தனிக்குடித்தனம் கதை எண் 2பிரசவம் முடிந்து ஒரு மாதம் கழித்து இப்போதுதான் மனைவியையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். குழந்தை பிறந்தபோது பார்த்தது. ஒரு மாதம் பார்க்காமல் இருந்ததே மிகக் கொடுமையாகத்தான் இருந்தது. அந்த பிஞ்சு விரல்கள், எதையும் புதிதாக ஆர்வத்துடன் பார்க்கும் விழிகள். சிரிக்கும்போது குழிவிழும் கன்னங்கள். பார்க்கப் பார்க்க ஆசையாகத்தான் இருந்தது.

மனைவிக்கு பிரசவ வலி எடுப்பதாக சொல்லவும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். நானும் அவசரமாக விடுப்பு எடுத்துக் கொண்டுசென்றால், டாக்டர்கள், “இது பொய் வலி. வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க” என்க, என் மனைவிக்கு பயம். தலை பிரசவம் அல்லவா? “இல்லை நான் இங்கேயே இருக்கேன்”. என்றாள். அவள் பயப்படுவதைப் பார்த்ததும் அனைவரும் “சரி” என்றார்கள்.

இரண்டு நாட்கள் கழித்தே குழந்தை பிறந்தது. அதனால் விடுப்பு நாட்களையும் தாண்டி இருக்கும்படி ஆகிவிட்டது. குழந்தை பிறந்த மறுநாள் சொல்லிக் கொண்டு உடனே வேலைக்கு வந்துவிட்டேன்.

குழந்தையைஆசை தீர கொஞ்சிக் கொண்டிருந்தேன். அப்போது குழந்தை சிறுநீர் கழிக்க, “அய்யய்ய!” என்றவாறு மனைவியைக் கூப்பிட்டேன். மனைவி வேகமாக வந்து, “இப்ப என்ன உச்சா போய்ட்டான். அவ்வளவுதானே? இதுக்குப்போய் ஏன் முகத்தை சுழிக்கிறீங்க? என்னமோ கக்கா போன மாதிரி?” என்றாள். நான் என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றேன். பிரசவத்துக்குப் பிறகு இவள் ரொம்ப மாறிவிட்டிருப்பதை உணர்ந்தேன்.

குழந்தைக்கு துணி மாற்றிவிட்டு அவள் சென்ற சிறிது நேரத்தில் அவள் சொன்ன மாதிரி கக்கா போய்விட்டான். “சுந்தரி! நீ சொன்ன மாதிரி கக்காய் போய்ட்டான்” என்றேன். திரும்பவும் வந்து துணி மாற்றிச் சென்றாள். மணியாகிவிட்டதை உணர்ந்து அலுவலகத்துக்கு கிளம்பினேன்.

வேலை முடிந்ததும் எப்போதும் நண்பர்களையயல்லாம் சந்தித்துவிட்டு தாமதமாக வீடுவரும் நான், இன்று குழந்தையை கொஞ்சுவதற்காகவே அவசர அவசரமாக வந்து சேர்ந்தேன். மனைவி என்னை வித்தியாசமாகப் பார்த்தாள். இரவெல்லாம் குழந்தை அழுதபடியே இருந்தது. “என்னடி குழந்தை அழுதுகிட்டே இருக்கு” என்றேன்.

“இராத்திரியில் பிறந்த குழந்தை அப்படித்தான் இராத்திரி எல்லாம் முழிச்சிக்கிட்டிருக்கும். பகல்லதான் தூங்கும். நீங்க வேணும்னா ஹால்ல போய் தூங்குங்க. நான் பார்த்துக்கிறேன்” என்றாள். எனக்கு இது புதுத் தகவலாக இருந்தது. வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் ஹாலில் படுத்துக் கொண்டேன். ஆனாலும் குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. நான்கூட இராத்திரியில்தான் பிறந்தேன் என்று அம்மா சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது. அப்போ அம்மாவும் இப்படித்தான் கண் முழிச்சி கஷ்டப்பட்டிருப்பாளோ? சிந்தனைகள் எங்கெங்கோ சென்றது.

“மாசத்துக்கு ஒரு தடவையாது வந்து முகத்தை காண்பிச்சிட்டு போடா” அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இந்த வாரம் அம்மாவைப் போய்ப் பார்த்துவிட்டு வருவதுதான் முதல் வேலை என்று நினைத்துக் கொண்ட பிறகுதான் நிம்மதியாக தூக்கம் வந்தது.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..