மெரினா கடற்கரை மணலாய் நானும்
மாறிட வேண்டுமடி தோழி
மனதிற் கினிய அண்ணா கலைஞரை
மடியில் தாங்கிடடி.
விரிவான் கலைஞர் வெல்தோள் தன்னில்
விழுந்திடும் துண்டாவேன் தோழி
விடியல் தலைவர் மஞ்சள் துண்டென
மகிழ்ச்சிச் செண்டாவேன்.
கலைஞர் என்னும் கருப்படு பொருளின்
காலடிச் செருப்பாவேன் தோழி
கண்ணியன் அமர்ந்த சக்கர நாற்காலி
கைப்பிடி உறுப்பாவேன்.
அஞ்சுகம் முத்து வேலரின் மைந்தன்
அருந்தமிழ் உருவமடி அவர்
ஆற்றல் கண்டே அன்னைத் தமிழவள்
அடைந்தனள் கருவமடி.
அரசியல் களத்தில் அய்யன் கலைஞர்
அதிசய வாதியடி அவர்
ஆடிடும் காய்களின் அதிரடி நகர்த்தல்
அதுவும் சேதியடி.
திரைத்திசை தன்னில் தீப்பொறி பறக்க
திகைத்தேன் நானுமடி அதில்
தேனும் தென்றலும் சேர்ந்தது எப்படி
தெரியவே வேணுமடி.
கரகரப் பிரியா குரலில் மயங்கினேன்
காதல் பித்தமடி தோழி
கலைஞர் தமிழில் கற்றுத் தேர்ந்தேன்
கவிதை நித்தமடி.
குவளை மண்ணின் குழந்தை யவர்க்குக்
கொஞ்சிடும் முத்தமடி தோழி
கொள்கைக் கோமான் குருதியில் உறைந்தவர்
கூடுவார் சித்தமடி.
செம்மொழிச் செல்வரை செந்தமிழ் அறிஞரை
சேர்ந்திட வேணுமடி மனம்
சேவடிப் பற்றிச் சேவைகள் புரிந்திடக்
கனவுகள் காணுதடி.
சூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர்
மறைந்திட வில்லையடி அவர்
தொல்தமிழ் வடிவில் செந்தமிழ் நிலத்தில்
மணந்ததிடும் முல்லையடி.