மங்காப் புகழினை மனதில் இருத்திடும்
மாண்புடைச் செல்வமாம் மருமகள்  – வளம்
தங்கும்  நிலைதனைத் தந்தே  நிறுத்திடும்
தகைமை பொருந்திய திருமகள் !

எல்லோர்  உறவிலும் இருக்கும்  அன்பினை
இணைத்துக் கொடுப்பவள்  மருமகள்  – நாளை
நல்லோர் பரம்பரை நானிலம்  போற்றவே
நாளும் உழைத்திடும் பெருமகள் ! 

மாமியார் உறவினை தாயேன ஏற்றிடும்
மக்களில் இன்னுமோர் மகளவள்! – சீதனம்
சுமந்தவள் புக்ககம் வருகையில் அகந்தையை
செருப்பென மாற்றிடும்நல் குணத்தவள்!

சுட்டிடும் வார்த்தைகள் மனதெல்லாம் எரித்தினும்
சோகத்தை மறைத்துமே சிரிப்பாள் – கன்னம்
வழிந்திடும் நீரினில் காயங்கள் போக்கிடும்
வல்லமை படைத்துமே இருப்பாள் !

பாரங்கள் யாவையும் பூவேன மாற்றிடும்
பசுந்தளிர் மருமகள் என்பவள் – தினம்
வரம்தரும் தேவதை தலைமகள் என்று
வாழ்த்திடத் தகுதியாய் நிற்பவள் !

கத்தியாய் மாறியே இழிவுகள் யாதையும்
வெட்டியே வீழ்த்துவாள்  வென்றிட  –  தன்
குடும்பத்தின் காவலைக் குன்றாமல் ஏற்பாள்
குலக்கொடி மருமகள் என்றிட !