இராமாயணம் வாசித்தவர்கள் அதில் பல காண்டங்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்…
அது போல இந்த இராவண காவியத் தில் மூன்று காண்டங்கள் தமிழ்போல.
த = தன்னிகரில்லா தமிழ்வேந்தனைப் பற்றி முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின் றார் எழுத்தாளர் ஸ்ரீமதி.
இராவணணைப் பற்றி இதுகாரம் பல புதினங்கள் வந்திருக்கின்றன குறிப்பாகச் சொன்னால் அசுரகாவியம் (வீழ்த்தப் பட்டவர்களின் வீர வரலாறு) அதையும் நான் வாசித்திருக்கிறேன். ஆனால் இக்காவியம் இராவணணைப் பற்றிய உண்மையான வரலாறாக நான் கருதுகிறேன்…
அம் மாவீரனின் பிறப்பை சுட்டிக் காட்டும் இடத்தில் இருந்தே இராவணன் பயணிக்கத்தொடங்கிவிட்டான் என்னோடு…
வஞ்சகத்தால் நாடிழந்து தன் தாய் சேசகியுடனும் தன் சகோதர சகோதரியுடனும் தன் தாய் நாட்டை விட்டு புறப்பட்ட அவன் சேற்றில் தன் பாதம் பதித்தது முதல் ஆய கலைகள் அனைத்தையும் கற்று இறுதியில் ஈசனின் பக்தனான அவன் அவனுடைய சந்திரவாளையே பெற்று…தன் நண்பனுக்காக முதல் யுத்தம் புரிகின்றான்… அதில் வெற்றியும் பெற்று தன் தாய் நாட்டை அடையும் வழியில் தமிழ் அரசி தாடகையுடன் நட்புறவு கொள்கின்றான்… தாடகை அப்பப்பா இராவணணுக்கு இணையான வீரத்தை வெளிப்படுத்தும் அவ்வரசியை விவரித்தவிதம் அருமை.
எவர் துணையும் இல்லாமல் தன் தேசத்தில் தன் பாதம் பதிக்கின்றான் இராவணன் அவனை எதிர்கொள்ள குபேரனனின் படைகள் இவனிடமிருப்பதோ சந்திரவாள் மட்டும் தான்.. எப்படி அம் மாபெரும் படையை இவன் எதிர் கொள்ளப்போகிறான் என்ற படபடப்பு ஏற்படும் நமக்கு.. அதை யுத்தம் செய்யாமல் தன் தேசத்தை எப்படி கைப்பற்றுகிறான் இலங்கை வேந்தன் என்பதை நம் கண்களின் முன் காட்டியிருப்பார்… அருமை.. அருமை…
இராவணணுக்கும் மண்டோதரிக்குமான முதல் சந்திப்பு தமிழின் உச்ச விளையாட்டு தன் எழுத்துகளினால் மனதை உருக்கியிப்பார்… அட்டகாசம்.. அட்டகாசம்…
தன் தேசத்திற்காகவும் தன் உறவு களுக்காகவும் இராவணன் எடுக்கும் சிரத்தைகள் அம்மன்னவனை நம் கண்முண்ணே காட்டியிருப்பார். (இப்படித்தான் இலங்கை வேந்தன் வாழ்ந்திருப்பானோ என்று நினைக்கத் தோன்றுமளவிற்கு நீதி, நேர்மை, நியாயம் வழுவாத அரசனாக) அதிலும் பவித்திரையின் அறிமுகம் ஆர்ப்பரிக்கும் வசனங்கள் தெறிக்குமிடம் அவளையே தன் ஒற்றனாக நியமித்து இறுதியில் அதே ஆர்ப்பரிக்கும் ஓசையோடு அவள் மாண்டுபோகும் இடம் கண்களை குளம் ஆக்கிவிட்டது.
பவித்திரை பேருக் கேற்றாற்போல் பவித்தரையாக வாழ்ந்து மாண்டுபோனால்…
மேகநாதன் அவனின் பிறப்பும் வளர்ப்பும் அவனின் காதலும் நயம்பட நடக்கும் சுவாரசியமான இடங்கள்… வாலிக்கும் இராவணணுக்கும் யுத்தம் நம் கண்களை விட்டு அகலாது…
தன் தாய் சேசகியின் திதி தினத்தில் பதினாறு பிண்டங்களை நதியில் விடும் போது ஒவ்வொரு பிண்டத்திற்கும் தன் தாயின் புகழ் பாடி இராவணன் கதறும் இடம் நம்மையும் கதறவைத்தது..
இறுதியாக தன் தங்கையின் நாசியும், முலையும் எதற்காக அரியப்பட்டது என்பதை அறிய செல்லுமிடத்தில் சீதையைக் கண்டு அவளின் கதையைக் கேட்டு மரத்தில் சாய்ந்தபடி இலட்சுமணன் கிழித்த கோட்டிற்கு இப்புறமாக இராவணன் அமரும் போது… நம் கண்கள் தானாக குளம் ஆகும். ஆம் ஒரு ஒப்பற்ற மன்னனாக அவனின் நற்குணங்களை இதுநாள்வரை இவ் வளவு விரிவாக யாரும் எழுதியதில்லை.இராவணன் தமிழின் மன்னவன், தமிழின் மூத்தவன் அப்படியிக்க அவன் நல்லவன் தான் அதில் மாற்றமில்லை. அதை தன் எழுத்துகளால் நிரப்பிவிட்டார் எழுத்தாளர் முதல் பாகம் இப்படியாக முடிவடைகிறது..
மி=மிதிலையின் மருமகன் இராமன் அவனை பற்றிய கதை சீதை சொல்ல ஆரம்பமாகிறது.
இதுநாள் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று படித் திருப்போம்… ஆனால் அதற்கான சூழ் நிலையை அழகுறவிவரித்த விதம் யாரும் யோசித்திராத களம் அமர்க்களம் அவ்விடம்…
இராமரைப்பற்றியும் அவரின் வாழ்வில் நடந்ததைப் பற்றியும் நாம் அனைவரும் அறிவோம்… அச்சம்பவங் களில் தனக்குத் தேவையானவற்றை எடுத்து தன் தமிழால் அழகுற எழுத்தாளர் எழுதிய விதம் அருமை… சீதை ஒரு அற்புத பிறப்பு அதை பல இடங்களில் வித்தியாசமான முறையில் எழுதியுள்ளார் ஏன் இராமனையும் விட்டுவைக்கவில்லை…இங்கு நாம் கடவுளாக இராமரையும் இராவணனையும் வணங்குகிறோம் ஆனால் அவர்களை சாதாரண மனிதர்களாக அவர்களின் செயல்களிலிருந்தே நமக்கு காட்டியவிதம்… அருமை.
அதிலும் இராவணன் எதற்காக தனித்திருந்த சீதையை தன் தேசத்திற்கு கொண்டுவந்தான் என்பதை விளக்கியவிதம் யாரும் யோசித்திராதகளம்… உண்மையில் அப்படித்தான் நடந்திருக்குமோ…
ழ்=இறுதியில் யுத்த காண்டம் இதில் தான் ஆரிய.. தமிழ் பிரச்சினை வருகின்றது அவர்கள் செய்யும் யுத்தம் அதற்கு உபயோகப்படுத்தப்படும் கருவிகள்…
தமிழர்கள் யுத்த்தில் செயல்படும் விதம் அவர்களின் கருவிகள் போர் நெறி முறைகள் இதுதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றது.
மேகநாதனின் போர்வியூகங்களும் தந்திரங்களும் அருமை.
வீசீபன் என்ற கதாபாத்திரம் மட்டும் அக்காலத்தில் இல்லாமல் இருந்திருந்தால் கதையே மாறியிருக்கும். அதனால்தானோ அவருக்கு கோடாரிக் காம்பு என்ற பெயர்?.
இறுதிவரை சீதைக்கு களங்கம் விளைவிக்காமல் அதை சீதையும் உணர்ந்து கொண்ட விதம் அருமை.
துரோகத்தால் வீழ்த்தப்பட்டது இராவணனின் வீரம் அதை மெய்ப்பித்த புதினம். எவ்விடத்திலும் இராமனை தீயவனாக காட்டாமல் அதே சமயம் இராவணனையும் நெறி பிறழாதவனாக காட்டிய விதம் அட்டகாசம்.
இராவணனின் மென்மையான உண்மையான மறுபக்கத்தை காட்டும் புதினம் வெய்யோனின் வேந்தன்…
நல்வாழ்த்துகள் எழுத்தாளர் ஸ்ரீமதிக்கு இப்படியொரு புதினம் கத்திமேல் நடப்பது போல… அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.
வாழ்த்துகள்!
சீதை பதிப்பகம், சென்னை
பக்கங்கள் 584
விலை 600 /- ரூபாய்
தொடர்புகளுக்கு…
கௌரா ஏஜென்ஸீஸ், சென்னை
e-mail : gowra09@gmail.com