்பட்டிருக்கும் முறையையும் பற்றி இப்பாடலில் காணலாம்.

“அறுபத்தி நாலு முழல் அள்ளி முடிஞ்ச கொண்டை
அவிழ்ந்த விபரம் பின்னாடி ஏகுட்டி ஏகுட்டி
வேடுவ பொண்ணே அதஎனக்கு சொல்ல வேனும்டி”

தொங்கும் கொண்டை

கிராமப்புற பெண்கள் கோடாலியின் முடிச்சுப் போன்ற அமைப்புடைய கொண்டை போடுகின்றனர். இக்கொண்டையை கோடலிக்கொண்டை என்று குறிப்பிடுகின்றான்.
“கோடாலிக் கொண்டைபோட்டு
கோயிலிக்கு போற புள்ள – உன்
கோடாலிக் கொண்டைக்குள்ளே அடி
கொழுந்திருந்து பாடுதடி”

என்று கூறுகிறான்.

தலைவனின் எழில் நலத்தைத் தலைவி போற்றுதல்

சங்கப்பாடல்களில் தலைவனின் எழில் நலத்தையும் அவனுடைய பண்புகளையும் தலைவி போற்றி மகிழ்கின்றாள். ‘எப்பொழுதும் பொய்யான சொற்களுடையவன். என் தோள்களைப் பிhpந்து வாழ வேண்டும் என்று எண்ணாதவன் வண்டானது தாமரையில் உள்ள தேனை எடுத்துச்சென்று சந்தன மரத்தில் தேனடை கட்டியது போல் அவனுடைய நட்பு மிக உயர்ந்ததாகும் என்றும் பொருள் அமைய

“நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்
என்று என் தோள் பிரிவு அறியலரே
தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீந் தேன் போல
புரைய மன்றே புரையோர் கேண்மை”
(நற்றணை குறிஞ்சித் திணை பாடல்)

என்ற இப்பாடல் தலைவனது உயர்ந்த உள்ளத்தை போற்றும் வகையில் அமைந்துள்ளது.

கூந்தல் அழகு

கிராமபுறங்களில் பெண்களைப் போலவே ஆண்களும் கூந்தல் வளர்ந்திருந்தனர் என்னும் செய்தியை நாட்டுப்புறப்பாடல் உணர்த்துகின்றன. தலைவியின் கூந்தல் அழகைப் போற்றும் தலைவி.

“நறுக்கச் சவரம் செய்து
நடுத்தெருவு போறவரே
குறுக்க நல்லா தவழுதையா
கூந்தலொரு பாகத்திலே”

என்று குறிப்பிடுகிறார்.

உடற்பொழிவும் உறுப்புகளின் அழகும்

குறிஞ்சிப்பாட்டில் பாட்டுடைத் தலைவனின் தோற்றப் பொழிவினை கூறுகின்ற போது பலமுறை எண்ணெய் பு+சப்பட்டதால் நன்றாக வளர்ந்து சுருண்டு கருமை நிறமொடு விளங்கும் முடியில் குளிர்ச்சியான மயிர்ச் சந்தனத்தை மணம் வீசுமாறு பூசிக் குளித்து அதன் ஈரம் உலருமாறு கைகளால் கோதி சிக்கு எடுத்து அகிலை நெருப்பில் இட்டுப் புகைத்து முடியை உலர்த்துவதனைக் கபிலர் வர்ணிக்கிறார்.

“எண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த்”
(குறி.107. வரி)

கிராமத்து ஆடவர்கள் நாள்தோறும் உழைக்கும் இயல்புடையவர்கள் அவர்கள் மேற்கொள்ளும் விவசாய வேலை மிகவும் கடுமையானதாகும் கடின வேலைக்கு பழக்கப்பட்ட அவர்களுடைய உடல் உரமேறி வலுவுடையதாக திகழ வாய்ப்புள்ளது.

“எண்ணெய்த் தலையழகா
எழுத்தாணி மூக்கழகா
கோயில் சிலையழகா
கொல்லுதடா உன்னழகு”

என்ற நாட்டுப்புறப் பாடலின் வழி அறியலாம்.

அகன்ற மார்பு

குறிஞ்சிப்பாட்டில் தலைவனின் வருகையை கூறுகின்ற போது அவனது அகன்ற மார்பினைப்பற்றியும் கூறியிருப்பார். சந்தனம் பு+சிய அகன்ற மார்பில் வழக்கமாக அணியும் மாலையை அணிகலன்களோடு சேர்த்து அணிந்து கொண்டு அழகுபெற்று உருவத்துடன் இருந்ததாக கூறுவார் காலர்.

“மைந்திளை கொண்ட மலர்ந்தேந் தகலத்துத்”
(குறி.120 வரி)

என்ற பாடல் வரிமூலம் அறியலாம்.

இதேபோன்று நாட்டுப்புறப் பாடலிலும் தலைவன் அகன்ற மார்புடையவன் என்று தலைவி பாடுவதாக அமைகின்றது.

“மாரு படந்தவரே மனக்கவலை வச்சவரே
தேமல் படந்தவரே செல்லையா
இப்ப தேத்தாதிங்க ஏம்மனச செல்லையா”

என்று பாடுகிறாள்.

அம்பலும் அலரும்

தலைவனும் தலைவியும் களவு வாழ்க்கையில் ஈடுபடுவதைக் கண்ணுற்ற ஊர் மக்கள் தமக்குள் பேசிக் கொள்வதே அம்பலும் அலருமாகும். களவு வாழ்க்கையில் ஈடுபட்ட தலைவியை ஊர்த்தெருவில் பெண்டீர் சிலரும் பலருமாக கூடி நின்று கடைக்கண்ணால் சுட்டி நோக்கி மூக்கின் உச்சியில் சுட்டுவிரல் சேர்த்து அலர் தூற்றினர் என்பதனை,

“சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகிற் பெண்டீர் அம்பல் தூற்றி”
(நற்.149 தோழி கூற்று 1-3 வரி)

என்று நற்றிணைப் பாடல் வழி அறியலாம்.

“கடலோட கல்லுரச
கடலுத்தண்ணி மீனொரச
உன்னோட நானுரச
உலகம் பொறுக்கலையே”

என்று புலம்புகிறாள்.

தாயை பழித்தல்

களவு வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள தலைவிக்கு தன்னுடைய தாயை காணும் போது வெறுப்பு தோன்றுகிறது. மகளைக் காண்பதில் தாயே முதலிடம் பெறுகின்றாள். தாயையே காதல் கொண்ட மகளொருத்தி அன்னையை பிணிக்கும் அரிய சிறைச்சாலை போன்ற அன்னை என்று குறிப்பிடுவதை அறியலாம்.

“வல்உரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்
பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்”
(அகம்.122)

என்ற பாடல் மூலம் அறியலாம்

“கரையிலொரு ஆலமரம் – நம்ம
கண்டு பேசி ஆறு மாசம்
பேசுவமின்னிருந்தா நமக்கு
பெற்ற தாயே சத்திராதி”

என்று குறிப்பிடுகிறாள். தானும் தலைவனும் சந்தித்து பேசுவதற்கு தாய் தடையாய் இருந்ததால் குருதியைப் பாலாக்கி ஊட்டி வளர்த்த தாயையே தலைவி சந்திராதி என்று குறிப்பிடுகிறாள். ‘சத்துரு’ என்ற சொல்லே இப்பாடலில் சச்திராதி என்று குறிப்பிடப்படுகிறது.

தாயினைக் கண்டாலும் சகியே சலிப்பு வந்ததடி”

என்று பாரதியார் பாடலிலும் தலைவியின் நிலையினை காணமுடிகின்றது.

உடன்போக்கு

களவு வாழ்க்கை வெளிப்பட்டு ஊராரால் அலர் தூற்றப்பட்டு தாயால் கண்டிக்கப்பட்ட தலைவி தன்னுடைய வீட்டை விட்டே வெளியேறக் கருதுகிறாள். அதனால் தன் வீட்டை விட்டு உடன்போக்கு மேற்கொள்ள முற்படுகிறாள்.

“சாலை கடந்து வாடி
சந்தைப் பேட்டை கடந்து வாடி
ஓடை கடந்து வாடி – நாம்
ஓடிப்போவோம் ரெங்கூனுக்கு”

என்பதை பாடல்வழி அறியலாம்.

“வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார் கொல் அளியர் தாமே ஆரியர்’
(குறு.7 கண்டோர் கூற்று)

என்ற குறுந்தொகை பாடல்வழி அறியலாம். மூங்கில் அடர்ந்த காட்டுவழியாக முன்னிச் செல்வோர் இருவரில் வில்லையுடைய இளையவன் காலில் கழல்கள் உள்ளன. வளையலணிந்த மெல்லிய அடிகளையுடையாள் பாதங்களில் சிலம்புகள் உள. எனவே திருமணமாகாத இவர்கள் இப்படி அச்சமின்றிக் காட்டுவழி தேடிச் செல்கின்றனரே அந்தோ நல்லவர்களாகத் தோன்றும் இவர்கள் யாரோ என்று கூறுகின்றனர் கண்டோர்.

ஊடல்

ஊடல் என்பது காதலன் காதலியரிடையே நிகழும் அன்புச்சண்டை, தலைவி தனக்கே உரியவளாக அமைய வேண்டும் என்று தலைவனும், அவன் தனக்கு மட்டுமே உரியவனாக விளங்க வேண்டும் என்று தலைவியும் விரும்புவர். ஒருவர் அன்பு இன்னொருவரிடம் செல்வதாக நினைத்தால் கூட உரிமைப்பூசல் முளைத்துவிடும் இத்தகைய அன்புச்சண்டை காதல் வாழ்வுக்குச் சுவையூட்டும் இவ்வாறு உரிமைப்போர் தொடுப்பவர் பெரும்பாலும் தலைவியே ஆவாள்.

“அம்பணத் தன்ன யாமை ஏறிச்
செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும்
யாணர் ஊர நின்னினும்
பாணன் பொய்யன் பல சூளினனே”
(ஐங்.மரு.43 தலைவி கூற்று)

என்ற பாடல் வரிமூலம் தலைவன் பரத்தையர் வீட்டிற்கு சென்று திருப்ப வருகிறான். தலைவியிடம் தன் நிலைமையை விளக்கிய பொழுது தலைவி மறுத்து கூறுவதாக அமைகின்றது.

“கருப்பு கருப்புண்டு
காரங் குத்திப் பேசாதிங்க
கருப்பு இனிப்பாகுமே”

என்று நாட்டுப்புறப்பாடலில் வழி அறிகின்றோம்.

“பனையோர காட்டுக்குள்ள பைத்த நெத்து எடுக்கையில
பாத்னெடி உன் முகத்த பகச்சனேடி ஏன் சனத்த”
“பாக்க வேண்டாம் ஏன் முகத்த பகைக்க வேண்டாம் உன் சனத்த
நீ அரசி பெத்த மயன் நானும் என்ன செய்ய”

பிரிவுத்துன்பம்

காதலர் வாழ்வில் தாங்குவதற்கு ஆற்ற இயலாத துன்பம் ஒருவரையொருவர் பிரிந்திருக்கும் போது ஏற்படுவதே பிரிவுத்துன்பம்.

“சந்தனக் கும்பாவிலே
சாதம் போட்டு உண்கையிலே
உங்கள நினைக்கையிலே செல்லையா
நான் உன்கிரது சாதமில்லை”

என்று புலம்புகிறாள்.

இதே போன்று முல்லைப்பாட்டில் தலைவன் போருக்காகச் சென்றிருக்கும் பொழுது தலைவி தலைவனை நினைத்து அழுது புலம்புகிறாள்.

“காட்டவுங் காட்டவுங் காணாள் கலுழ்சிறந்து
பூப்போ லுண்கண் புலம்பு முத்துறைப்பக்”
(முல்லைப்பாட்டு 22, 23)

“…. …. துயருழந்து
நெஞ்சாற்றுப் படுத்த நிறைதடி புலம்பொடு
நீடு நினைந்து தேற்றியும் ஒடுவளை திருத்தியும்”
(மு.81, 82)

என்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

“பாலுங்கசந்தடி சகியே படுக்கையும் நொந்ததடி
சோளக்கிளி மொழியும் செவியில் குத்தல் எடுத்ததடி”

என்று புலம்புவதை பாரதியார் பாடலில் காணமுடிகின்றது.

பரத்தையர் ஒழுக்கம்

பரத்தையர் பிரிவைச் சங்க இலக்கியம் ஏற்றுக்கொண்டாலும் வந்த தலைவனுக்கு மறுக்கப்பட்ட செய்தியையும் அதில் காணலாம்.

“தன் வயிற் சுரத்தலும் அவள் வயின் வேட்டலும்
அன்ன இடங்கள் அல்வழி எல்லாம்
மடனொடு நிற்றல் கடனென மொழிப”
(தொல்.பொருள்.202.நூ)

தலைவன் தனது புறத்தொழுக்கத்தால் தன்பால் மறந்த இடத்தும் தான் அவன்பால் வேட்கையுற்ற விடத்தும் ஆகிய இடங்களிலும் தனக்குரிய மடனென்றும் குணம் நீங்காது நிற்றல் தலைவியின் கடனாம் என்பது இதன் பொருள் ஆகும்.

“மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
யாணர் ஊரநின் மான்இழை அரிவை
காவிரி மலிர்நிறை அன்ன நின்
மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே”
(ஐங்.42.தலைவிகூற்று)

தலைவன் முதலில் பரத்தை ஒருத்தியொடு பழகினான் அப்பரத்தை தலைவன் பிற பரத்தையரோடு பழகுகிறான் என்று ஊடல் கொண்டாள். அதனைத் தலைவி அறிந்தாள். தலைவன் தலைவியின் வீட்டிற்குத் திரும்பினான் அப்போது தலைவி தனக்குத் தலைவனின் நிலைமை தெரியுமென்று சொல்லுவதாக அமைந்துள்ளது.

தலைவனுடைய பரத்தமை ஒழுக்கத்;தை தலைவி கடிந்து மொழியும் நாட்டுப்புறப்பாடல்களும் உள்ளது. தன்னை விட்டு பிரிந்து சென்று பரத்தையர் பலரிடம் இன்பம் துய்த்து மீண்டும் தன்னிடம் வந்திருக்கும் தலைவனை நோக்கி

“குருத வல்லிப் பயறு போல
குறிச்ச பொண்ணு நானிருக்க
கூறு கெட்ட அத்த மகன்
குருடியோடு வங்கணமா”

என்ற பாடல் மூலம் அறியமுடிகின்றது. குருதவல்லிப் பயறு என்று தன்னையும் குருடி என்ற பரைத்தையும் கூறுகின்றாள்.

முடிவுரை

காலங்காலமாக வழக்கில் வழங்கிவரும் வாய்மொழிப்பாடலாகிய நாட்டுப்புறப் பாடல்களில் அக இலக்கியக்கூறுகள் அதிகம் பயின்று வருவதை காண முடிகின்றது. இவை மற்றும் இல்லாது களவு கற்பாதல், குறியிடம் சுட்டல், உவமை, உருவகம், உள்ளுரை, கற்பனை, போன்றவற்றினைப் பற்றின செய்திகளும் அதிகம் காணப்படுகின்றது. அவை ஆராயப்படவேண்டும்.

எழுத்திலக்கியம் தோன்றுவதற்கு முன்பே வழக்கில் இருந்த வாய்மொழிப் பாடல்களின் பொருளும், எழுத்திலக்கியம் தோன்றியபின் அகஇலக்கியங்களையும் அதே பொருள்கள் பயின்று வருவதனை அறிய முடிகின்றது. அக இலக்கியம் கற்றறிந்த புலவர்கள் பாடினமையாலும், நாட்டுப்பாடல் பாமரன் பாடியதாலும் அடிவரையறை, இலக்கண அமைப்பு முறையில் மட்டுமே வேறுபட்டு பாடல் பொருளில் ஒற்றுமையோடு காண்பதை அறியமுடிகின்றது. இந்த தருணத்தில் முனைவர் துளசி இராமசாமியின் பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப் புறப்பாடல்களே என்று கருத்தும் ஆராய வேண்டியதாக இருக்கின்றது. எனவே சங்க அகப்பாடல்களுக்கு வாய்மொழிப்பாடல்களே ஆதாரமாக இருந்திருக்கின்றது என்பதை அறிகின்றோம். எனவே பல்வேறு வகையில் இது தொடர் ஆய்வாக அமையும்.

லெ.ஞானவேல், (களஆய்வாளர் மற்றும் தலைவர்)
மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைக்குழு, மதுரை

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »