201605161457முகில்கள் மறைத்துக் கொண்டிருக்க, அதனூடே தனது ஒளிக் கீற்றை நுழைக்க, பகீரதப் பிரயத்தனம் செய்து, வெற்றியும் கண்ட சூரியன், வெளி மண்டலத்தில் தனது கதிர்களைப் பரவவிட்டுக் கொண்டிருந்தான். இளவேனில் காலந்தான் இது என்பதை, ஓரளவுக்காவது, பிரதிபலிப்பதாக இருந்தது.

அன்று இந்துக்களுக்கு ஒரு விசேட நாள். விரதம் இருப்பவர்கள், தமது துன்பங்களை கடவுளிடம் முறையிட வருபவர்கள், நண்பர்களை சந்திக்க வருபவர்கள், இப்படியாக எல்லா ரகத்தை சேர்ந்தவர்களாலும், பிள்ளையார் கோயில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் கூட்டமாக, நானும் சுமதியும் சேர்ந்து கொண்டோம்.

“அர்ச்சனை செய்ய துண்டு வாங்கிக் கொண்டு வாறன்” என்று சொல்லிவிட்டு சுமதி செல்ல, நான் பிள்ளையார் சந்நிதிக்கு முன்னால், நீளமாக போடப்பட்டிருந்த இரும்பு பாரிற்கு பின்னால் சற்று உரசிக்கொண்டு நின்று கொண்டிருந்தேன்.

தீபாராதனை முடிந்து, கையிலே கற்பூர ஜோதியுடன், ஐயர் வெளியே வந்து கொண்டிருந்தார். எல்லோரும் தமது கைகளை கவிழ்த்து, தீபத்தில் ஒத்தி, பின்னர் முகத்தில் ஒத்தி தமது பக்தியை விநாயகப் பெருமான் முன் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

கற்பூரத் தட்டை வாசற்படியில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, “பிள்ளையார் அர்ச்சனை செய்ய வேண்டியவர்கள் உங்கடை அர்ச்சனை துண்டுகளை இதிலை போடுங்கோ” என்று சொல்லிக்கொண்டே, ஒரு தாம்பாளத்துடன் வந்தார் ஐயர்.

“இதை உங்கடை கையாலை தட்டிலை போடுங்கோ” பின்னாலிருந்து சுமதி தட்டுவதை உணர்ந்து அர்ச்சனைத் துண்டை வாங்கினேன். நான் அதை தட்டில் போடப் போன போது ‘டக் டக்’ என்ற ஓசையுடன், இரண்டு மூன்று சில்லறைகள் தட்டில் விழ என்னையுமறியாமல், போட்டவரின் முகத்தை பார்க்கிறேன். ஒரு கணம் திகைப்பு மேலிட, சுதாகரித்துக் கொண்டு, பிள்ளையாரின் மூலஸ்த்தானத்தை மீண்டும் நோக்குகிறேன்.

அதே கூரான மூக்கு, செழிப்பான தோற்றம். இற்றைக்கு ஆறு, ஏழு வருடங்களுக்கு முன்னர் பார்த்த மாதிரியே, அப்படியே இருந்தாள். கண்களில் மட்டும் ஒரு இனம் புரியாத சோகம் இழையோடிக் கொண்டிருந்தது. அவள்தானா என்ற சந்தேகத்தை உறுதி செய்யும் நோக்குடன், மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன். சந்தேகமே இல்லை. சுபாவேதான்.

“சும்மா அங்கை இங்கை கண்களை அலைய விடாமல், சுவாமியை கும்பிடுங்கோ” சுமதி என்னை மென்மையாக கடிந்து கொள்ள, சுய நினைவுக்கு வருகிறேன். இந்த பெண்களே இப்படித்தான், கண்களுக்குள் எண்ணை விட்டுக்கொண்டு கணவனை நோட்டம் விட்டுக்கொண்டிருப்பார்கள் போலும்.

“இல்லை சுமதி! எனக்கு தெரிந்த ஒருத்தி முன்னாலை நிற்கிறா! அதுதான் பார்த்தநான்! விபரம் என்னென்று பிறகு சொல்லுறன், இப்ப எனக்கு நேரை, முன்னாலை, நீலச் சர்ட்யோடை நிக்கிற ஆளைப்பார்” என்று சொல்லி விட்டு திரும்புகிறேன். ‘வெடுக்’ என்று தலையை அசைத்து விட்டு, வேண்டா வெறுப்பாக அவளைப்பார்த்து விட்டு முகத்தை ‘உம்’ என்று வைத்துக் கொண்டு நின்று கொண்டாள் சுமதி.

அந்த முகத்தில் ஏதோ ஒரு ஏக்கம் தென்பட்டது எனக்கு வித்தியாசமாகப் பட்டது. பக்கத்தில் ஒரு சிறு பையன். அவளின் சேலைத்தலைப்பை பிடிப்பதும், பின்னர் அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் ஓடுவதும், வருவதுமாக நின்று கொண்டிருந்தான்.

” ‘பிரதீப்…!’ கவனம் விழுந்திடப் போறாய்! கிட்ட வந்து நில்!” அவள் அவனை அக்கறையோடு அதட்டுவதிலிருந்து, அந்தப் பையனுக்கும், இவளுக்கும் ஏதோ தொடர்பு இருப்பாதாக எனக்கு புரிந்தது.

“சொந்த மகனாக இருக்குமோ? ”

‘சுபா ஏதோ சோகத்தில் இருக்கிறாள்’ என்று என் மனம் உள்ளேயிருந்து சொல்லிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் நடுவிலே, எனக்கு திகைப்பைக் கொடுத்தது, அந்தப் பெரிய குறைதான். அத்தனை பெண்களுக்கு மத்தியில்… வெறுமையான நெற்றியுடன்…? அவள் திருமண மானவள் என்று எனக்கு தெரியும். அப்படியென்றால்.. அவள்..? ஓட இருந்த கற்பனைக்குதிரைக்கு கடிவாளம் போட்டு நிறுத்துகிறேன்.

சுமதியை விட்டு விசாரிக்கலாம் என நினைத்து, அவளது காதில் சொல்லி வைக்கிறேன்.

“அவவுக்கு என்ன பெயா; சொன்னீங்க?”

“சுபா..” எனது பதிலைக் கேட்டுக் கொண்டே சுபாவை நோக்கி நடந்தாள் சுமதி. கொஞ்சம் கொஞ்சமாக சனக்கூட்டம் குறையத் தொடங்கியது. பையனைக் கூட்டிக்கொண்டு, வாசலை நோக்கி போனவளை, சுமதி இடைமறித்தாள். நானும் பின் தொடாந்தேன்.

“மன்னிக்க வேணும்! உங்களோடை நாங்கள் கொஞ்சம் கதைக்க வேணும்!” சுமதி சொன்னதை சற்றும் எதிர்பாராதவளாக, விழித்துக் கொண்டு நின்றாள் சுபா.

என்னை அடையாளம் காண்பதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை சுபாவுக்கு. “ஓ! நீங்கள் ராஜ் இன்..” என்று இழுத்தவளுக்கு, “நான் இவரின் மனைவி” என்று பதிலளித்தாள் சுமதி.

ஒரே ஊரில், ஒரே பாடசாலையில் பல வருடங்களாக படித்தது எப்படி மறந்து போகும்? என்னை விட அவளுக்கு ஒரு வயது குறைவு. சிறு வயதில் ‘டபுள் புரமோசனில்’ அவள் வகுப்பொன்றை தாண்டியபோது, எனது வகுப்பில் சங்கமமானாள். எனக்கு தங்கை இல்லாத குறையை தீர்க்க வந்தவள், என்று சுருக்கமாக ஒரு அறிமுகம் கொடுக்கலாம்.

“பிரதீப்! இங்கை வா!” பிடியை விட்டு ஓட இருந்தவனை கூப்பிட்டு பக்கத்தில் அணைத்துக் கொண்டாள்.

“இந்தப் பையன்.?»” எனது சந்தேகத்திற்கு “எனது மகன் தான்” என்று பதிலளித்தாள்.

“ஏன் சுபா உங்கடை முகத்திலை பொட்டைக் காணேல்லை?”

நெற்றியைத் தடவிப் பார்த்தவள், “விழுந்திட்டுது போல” என்று சாதாரணமாக பதிலளித்தாள்.

“பிரபா வரேல்லையா?” அவளது கணவனைப் பற்றி முதற் தரமாக விசாரிக்கிறேன்.

“அவர் இப்ப என்னோடை இல்லை. பிரிந்திருக்கிறம்.»” வாயில் ஒரு வரட்டுச் சிரிப்புடன் பதில் அளித்தவளை, திகைப்புடனும், பச்சாதாபத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எங்கள் இருவருக்கும் வியப்பு. “எப்படி இவளால் சிரிக்க முடிகிறது?” எந்தளவுக்கு தொல்லைகள் இருந்திருந்தால், இவள் இந்த முடிவுக்கு வந்திருப்பாள் என்பது எனக்கு புரிய அதிக நேரம் எடுக்கவில்லை. கள்ளம் கபடம் இல்லாத இவளுக்கா இந்தக்கதி? நினைக்க வேதனையாக இருந்தது.

“சுபா! உங்கடை குடும்பத்திலை என்ன பிரச்சனை என்று நாங்கள் அறியலாமா?” நான் கேட்க இருந்ததை சுமதி கேட்க, அவள் விசாரிப்பதுதான் நல்லது என்று எனக்குப் பட்டது.

“சொல்வதிலை எனக்கு ஆட்சேபனை இல்லை, ஆனா சொல்லி என்ன ஆகப்போகிறது…?” சுபா இழுத்தாள்.

“எனக்கு வெடிங் நடந்தது ராஜ் அண்ணாவுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். கனடாவுக்கு வந்து பல வருடங்கள் ஆயிட்டுது. இரண்டு பேரும் வேலை செய்தோம். அன்பான குழந்தை, அமைதியான வாழ்க்கை. திடீரென்று அவருக்கு வேலைலே ஓய்வ் கொடுத்து விட்டார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் அவருக்கு வேலை கிடைக்கேல்லை. விரக்தி! கவலை! இன்னும் என்னென்ன இருக்குமோ அத்தனையும் அவரை தொற்றிக் கொண்டது.

‘நான் வேலை செய்கிறன்தானை! ஏன் யோசக்கிறியள்? வேலை கிடைக்காமலா போகப் போகுது.’ எனது ஆறுதல் அவருக்கு தாழ்வு மனப்பான்மையை கொடுத்திருக்கு. குடிக்கத் தொடங்கினார். பரவாயில்லை என்று விட்டிட்டன். இரவில் நேரத்திற்கு வர மாட்டார். நானும் பிள்ளையும் பயத்திலை நடுங்கிப் போய்விடுவம். நடுச்சாமத்தில் வந்து கதவைத்தட்டுவார். திறக்க கொஞ்சம் தாமதமானால் போதும், அவர் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகள் கேட்கப் பொறுக்காது. என்ரை குணத்திலை சந்தேகப்பட்டார். கேட்க கவலையும், அழுகையும் வரும். எப்படியோ பொறுத்துக் கொண்டிருந்தன்.

ம்…. ராஜ் அண்ணா..! என்ன செய்யலாமென்று ஒரு அக்காவிடம் ‘அட்வைஸ்’ கேட்டன். ‘விவாகரத்து!’ என்று அவ சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட போதும், அவ கூறிய காரணங்கள் அப்போது சரியாக பட்டது.

‘தங்கச்சி! உப்பிடியான ஆம்பளையோடை இருந்து மாளுறதை விட, தனிய இருந்து வாழலாம். இது பெண்களுக்கு சம உரிமை குடுக்கிற நாடு. நீ உழைக்கிறாய்! உன்னை ஒருத்தரும் ஒன்றும் செய்யேலாது’ பெண் சுதந்திரத்துக்கு இதுதான் விளக்கம் என்று நான் நினைத்த போது விவாகரத்தும் நடந்து முடிந்தது. அதுக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது, நான் செய்த தப்பு. ‘கடலில் தத்தளித்து வெளியில் வந்தவளை, வெள்ளம் அடித்துக் கொண்டு போனால்…’ அந்த மாதிரி நிலமை. பிரிவதற்கு புத்திமதி செய்தவர்கள் ஒருத்தரும் என்னோடை இல்லை. ஒரு விஷ பூச்சியைப் பார்ப்பது போல எல்லோரும் என்னை பார்த்தார்கள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் ‘பொல பொல’ வென விழுந்தது.

“சுபா! கவலைப்படாதீங்கோ! நான் இதற்கொரு வழி பார்க்கிறன்.” அவளைத் தேற்றி விடுகிறேன்.

“அதிகமான ஆம்பிளையள் ஒரே மாதிரித்தான் இருக்கினம். அவர்களை நாங்கள் தான் எங்கடை வழிக்கு கொண்டு வரவேணும்” சுமதி சொல்ல சுபா தொடர்ந்தாள்.

“அந்த ஆளுக்கு அடக்கி ஆண்டுதான் பழக்கம். சமத்துவம், சிநேககிதம் என்கின்ற பதங்களின் தார்ப்பாயம் அவருக்கு விளங்காது.”

“இருக்கட்டுமே சுபா! ஒரு இரவிலே திருத்தக் கூடிய விஷயங்கள் கூட எத்தனையோ இருக்கு!”

“நாய் வாலை நிமிர்த்த முயற்சி செய்யிறியள்” அவள் சொல்ல நான் தலையிடுகிறேன்.

“இல்லை சுபா! உங்களை சேர்த்து வைக்க எங்களாலை முடியும். பிரபா இப்ப ஒரு வெட்டிப் போட்ட மரம் மாதிரித்தான். நீ குடுத்த இடைவெளி அவரை நல்லா உணர வைத்திருக்கும். பெண்களுக்கு இருக்கிற மனத்தைரியம் ஆண்களுக்கு இல்லை சுபா! ஆண்களுக்கு உடல் பலம் தான் அதிகம். உனக்கு அவரோடு சேர விருப்பமா அதை சொல்லு!”

“ம்…” என்று சுரத்தில்லாமல் பதிலளித்தாள்.

அடுத்த நாள் பிரபாவை சந்திக்க அவனது வதிவிடத்துக்கு போனேன். நல்ல வசதியாக இருந்தான். ஆனால் பொருட்கள் மட்டும் ஒழுங்கற்ற விதத்தில் வைக்கப்பட்டிருந்தன. சாம்பிராணி வாசம் மூக்கைத்துளைக்க, ஒரு வரட்டுச்சிரிப்புடன் என்னை வரவேற்றான்.

“என்ன பிரபா நல்லா மெலிந்து விட்டீங்க போல இருக்கு!”

“மகனின் ஞபாகந்தான்” அவனின் பதிலில், மனதில் உள்ளவை பளிச்சென்று எனக்குத் புலப்பட்டது.

“அப்போ வீட்டு ஞாபகம் கொஞ்சமாவது இருக்கு” நான் வேண்டுமென்றே சீண்டினேன்.

“சும்மா வேதனையை தூண்டாதேங்கோ ராஜ்! அப்படி ஒரு நல்ல மனைவியை இழந்து நான் அனுபவிக்கிற துன்பம் போதாதா எனக்கு…”

நான் வந்த காரியம் இவ்வளவு இலகுவாக இருக்கும் என்று நான் கனவில் கூட எண்ணவில்லை. அவருடைய சம்மதத்தை நாசூக்காக கேட்டு வைக்கிறேன்.

“எனக்கு எந்த வித தடையும் இல்லை ராஜ்! சுபாதான் இதுக்கு ஒத்துக் கொள்ள மாட்டாள்.”

“இல்லை பிரபா! அவவுக்கும் சம்மதம். அதுதான் நான் இங்கை வந்தனான்” நான் உரைக்க பிரபாவின் முகத்தில் ஒரு பிரகாசம் ‘சட்’ என்று தோன்றியது.

அன்று பின்நேரமே, இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தோம்.

“பிரதீப்! அப்பாட்டை போ!” சுபா சொல்ல, தயங்கி தயங்கி அப்பாவிடம் போனான் அவர்களின் மகன். அவனை மார்போடு அணைத்துக் கொண்டான் பிரபா.

மனத்தில் ஏற்படும் பல மனக்கசப்புக்கள் தற்காலிகமான வெறும் கீறல்களே! “ஒருவரை ஒருவர் மனதால் அனுசரித்துக் கொண்டு வாழாத வரையில், கல்யாண மேடையில் வீற்றிருக்கும் சோடிகள் வெறும் நடிகர்கள்தான்.” எண்ணிக் கொண்டு விடை பெறுகிறேன்.


1 Comment

kowsy · மே 16, 2016 at 20 h 06 min

பிரிவின் போதே உறவின் பலம் புரியும். இப்படியான விடயங்களுக்கு நிச்சயம் புரிந்துணர்வுள்ள ஒரு உறவு அவசியம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..