பல்லவி.
தாயுந்தன் வாசல்வரை வரவேண்டுமே!
தாயுந்தன் திருமுகத்தின் அருள்வேண்டுமே..!
காளிதேவி வடிவில் நின்றாய்..!
ஊழிக்காலத் துணையாய் வந்தாய்.!
(தாயுந்தான்….)
சரணம்.
அருள்மாரி வடிவாகி மருதாம் புலத்தரசி குருவாக எனையாள வரவேண்டுமே..
சிறப்பான தேரேறி சீர்பொலியும் அழகோடு
சித்திரத்தைப் போலவுன் உலாக்கோலமே ..
ஆதாரம் நீதானே அன்னையுன் சேய்நானே
உறவாகி என்றென்றும் இருபோதுமே…
பாராளும் உன்பார்வை பத்தினியின் அருள்லீலை
பாவங்கள் கரைந்தோடி விடவேண்டுமே..
எனையாளும் என் தாயே…எந்தன் ஏக்கங்கள் தீர்ப்பாயே…
(தாயுந்தன்….)
உலகெங்கும் பரந்தேகி உயர்வுக்கு வழிதேடும்…
எமையெல்லாம் நலன்காண வைப்பாயம்மா..
கருத்தோடும் பொருளோடும்
சுவையான சொல்லோடும்
விருத்தங்கள் பலபாடித் துதிப்போமம்மா..
சிறந்தோங்கும் பெருவாழ்வு பெற்றாலும்
உன்கோவில் மறக்காத
மதியென்றும் கொடுப்பாயம்மா..
மண்ணோடும் உன்னோடும்
நான் கொண்ட பற்றாலே
அன்னையுன் திருவாசல் உற்றேனம்மா..
எனையாளும் என் தாயே…
எந்தன் ஏக்கங்கள் தீர்ப்பாயே…
(தாயுந்தன்… )