மதுரைத்தாயின்
மூத்தமகனே..
கவிதையாய் மனதில்
பூத்த மகனே…!!!

மஹியும் பேகமும்
நபிகளுக்கு
பிரியமானவர்களானார்கள்
உன்னை ஈன்றதால்…

இன்று நபிகளை
பிரியமானவராக்கிக்
கொண்டாய்
மரணத்தை நீ ஈன்றதால்…!!

“கவிக்கோ” உன்னைச்சூடி
பட்டங்களும் பெருமை பெற்றன..

இன்று உன்னையிழந்து
அவையாவும் வெறுமையுற்றன!!

சிந்தனைகளின் சிற்பி….
புதுக்கவிதையின் புகழாரம்….
சிலேடை வார்த்தைகளால்
பகடையாக்கினாய்
எங்கள் மனங்களை…

ஆலாபனை தூவி ஆராதித்தாய்
நற் குணங்களை…!!

“மின்மினிக்கெல்லாம் மேனி திருப்பினால்
கப்பல் எப்படி கரை போய் சேரும்”..

விண் மீன் பேரொளியில்
கரைசேர்ந்ததோ உன் கவிதைத் தேரும்….?!!!

சுயம்வரத்தால்
அரசியல் மேடைகளை
மோதிச் சென்றாய்…
கலைஞரின் நெஞ்சத்தை
தென்றலாய் நீ கோதிச் சென்றாய்!!!

கவியே..
கவி விரும்பும் வரியே
நதியே..
வைகை நதிக் கரையே..
தமிழே..
தமிழ் விரும்பும் சுவையே
விழியே…
நிறைகிறது எம் விழித்திரையே..

கட்டம்போட்ட கைலிக்குள்
சட்டம்போட்டு வாழ்ந்தாய்….
வெண்ணிற தாடிக்குள்
கண்ணியத்தைக் காவல்காத்தாய்.!!

பால்வீதியை பிடித்திழுத்து
புத்தகத்தில் ஓடவிட்டாய்..
முரண்களை அரண்களாக்கி
அனைவரையும் பாடவிட்டாய்!!

முச்சந்தி கவிஞர்களின்
முதல் முகவரியானாய்..
சொற்பந்தி வைத்து
கவிதைச் சுவைகளானாய்!!

கவிக்கூட்டில் கல்லெறிந்து
உன்னைக் கவர்ந்த
காலனுக்கு
இடித்துரைக்கிறேன்!!!!!

வீசிய பாசக்கயிறும் கவிபாடும்
காலனே….
உன்
இறுமாப்பும் பறந்தோடும்
மூடனே …!!

நீ பற்றியது கூட்டைத்தான்

நீ தேடிவந்த கவிஉயிர்
தமிழ் நெஞ்சங்களில்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது…

கனவிலும்
நெருங்க நினைக்காதே
எங்கள் கவிதையை…

கவிதையாய்
மாறிவிட்ட எங்கள்
பூ விதையை..!!

பாசக்கயிற்றில்
சிக்கிக் கொள்ள
கவிக்கோ
ஒன்றும் சாதாரணமல்ல ..

அவரை இழந்து
அழுதிருக்கும்
எங்கள் துயர்
“சாதா  ரணம் அல்ல”!!!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்