பருவ மழையில்
என் பரம்பரை
துளிர்க்கிறதா…

பருவம்
கொப்பு மாற,
பெண்மை
பூரணம் உணர்கிறது…

இனி,
இனிமை மட்டுமே
இவள் உலகில்…

அந்தத் திரவம்
உருவம்
ஆகிற்றோ …

முந்தானை
பிடித்திழுக்க
முயல் குட்டியா…

நானாகச்
சிரிக்கின்றேன்,
அசையாமல்
குதிக்கின்றேன்…

கண்ணாடியில்
முகம் பார்த்தது போய்,
முதன் முதலாய்
வயிறு…

என் பரம்பரையின்
இன்னொரு பருக்கையா
இது…

கட்டிலை
நகரச் சொல்லி,
ஒற்றைக் காலில்
தொட்டில்!

உன்னைச் சுமக்க,
உனக்காகச் சுரக்க,
மார் விம்மித் துடிக்கிறதே…

இந்த ஒளி
நிலவாக,
பத்துத் திங்கள்
பால் அருந்த வேண்டுமே…

கெஞ்சிக் கேட்கிறேன்.
நாளிகையே…
நகர மாட்டாயா?