தொடர் – 03
அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.
கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.
சவூதி அரேபியாவைப் பொறுத்த மட்டில் அப்பொழுது ஆண்களுக்கு உள்ள தொழில் என்றால் ஆடுகளையும் ஒட்டகங்களையும் பாலைவனங்களில் ஓட்டித் திரிவது தான் …
அங்கு சென்ற பலர் சொந்த நாட்டை மறந்து உறவுகளோடு வந்து இணைய முடியாமல் அங்கேயே அடிமையாக கிடந்து விடுகின்றனர். இன்னும் சிலர் விலாசமே தெரியாமல் தொலைந்தும் விடுகிறார்கள்.. இன்னும் சிலருடைய ஜனாஸாக்கள் தான் நாடு திரும்புகின்றன.
இப்படியான அயல் தேசத்து வாழ்க்கை குறித்த அவளுடைய கருத்துக்கு மாற்றமான கருத்துக்களோடும் கனவு களோடும் தான் அவன் றெக்கை கட்டிப் பறந்தான்.
தான் திரும்பி வரும் வரை அவளையும் அவள் குடும்பத்தினரையும் காத்திருக்கச் சொல்லி அடுத்த நாள் மறுதினம் அவன் தன் தாய் நாட்டையும் , கரம்பிடிப்பதாக வாக்குக் கொடுத்த கால அவகாசங்களையும் கடந்து சென்றது அவளது தாய்க்கு தாங்கொண்ணா வேதனைப் பாறையாக நெஞ்சை அடைத்துக் கொண்டது.
வைத்தியராக வேண்டும் என்ற கனவுகளோடு படிப்பை ஆரம்பித்து சாதாரண தரத்தில் அதிதிறமைச் சித்தி களுடன் உயர்தரத்தில் காலடி எடுத்து வைத்த சில நாட்களில் தான் அவளு டைய தாயை பெண் பார்க்கும் படலம் நடந்தேறி ஹாஷிமோடு அவள் நிச்சயிக்கப் பட்டிருந்தாள்.
தன்னுடைய கனவுக்குத் தடையாக வரப்போகும் கல்யாணத்தில் சிறிதளவும் விருப்பம் இல்லாமல் கல்வியையும் இடையில் கைவிட்டு விட்டு சரிந்து போய்க் கிடந்த அவளது தாயின் உள்ளத்தை உறவினர்கள் ஒவ்வொருவருமாக மாற்றி அமைத்து அதில் ஹாஷிம் மீதான நல்லெண்ணங்களை விதைத்தார்கள். ஒரு நல்லதுக்காக இன்னொரு நல்லதை இழந்து தான் ஆக வேண்டும் என்றால்… இது தான் விதி என்றால் அந்த விதியை தானும் மனநிறைவோடு ஏற்றுக் கொண்டாள்… அப்பொழுது இருந்தே ஹாஷிம் தான் தன் கணவனாக வரப் போகின்றவன் என்ற திடமான நம்பிக்கையோடு நேசம் வளர்த்தாள்.
அவனும் போன பின், அவனுடைய குடும்பத்தவர்கள் அவளை அடிக்கடி வந்து பார்க்க தவறவில்லை. அவளும் அவனுக் காக எதிர்பார்ப்புக்கள் சுமந்த வாழ்வோடு காத்திருந்தாள்.
இந்தத் தூரத்து நேசத்துக்குள் மூழ்கிப்போன மஹ்ஜபினுக்கு கஷ்வி னுடைய நேசம் மனத்திரையில் மின்னியது.
மனம் கஷ்வினுடைய பெயரைச் சொல்லித் துடித்தது…. அவளுக்குள்ளும் நேசம் துளிர்விடத் துவங்கியது… அப்படியே மஹ்ஜபின் தூங்கிப் போனாள்.
மறு நாள் காலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் கஷ்வினோடு வழமை யான நண்பர் கூட்டம் கதைத்துக் கொண்டிருந்த சில வார்த்தைகள்
அவளுடைய காதில் விழுந்தது… ‘‘டேய்.. நம்ம கஷ்வின் ஃபொரீன் போய் செட்லாவிடுவான்.. நம்மட இல்யாஸும் கனடா போறதா இருக்கான். மச்சான் பா(ர்)ட்டிய பெருசா போட்டு அசத்துறம்..’’
ஒரு கணம் அவ்விடத்திலேயே நின்றுவிட்டது மஹ்ஜபினின் உள்ளம். கஷ்வின் தனது முடிவைக் கேட்காமல் அவனே ஒரு முடிவுக்கு வந்து விட்டான் போல என ஒரு விரக்தி நிலையில் தத்தளித்தாள்.
கஷ்வினுக்கு வெளிநாடு செல்வது தான் நோக்கம் என்றிருக்கையில்.., அவளுக்கு படிப்பு முடிந்ததும் தனது தாய் நாட்டில் சேவையாற்றுவது இலட்சியமாக இருந்தது.. இரண்டுக்கும் இடையில் நூலிடையிட்ட காற்றாடி போலானாள் மஹ்ஜபின்…
ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு ‘‘டேய் மஹ்ஜபின் சொல்லப் போற அந்த ஒரு வார்த்தைல தான்டா என்ட மொத்த வாழ்க்கையும் இருக்கு.. அதுக்குள்ள எம்பிசனெல்லாம் எம்மாத்திரம்.’’
அவள் அவனை கடந்து சென்றதன் பின்னரா இதை அவன் கூற வேண்டும் விதி விளையாட ஆரம்பித்தால் யாரால் தான் அதனை மாற்றியெழுத முடியும்
பல கேள்விகளோடும் ஒரு வித பதற்றத்தோடும் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு படுக்கையறைக்குச் சென்றவள் சாலினியிடம் தன் மனதை முழுமையாக திறந்து கொட்டினாள்
மஹ்ஜபின் எதிலும் திடமாக முடி வெடுப்பவள். இந்த விடயத்தில் தட்டுத் தடுமாறி போவதை சாலினியால் தாங்கி க்கொள்ள முடியாமல் போனது
மறுநாள் தானே கஷ்வினிடம் சென்று ரீஸாவின் மனநிலையை கூறுவ தென முடிவெடுத்துக் கொண்டாள்… ‘‘நீ யோசிக்கிறத விடு நாளைக்கே ஒரு முடிவுக்கு வருவம்’’ எனக் கூறிக் கொண்டு கட்டிலைச் சரி செய்தாள் .
ஆனால் ரீஸாவுக்கு உயிர் வதை வதைத்துக் கொண்டே இருந்தது. மறுபடி யும் அந்த டயரியைத் தூக்கினாள். இந்ந டயரி தான் ஏறெடுத்தும் பார்க்காத கஷ் வினை அவளது உள்ளத்துள் நுழைவித்தது. இந்த டயரி தான் தனது எண்ணத்துக்குள் மாற்றத்தைக் கொண்டு வந்தது என அவள் எண்ணிக் கொண்டிருந்த வேளை சாலினி அவளிடம் ‘‘நான் ஒன்டு சொன்னா நீ கேப்பியா.. நாம போய் கஷ்வினுக்கிட்ட பேசிப்பாப்பமே..’’ கேட்டாள்.
‘‘இல்ல.. இதல்லாம் தேவல்ல. ஒரு நாள் வந்த எண்ணத்த இந்த ஒரு நாளோடயே குழி தோண்டி புதச்சிடுவம்.’’ பழய குருடி கதவ திறடி என்றது போல் இருந்தது சாலினிக்கு.அவள் அறிந்திருந்தாள் அவனைப் போல் ஒரு நல்லவன் மஹ்ஜபினுக்கு இனி எங்கு கிடைக்கப் போகிறான். அவள் ஒரு வார்த்தை சொன்னால் அவளுக்காக அவன் இலட்சியத்தை மட்டுமல்ல எல்லாவற்றையும் உதறித் தள்ளி விட்டு வருவான். என்பதையும். பற்பல தடவைகள் சாலினி ரீஸாவிடம் (மஹ்ஜபின்) சொல்லி முடித்தாள்.
அவளது தாயும் தந்தையும் நேசித் தார்கள் என்பதற்காக அவர்கள் என்ன பிரிந்தா போனார்கள் இதுவரையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதை மறுமுறை ஒரு தடவை அந்த டயரியை நினைவு படுத்தும் படி சாலினி கூறி முடித்தாள். இருந்தாலும் மஹ்ஜபின் இது எதையும் கேட்கும் பாடாய் இல்லை .
அவள் தனது உள்ளத்தையும் கடந்து தனது மார்க்கத்தை நினைவு கூர்ந்தாள். இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு அன்னிய ஆணும் பெண்ணும் பார்த்து காதல் கொண்டு ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டாடுவது முற்றாக தடுக்கப் பட்டிருக்கிறது. இது பாவங் களிலும் ஒன்று என அவள் அறிந்திருந்தாள். அதுபடியே அவள் இதுவரை தன் உள்ளத்தை யும் கற்பையும் கறைபடியாது பேணி வந்தாள்.
சில நொடிகளில் அவன் மீது வந்த சிறியதொரு ஈர்ப்பிற்காக தனது வரையறை களை உடைத்தெறிய முடியாது தனது கொள்கையில் நின்று தடம் மாற அவள் மனம் இடம் கொடுக்கவில்லை என்று பிடிவாதமாக அவள் சாலினியிடம் சொல்லி முடித்தாள்.
சாலினியும் இஸ்லாமிய மார்க்கத் தின் சில வரையறைகளை அறிந்து வைத்திருந்தாள். மஹ்ஜபின் சொல்வது போல் அன்னிய ஆண்களைப் பார்ப்பதும் காதல் என்று பேசுவது ஹராம் என்பது உண்மை தான். ஆனால் ஒருவருடைய விருப்பத்தைத் தெரிவிப்பது கூடும் தானே.. என சிந்தித்த சாலினி
‘‘சரி… நீ காதலிக்கயும் வேணாம்.. கஷ்வின பார்த்து பேசயும் வேணாம்… நான் பேசுறன்.. கஷ்வினுக்கிட்ட எல்லாத்தையும் எடுத்து சொல்றன்..அவனும் உன்ன மாதிரி தான அவன்ட விருப்பத்த சொல்லிட்டு உன்ட விருப்பத்துக்காக காத்துட்டு இருக்கானே தவிர ஒங்கட மார்க்க வரையறைகள அவன் ஒரு நாளும் மீறினது இல்லயே… ஒரே ஒரு தடவ தான் அவன்ட மனசுல இருந்த விருப்பத்த உன்கிட்ட சொல்லிட்டு போனான்… அதுக்கு பிறகு அவன் ஒன்ட முகத்த பார்த்து பேசினதோ பின்னால சுத்தினதோ கிடையாது… இந்தக் காலத்துல இப்படி ஒருத்தனானு நான் கூட பல தடவ யோசிச்சிருக்கன்…’’
‘‘அன்னைக்கே முடியாதுன்னு சொல்லிருந்தா எந்த பிரச்சினையும் இல்ல நிம்மதியா இருந்திருப்பேன்… எங்க என்ன சொல்ல விட்டான்… அவன் சொன்னதும் அடி வயிறு கலக்குற மாதி ஒரு உணர்வு.. பதட்டம் ஒருபக்கம் பயம் ஒருபக்கம் எல்லாமே இன்னைக்கு எனக்கு எதிரா மாறிக்கிட்டு நிக்குது பாரு ..’’
‘‘நீ எதையும் யோசிச்சு…அவசரப் பட்டு முடிவெடுக்காத…நான் அவனுக்கிட்ட சொல்லி உன்ட பேரன்ட்ஸ் கிட்ட பேசச் சொல்றன்… அவங்களும் சம்மதிப்பாங்க… நாளையோட யுனிவர்சிடி லைப் முடிய போகுது பேரன்ட்ஸ்ட சம்மதத்தோடயே மெரேஜ் பண்ணிக்கலாம்.. அத விட்டுட்டு மொத்தமா உனக்கு அமைய இருக்குற நல்ல வாழ்க்கைய வேணான்டு மட்டும் சொல்லாத… இதுக்கு உன்ட மார்க்கத்துல அனுமதி இருக்குத்தானே…’’
படபடத்த சாலினியினுடைய வார்த்தைகள் ஓய்வு பெற்றதும் ரீஸா பேச முடியாமல் மௌனியானாள்.
அவள் சொல்வதிலும் நியாயம் இருந்தது. மார்க்க வரையறைகளைத் தாண்டாமல் பெற்றோருடைய அனுமதியோடு அந்த உறவை ஹலாலாக்கிக் கொள்ள மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றது…
ரீஸாவும் கஷ்வினும் இது வரை ஹராமான உறவில் நுழையவில்லை… அவர்களுடைய தோற்றத்தைப் போலவே உள்ளமும் நடத்தையும் அழகாகவும் தூய்மையாகவும் இருந்தது…
அப்படியாகப்பட்ட இவர்கள் இரு வருடைய உறவும் ஹலாலாகத் தொடர்ந்தால் தான் எத்தனை அழகாய் இருக்கும்…
மார்க்க வரையறைகளை மீறாது பிரிவார்களா…? இணைவார்களா..?? இவர் களுடைய வாழ்க்கையில் இன்னும் எத்தனை சவால்களைச் சந்திக்கப் போகிறார்கள்…?
மாறிக் கொண்டிருக்கும் காலத் தோடு சேர்ந்து இவர்களும் மாறிப் போவார்களா…?
பல சுவாரஸ்யமான நிகழ்வுகளோடு தொடரும்