காப்பு

பார்வைக்கு மெட்டாப் பரம்பொருளே நின்னருளால்
சோர்வுகள் நீங்கிச் சுகம்பெறவே – தீர்க்கமாய்
உன்னருளை வெண்பாவாய் உன்னதமாய்த் தீட்டிட
உன்னருளை வேண்டுகி றேன்!

நூல்

அண்டம் முழுதும் அழகாய்ப் படைத்ததில்
வண்ணங்கள் தீட்டிடும் வல்லோனே – திண்ணமாய்
நுண்ணறிவில் நீபடைத்தாய் நுட்பமாய் உன்னருள்
வெண்மேகம் போன்றது வே. (1)

வேண்டுமே வேண்டாவே வேண்டுதல் யாவையும்
ஆண்டோன் உனக்கே அதிகாரம் – வேண்டினால்
நீண்டிடும் நின்றிடா நின்னருள் வேண்டலால்
கேண்மையும் தந்திடுவாய் கோ. (2)

கோபங்கள் தீர்க்கும் கொடிய(து) அழிந்திடும்
மாபெரும் நன்மைகள் மண்ணிலே – ஆபத்தின்
சாபங்கள் அல்லவைகள் சாய்த்திடுமே நல்லொளியின்
தீபம்தான் நின்வார்த்தைத் தேன். (3)

தேனீக்கும் உள்ளுணர்வைத் தீதின்றித் தந்தவனே
வானுலகை ஆளுகின்ற வல்லவனே- வானகமும்
கானகமும் கீழ்ப்படியும் காரணங்கள் உன்னளவில்
ஞானமுடை வல்லவ நீ. (4)

நீந்திடும் கோள்களில் நீரினைக் கொண்டிங்கு
மாந்தர்கள் செய்தாய் மறுமையில்- சான்றோருக்(கு)
ஏந்திழைக் கொண்டுநல் ஏற்றங்கள் தந்திடுவாய்
சாந்தமும் உன்குணம் தான். (5)

தானமது தந்தால் தனமது கூடுமென்றாய்
ஞானமுடை மன்னன்நீ ஞாலத்தில் – தானியங்கும்
மானுடச் சிந்தை மயக்கும் வகையினில்
ஆனதும் ஆண்டவனுன் அன்பு. (6)

அன்புடை வல்லோன் அருளாளன் பாறைக்குள்
சின்ன நுணலுக்கும் சீரிய தன்வழியில்
முன்னம் உணவளிப்பான் மூடர் அறிந்திடா
முன்னோன் முதலோன் முடிவு. (7)

முடிவில் அனைத்தும் முழுதாய் அழியக்
கடையில் பிடித்துக் கணக்கை – முடிக்கும்
கடவுளாம் வல்லோன் கருணைமனம் உள்ளோன்
கடுஞ்சினம் அன்பின்கீழ் காண். (8)

காண்கின்ற எல்லாமும் கைத்தேர்ந்த உன்படைப்பு
வேண்டவே தந்திடுவாய் மெய்யான – மாண்புதனை
மீண்டிடுவோர் யாவருக்கும் மெய்யான மன்னிப்பும்
ஈண்டில் மறுமையில் இஃது. (9)

இதுதான் நிகரென எப்பொருளும் இல்லை
முதலாய் முடிவாய் முழுதாய்ப் – பொதுவாய்
அதிகம் அருள்புரியும் ஐயன் அனைத்தின்
அதிபதி அன்புடைய வன். (10)

Categories: வெண்பா

1 Comment

கவிமதி · ஜூன் 22, 2020 at 19 h 52 min

அருமையான மரபு பாடல்.

இவற்றை போன்ற மரபு பாடல்களை கேட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வாழ்த்துகளும் மகிழ்ச்சியும் கவிஞர். நியாஸ் பரங்கிப்பேட்டை அவர்களுக்கு.
தொடர்க

நன்றிகள்
கவிமதி
சார்ஜாவிலிருந்து

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

வெண்பா

பாரதிக்குப் புகழ்மாலை

(கட்டளைக் கலித்துறை)

பாக்கள் படைத்த ஆயிர மாயிரம் அருங்கவியே
பாயிரம் பாட துணிந்தேன் உனக்கென பாரதியே
மாயமோ என்னவோ உன்கவி கேட்கின் மயங்குகிறேன்
பாயுதே தேனெனப் பாக்கள் செவியுளே பாப்பொழிலே!          

 » Read more about: பாரதிக்குப் புகழ்மாலை  »

வெண்பா

பெண்மை போற்றுதும்

நேரிசை வெண்பா வகை

வண்டமிழ்ப் பாவெடுத்து வாழ்த்திடு பெண்மையை
வண்ணமாய்ப் பாக்களில் வாகெனத் – திண்ணமாய்
எண்டிசை கேட்டிட ஏத்திய வண்ணமே
விண்ணுலகம் போற்றும் வியந்து

வண்ணமாம் வாழ்வும் வறுமையில் நண்ணினும்
வண்ணமா யச்சிறு வர்பசி -எண்ணியே
விண்ணு மவருண வீந்துண வேண்டுவாளை
விண்ணுலகம் போற்றும் வியந்து

எண்ணுக பெண்மையை ஏற்றமோடு எங்கணும்
எண்ணியே நண்ணுக ஏந்திழை –

 » Read more about: பெண்மை போற்றுதும்  »

வெண்பா

கம்பன் புகழைப் பாடு மனமே!

கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே
வம்பன் எனினும் வசப்படுவர்! – செம்பொன்
நிகர்த்த கவிதைகள் நெஞ்சுழள இனிக்க
விகர்ப்பம் தணியும் விரைந்து!

விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர்!

 » Read more about: கம்பன் புகழைப் பாடு மனமே!  »