ஹைக்கூ
ஷர்ஜிலா ஃபர்வின்
மழைத்துளிகளை
சுமந்து கொண்டிருக்கும்
கார்காலச் சிலந்தி வலை.
இலையுதிர்காலக் கிளை
தண்டுகளெல்லாம் மின்னுகிறது
வைகறைப் பனி.
வானத்தில் நாற்று நட
கால்களைப் கவ்விப் பிடிக்கும்
சேற்று வயல்.
நனைந்த சாளரக்கம்பிகளில்
தொங்கும் அரை நீள்வட்டகளுக்குள்
முன்பனிச் சூரியன்கள்.
பாய்மரப்படகு
பயணம் செய்கிறது
இளைப்பாரும் பறவை.
மரத்தின் மேல் நீந்த
குளத்தில் விலகிச் செல்கிறது
நிலவு
அஸ்தமனமாகும்
சூரியனை கூறு போடும்
மரக்கிளை
தொங்கும் மழைத்துளி
வடிந்து விட போகின்றது
சூரியன்
சூரியனை
சுமந்து கொண்டு
மழைக்கால இலை
தடையுத்தரவுக்
காலத்தறியில் புதிதாய் நெய்த
சிலந்தி வலை
சாளரக் கம்பிகளுக்கிடையே
பாதி தான் தெரிகிறது
தெருவோரம் பூத்த மலர்
மூங்கில் காட்டிற்குள்
இடைவெளி தேடியலையும்
சூரிய ஓளி
சிறகுகளை படபடக்க
மறந்து விடுகிறதுதேனருந்தும் பட்டாம்பூச்சி
மழைக்கால
மின்கம்பிகளில் நீர் குடிக்கின்றன
சிட்டுக் குருவிகள்
தரைக்கு மேல் வேர்கள்
நீண்டு படர்ந்திருக்கின்றன
இளையுதிர்ந்த மரத்தின் நிழல்
இலையுதிர்ந்த மரத்தில்
குறுக்கும் நெடுக்குமாக
சிலுவைகள்
காற்றுக் குமிழுக்குள்
சிறைப்பட்டும் வானில் பறக்கிறது
கோள வானவில்
நுரைப்பூக்களை அள்ளுகிறேன்
கைகளுக்குள் சிக்குகிறது
கடல்
எரிந்த காட்டின் கதையை
தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறது
கூடிழந்த பறவையின் இறகு
அடித்த காற்றில்
கொஞ்சமும் நகரவேயில்லை
பதிந்த இலையின் தடம்
12 Comments