பக்திப்பாடல்

மருதாம்புலத்தரசி

பல்லவி

இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி
மெய்யின் பொருளாகினாய்..அம்மா…!

கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி
சக்தி வடிவாகினாய்..அம்மா… !

மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா… !

கண்ணின் மணியாகி கருணை உருவாகி..
கேட்கும் வரமாகுவாய்..அம்மா….!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

சரணங்கள்

இலுப்பைமரம் அமர்ந்தவளே..
இயன்ற தெல்லாம் அருள்பவளே..!

கருப்பையின் குறைகளைந்து..
கதிசேர வைப்பவளே..!

வரும்பகையை துரத்திநின்று..
வாழ்க்கையினைத் தருபவளே..!

அருள் வேண்டி வருவோர்க்கு..
அருமருந்தாய் ஆனவளே…!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி….)

பொலிகையூரின் பேரெழிலே..
புலரும் பொழுதின் வானழகே..!

கலியுகத்தின் நாயகியே..
காத்திடுவாய் அருள்நிதியே ..!

நலிந்திடும் உந்தன் அடியவர்க்கு..
நலன்களை நீ வழங்கு..!

பொலிந்திடும் செல்வமெல்லாம்…
புகழுடன் நீ வழங்கு..!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

கும்பிடுவோர் குரல்கேட்டு..
குறை களைய வாருமம்மா..

வேப்பிலையின் வாசத்திலே..
வெருண்டோடும் வினைகளம்மா..

தீப்பொறியின் வடிவினிலே..
தீவினைகள் தீரு மம்மா..!

காப்பெடுத்து நோன்பிருந்தோம்..
காளி தேவி பாரும்மா..!

… மருதாம்புலத்து அரசி..
வலிமை கொடுக்கும் தேவி நீயே….
மனதால் நினைத்து உருக…
அருளைத் தருவாய் தேவி தாயே…

(இன்ப வடிவாகி…)

பாடல் வரிகள் : பொலிகையூர்க் கோகிலா.
பாடியவர் : என். ரகுநாதன்
இசை : இசைப்பிரியன்