மேலேயுள்ள ஹைக்கூ திண்ணை 9  இதழின் முகப்புப் பக்கத்தை
சுட்டியால் தட்டி அல்லது டச் செய்து இதழினை தரவிறக்கம் செய்து படிக்கவும்.

வாசம் புதிது வண்ணம் புதிது

மு.முருகேஷ்

தமிழ்ப் பண்பாட்டு நடைமுறைகளில் பானம் அருந்துதல், தாம்பூலம் தரித்தல், ஒன்று சேர்ந்து உணவு உட்கொள்ளுதல் போன்றவை இருப்பதைப் போலவே, ஜப்பானும் தேநீர் விருந்தினைத் தனக்கான மரபாக்கிக் கொண்டது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் சீனாவில் தேநீர் அருந்தும் வழக்கம் தொடங்கி, ஹிய்யான் காலத்தில் ஜப்பானுக்கு அறிமுகமானது. ‘தேநீர்ப் பண்பாட்டின் தந்தை’ என அழைக்கப்பட்ட ஜப்பானிய ஜென் குரு இசாய் (கி.பி.1141-1215) தேயிலையை மூலிகையெனக் கருதி, அதன் மருத்துவக் குணங்களை நூலாக எழுதினார். ஜென் குருவான தாகுவான் (கி.பி.1573-1645), தேநீர்க் கோட்டை உருவாக்கினார். அதில் – ‘தேநீர் முதல் கோப்பை, தொண்டையையும் உதடுகளையும் நனைக்கும்; இரண்டாவது கோப்பை, தனிமையைக் கலைக்கும்; மூன்றாவது கோப்பை ஆழ்மனத்தைத் தொடும்’ என்று கவித்துவத்தோடு குறிப்பிட்டார்.

இந்தத் தேநீர்க் கோட்பாட்டினை ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். 7 வரிகளும், அதற்கும் மேற்பட்ட வரிகளும் கொண்ட தொடர் கவிதையாகப் பல கவிஞர்கள் சேர்ந்தெழுதிய ஜப்பானிய மரபுக் கவிதைகளே, காலப்போக்கில் மூன்று வரி ஹைக்கூ கவிதைகளாகின. ஜப்பானிய பல்கலைக் கழகங்களில் பணி செய்த அமெரிக்க பேராசிரியர்கள், ஹைக்கூ கவிதைகளில் மனதைப் பறிகொடுத்து, அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். அதன்பின்னரே உலகின் திசைகளைத் தனது சின்னச் சிறகுகளால் அளக்கத் தொடங்கின… ஹைக்கூ கவிதைகள்.

வங்கக் கவி தாகூரால் வங்க மொழியிலும், மகாகவி பாரதியால் தமிழுக்கும் ஜப்பானிய ஹைக்கூ அறிமுகமானது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான். ஜப்பானிய ஹைக்கூவின் கவித்துவத்தையும், செறிவான மொழிநடையையும் பாரதி வியந்து பாராட்டினார். பாறையிடுக்கினில் விழுந்துவிட்ட விதை போலவே, பல்லாண்டுகளுக்குப் பிறகே தமிழ் நிலத்தில் ஹைக்கூ வேர் பிடித்தது. இன்று தமிழில் ஹைக்கூ என்றால் படிக்கிற – படைக்கிற அனைவரும் அறிவர்.

எழுத்தாளர் சுஜாதா, கவிஞர் சி.மணி, பேராசிரியர் சந்திரலேகா ஆகியோரது மொழிபெயர்ப்பின் வழியேயும், கவிக்கோ அப்துல்ரகுமான், அமுதபாரதி, அறிவுமதி, கழனியூரன், ஈரோடு தமிழன்பன், எ.மு.ராசன், மித்ரா ஆகியோரின் நேரடியான தமிழ் கவிதைகளாலும் தமிழ் மண்ணில் ஹைக்கூ நிலைபெறத் தொடங்கியது. இந்திய மொழிகள் பலவற்றிலும் ஹைக்கூ எழுதப்பட்டாலும், தமிழில்தான் ஹைக்கூ இதழ்கள், ஹைக்கூ குறும்படம், ஹைக்கூ டைரி, ஹைக்கூ காலண்டர், ஹைக்கூ கவியரங்கம், ஹைக்கூ ஆய் வரங்கம், ஹைக்கூ திருவிழாக்கள் எனவாழ்வியலோடு இணைந்த கவிதைச் செயல்பாடுகளாக ஹைக்கூ பரிணமித்தது. இன்றைக்கு தமிழ் ஹைக்கூ உலக ஹைக்கூ கவிதைகளோடு போட்டிப்போடும் தரத்தில் படைக்கப்படுகிறது என்கிற பெருமையை அடைந்துள்ள போதிலும், ஹைக்கூ பற்றிய போதிய வாசிப்பும், புரிதலும் இல்லாமல் அவசர பிரசவங்களாக நிகழும் ஹைக்கூ படைப்புகளும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

வீசும் காலக்காற்றில் மண்ணில் ஆழமாக வேர்ப்பிடித்து நிற்கும் படைப்புகளே நின்று நிலைத்திருக்கும். தூசிகளும் சருகுகளும் கலைந்தோடி மறைந்துவிடும். தமிழில் நம்பிக்கை மிளிரும் ஹைக்கூ கவிதைகளைப் படைப்பதன் மூலமாகவும், அத்தகைய கவிதைகளைப் பலரும் அறியும் வண்ணமாகக் கொண்டு செல்வதோடு, பிற மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய வேண்டியது இன்றைய காலத்தின் அவசிய தேவை.

மோ.கோ.கோவைமணி, மித்ரா, இரா.சுப்பராயலு, அமரன், கா.ந.கல்யாண சுந்தரம், வா.மு.சே.ஆண்டவர், ஜீவிதன் எஸ்.சேசுராசா, கவிமுகில், இரா.இரவி, தங்கம் மூர்த்தி,வதிலை பிரபா, சுடர் முருகையா, மரியதெரசா ஆகியோரின் ஹைக்கூ கவிதைகள் ஆங்கிலத்திலும், மு.முருகேஷின் ஹைக்கூ கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி, தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு, நூல்களாகவும் வெளிவந்துள்ளன. தமிழில் தற்போது ஹைக்கூ எழுதிக்கொண்டிருக்கும் ஹைக்கூ கவிஞர்களின் எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தாண்டும். என்றாலும் ஹைக்கூவை உணர்ந்து, உள்வாங்கி, செறிவோடு படைப்பவர்கள் சில நூறு பேரே.

‘நினைக்கும் போதெல்லாம்
மலரஞ்சலி செய்கிறது
கல்லறையோர மரம்’.

– எனும் கவிஞர் ஆரூர் தமிழ்நாடனின் கல்லறையிலும் பூக்கும் உயிர்நேயச் உயர்சிந்தனையும்,

‘பறவைச் சிறகசைப்பு
வானத்தைக் கிட்டே வரச்சொல்லி
அழைக்கும் குழந்தை’.

– என்கிற எஸ்.சங்கரநாராயணனின் அன்பில் நெகிழ்ந்த அழைப்பும்,

‘தற்கொலை செய்துகொள்ள மனமில்லை
கிணற்றில்
நிலவைப் பார்த்த பிறகு’.

– என நம்பிக்கை வழியே நம்மை மீட்டெடுக்கும் என லிங்குசாமியின் கவிதையும்,

‘காற்றில் ஆடியபடி வந்து
கூரைமேல் விழுந்ததும்
இசைக்கிறது மழை’.

– என்ற குமார் சேகரனின் ஹைக்கூவும் தமிழ் ஹைக்கூ

இவை என்று சொல்லிப் பெருமைப்படத்தக்க கவிதை களாக உள்ளன. கவிதைகளை வாசித்துவிட்டு, வாசகன் கடந்துபோய் விடக்கூடும். ஆனால், ஹைக்கூ அப்படி இருக்கக் கூடாது. படித்த வாசகனின் விரல் பிடித்து கூடவே
பயணிக்க வேண்டும். வாசகன் மன ஊஞ்சலில் உடனமர்ந்து, வாசகனுக்குள் அந்தக் காட்சியை மீண்டும் மீண்டும் எழுப்பிக் கொண்டேயிருக்க வேண்டும். ஆகச் சிறந்த ஹைக்கூவெனில், வாசகனையும் எழுத வைக்க வேண்டும். அப்படியான ஹைக்கூ கவிதைகளும் தமிழில் உண்டு.

‘பட்டிக்குள் அடையும்
கடைசி ஆட்டின் முதுகில்
செல்லமாய் ஒரு தட்டு’.
– ராஜிலா ரிஸ்வான்

இந்தக் ஹைக்கூவை எல்லோராலும் எழுதிவிட முடியாது. நுட்பமான பார்வையும், கூர்ந்த அவதானிப்பும் இருக்க வேண்டும். எல்லாவற்றிகும் மேலாக கடைசி ஆடு பட்டியில் அடையும்வரை நின்று நிதானமாக ரசிப்பவரின் கண்களுக்கே இந்தக் காட்சி வசப்படும்.

‘திடுக்கிட்டு விழிக்கிறான்
கனவில் அறுவடை
நிலமிழந்தவனின் இரவு’.
– க.அம்சப்ரியா

இழப்பின் வலி எப்படிப்பட்டதாக இருக்குமென்று உணர்ந்தவனிடமிருந்தும், உணர முயற்சிப்பவனிடமிருந்துமே இந்த ஹைக்கூ உயிர்த்தெழ முடியும்.

‘மின்சாரம் நின்றதும்
ஆழமாக உணர முடிந்தது
பெய்யும் மழையை’.
– கவி.விஜய்

வெயிலடிக்கும்போது வெயிலைப் பார்ப்பதும், மழை பெய்கையில் மழை பார்ப்பதும் வெகுஇயல்பாக நடக்கக் கூடியவை. ஆனாலும், இங்கு எது அதனதன் இயல்பில் நடக்கிறது..? வெயிலைக் கண்டு வீட்டுக்குள் பதுங்குவதும், மழை வந்ததும் குடையைத் தேடுவதுமே வழக்கமாகிபோன நம் வாழ்வில், இந்த ஹைக்கூ நமக்குப் புதிதாக ஒன்றினைக் கற்றுத் தருகிறது.

தமிழில் எழுதும் ஹைக்கூ கவிஞர்களில் எல்லாக் கவிஞர்களுமே எனக்குப் பிடித்த / நான் விடாது வாசித்து வருகிற கவிஞர்களே. ஒவ்வொருவரிடமிருந்தும் ஏதாவது ஒரு கவிதையை என் மன உண்டியலில் எடுத்து சேமித்து வருகிறேன். இந்தக் கவிஞரா, அந்தக் குழுவில் இருக்கிறாரா… என்கிற பேதங்கள் எதுவும் எனக்கோ, என் வாசிப்பிற்கோ கிடையாது. கிடைத்ததைப் படிக்கிறேன். பலவற்றை தேடிக்கண்டெடுத்தும் வாசிக்கிறேன். மனசுக்கு நெருக்கமாக வந்தால் இளையவரா, மூத்தவரா என்கிற பாகுபாடில்லாமல் பாராட்டினையும் மகிழ்ச்சியினையும் பகிர்ந்து கொள்கிறேன்.

‘இதெல்லாம் ஹைக்கூவா..?’ என்று சில ஆரம்பகால ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகளை முன்வைத்து என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்குச் சொல்வேன். “ஆமாம்; ஹைக்கூ தான். ஆரம்பகால அரும்புகள் இவை. முளையிலேயே கிள்ளி விடாதீர்கள். வரும் காலங்களில் இன்னும் வாசமிக்க ஹைக்கூ மலர்கள் மலரவிருப்பது இந்த காம்பிலிருந்துதான். உங்கள் உயரங்களில் இருந்துகொண்டு கீழிருப்பவரைக் குனிந்து பார்த்து ஏளனம் செய்ய வேண்டாம். அவரவர் உயரம்; அவரவர் இலக்கு. வாசிக்க வாசிக்க ஹைக்கூ புரிபடும். எழுத எழுத கைகூடும்”. தொடக்கத்தில் தமிழில் ஹைக்கூ எழுதவே முடியாது என்று ஆருடம் கணித்தார்கள். பலரும் முயன்று எழுதியதும், ‘ஹைக்கூவில் இவையெல்லாம் கூடாது’ என புதிய துலாக்கோலினைத் தூக்கிப் பிடித்தார்கள். ஜப்பானிய ஹைக்கூவிலும் இவை உண்டே… என்றதும், கேளாக்காதினராய் மவுனித்தனர். இதோ… நூற்றாண்டுகளைக் கடந்தும் பூத்துக்குலுங்கும் தமிழ் ஹைக்கூவில் ‘வாசம் புதிது; வண்ணம் புதிது; வனப்பு புதிது’ என புதியவை நிரம்பிக் கிடக்கின்றன.

மகாகவி பாரதியின் கைப்பிடித்து நடக்கும் ஓராயிரம் இளைய பாரதிகளின் கம்பீரமான நடையில், உலக ஹைக்கூ கவிதைகளின் உயரத்தில் தமிழ் ஹைக்கூவும் உயர்ந்து வருகின்றன. நாளை உலகு திரும்பிப் பார்க்கும் தமிழ் ஹைக்கூவை, இன்றே நாம் வாரியணைத்து வளர்த்தெடுப்போம்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »