மின்னிதழ் / நேர்காணல்

புன்னகையை மென்னகையால் கொண்டு யாவரையும் வசீகரிப்பவர். அவர் பன்முகப்படைப்பாளி. பள்ளி ஆசிரியர், ஓவியர், கவிஞர், பேச்சாளர், சமூகநல உபகாரி இப்படி அடக்கத்துடன் ஒளிர்ந்து நிற்பவர். அடக்கமும் அயராது உழைப்புமாக பரிணமிக்கும் இவர் பல நூல்களைத் தமிழுழகிற்கு தந்தவர். கவியரங்கில் கணீரெனக் கவிபாடி திகைக்கச் செய்பவர். ஆற்றல்மிகு திறமையால் அரங்கில் நடுவராவும் தலைமைதாங்கி சிறப்பிக்கும் வல்லமை பெற்றவர். இவரை தமிழ்நெஞ்சம் நேர்காணல் செய்து மகிழ்வு கொள்கிறது.

வாசகர்களே வாருங்கள் சிறிது நேரம் முனைவருடன் பயணிப்போம்.

கேள்விக்கணை தொடுப்பாளர் : தமிழமின்

ஜூன் 2021 இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேலுள்ள இதழ் அட்டைப்படத்தில் கிளிக் செய்யவும்

உங்கள் குடும்பம் பற்றிய அறி முகத்துடன் துவங்குவோமா?

என் தந்தை வேமுகி என்ற வே.முத்துகிருஷ்ணன். விருதுநகரில் இரயில்வே யில் அதிகாரி. கவிஞர். எழுத்தாளர். பேச்சாளர். சமூக சேவகர். தாய் இராதா. இருவரும் இப்போது இல்லை. ஆறு குழந்தைகளில் மூத்தவளாக செல்வாக்குடனும் தைரியமாகவும் வளர்க்கப்பட்டேன். மற்ற சகோதர சகோதரிகள் சிறப்பாக உள்ளனர். என் கணவர் இரா.இராஜன். தனியார் துறையில் ஓய்வு பெற்றவர். என் இலக்கியப் பயணத்தின் இணையாக, உறுதுணையாக உள்ளார்.

உங்கள் பள்ளிப்பருவ சுவாரசிய மான நிகழ்வு ஏதேனும் நினைவிருக்கிறதா?

பள்ளிப்பருவம் இனிமையான பட்டாம்பூச்சி காலம். நான் கூறும் அனுபவம் உங்களுக்கு புதிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னை முதன்முதலில் முதல் வகுப்பில் சேர்த்த கொண்டாட்டம் தான் அது. அப்போதெல்லாம் ஐந்து வயது முடிந்த பின் தான் பள்ளியில் சேர்ப்பார்கள். இன்று போல கேஜி க்களும் இல்லை. மூன்று வயதுக் கொடுமைகளும் இல்லை. இராமநாதபுரத்தில், குதிரை வண்டியில் பட்டுத் துணி விரித்து அமரச்செய்து, குதிரை வண்டிக்கு முன்பும் பின்பும் நாதஸ்வரம், கெட்டி மேளம் முழங்க என் பெற்றோர்கள், உறவினர்கள் ஊர்வலமாய் சரஸ்வதி கோவிலுக்கு அழைத்துச் சென்று சரஸ்வதிதேவி சிலையின் முன் அமரவைத்து நெல்லில், சர்க்கரையில், தானியங்களில் என் கைப்பிடித்து எழுத வைத்து பின் அதே ஊர்வலம் அங்குள்ள அரசு பள்ளியில் கொண்டு சேர்த்த நிகழ்வு இன்னும் என் நினைவில் இருக்கிறது. நான் வளர வளர இந்நிகழ்வை அடிக்கடி கூறி பெருமைப்படுவார் என் பெற்றோர்களும், உறவினர்களும். அதனால் என் மனதில் இந்நிகழ்வு மறக்கமுடியாத ஓவியமாக பதிந்துவிட்டது. அதன்பின் பள்ளி கல்லூரி வாழ்க்கை முடிந்து திருமணமாகி ஓசூர் வந்து ஆசிரியராகி இன்று பணி நிறைவு பெற்ற பின்பும் இந்த நினைவு மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது படமாக.

தம்பதியர் இரா. இராசன் - மணிமேகலை

அருமையான அனுபவம். உங்க ளுக்கு கவிதை எழுத ஆர்வம் எந்த வயதில் தோன்றியது?

என் தந்தை சிறந்த மேடைப் பேச்சாளர், கவிஞர். விருதுநகர் இரயில்வே துறையில் உயர் பணியில் இருந்தார். அவர் எழுதும் கவிதைகளை சிறுவயதிலிருந்தே படித்துப் படித்து என்னை அறியாமல் ஏதேனும் எழுத வேண்டும் என்று எண்ணி வாழ்த்துக் கவிதை, இயற்கை, பள்ளி, ஆசிரியர்கள் பற்றி விளையாட்டாக எழுத ஆரம்பித்தேன். ஆனால் என் முதல் விருப்பம் ஓவியம் வரைவது. அவ்வப்போது கவிதை எழுதுவதோடு சரி. ஆசிரியர் பணியில் சேர்ந்து மாணவர்களுடன் பழகும் போது அவர்களை ஊக்கப்படுத்த தொடர்ந்து எழுத நானும் கவிஞரானேன்.

பன்னாட்டுத் தமிழர் நடுவம், அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா அரங்கில் கவிஞர்

நீங்கள் வரைந்த ஓவியங்கள் பற்றி கூற முடியுமா?

எங்கும் கற்றுக்கொள்ள வசதி இன்றி, நானே எனக்கு தெரிந்த அளவு பல ஓவியங்கள் வரைந்துள்ளேன். அதில் மிக சிறப்பானது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வரைந்ததுதான். பள்ளி இறுதி வகுப்பு படிக்கையில் ஒரு சாதாரணத் தாளில் சிவாஜி கணேசன் அவர்களை வரைந்து வைத்திருந்தேன். அவர் விருதுநகர் வழியாக சபரிமலைக்கு இரயிலில் செல்கிறார் என்று கேள்விப் பட்டதும் நானும் என் தம்பியும் இரயில் நிலையம் சென்று அவர் எந்த பெட்டியில் அமர்ந்து இருக்கிறார் என்று தேடி ஓடிச்சென்று நான் வரைந்த ஓவியத்தைக் காட்டியபோது, ‘‘அட என்னை மாதிரியே இருக்கே.. இப்போ நான் எதுவும் கொடுக்க முடியலையே உனக்கு..’’ என்றார். ‘‘எதுவும் வேண்டாம் சார்.. உங்க கையெழுத்து மட்டும் போட்டு குடுங்க..’’ என்று நான் சிரித்துக்கொண்டே சொன்னதும் அந்தப் படத்தில் உள்ள சட்டைக் காலரில் தன் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தார். 45 ஆண்டுகளுக்குப் பின் அவரது 90வது பிறந்த நாள் சென்னையில் கொண்டாடியபோது சிவாஜி பற்றிக் கேட்டிருந்த போட்டிகளில் நான் வெற்றி பெற்று இருந்ததால் பரிசைப் பெற்றுக்கொள்ள விழாவிற்கு அழைக்கப்பட்டேன். அவர் ஓவியத்துடன் வாழ்த்தும் எழுதி விழாவிற்கு எடுத்துச் சென்றேன். சிவாஜி கணேசன் உருவம் பொறித்த தங்க நாணயமும் வெள்ளி நாணயமும் பரிசாகக் கொடுத்தனர். ஓவியத்தை திரு. ராம்குமார், திரு பிரபு இருவரிடமும் காட்டி அவர்களின் நெகிழ்ச்சியில் நானும் நெகிழ்ந்தது மறக்க முடியாது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நான் வரைந்த ஓவியம் அவரது மகன்களின் மூலம் அவரது இல்லத்திற்கு வாழ்த்துடன் சென்றிருக்கிறது. இது எப்படிப்பட்ட சிறப்பு தெரியுமா! என்றும் மறக்கமுடியாத வியப்பு! இறுதியாக நான் வரைந்தது சரஸ்வதி படம். பல ஆண்டுகளுக்கு முன்பு வரைந்தது. அதன்பின் வரைய நேரமின்றி எழுத்தின் பக்கம் திரும்பி விட்டது என் கவனம்.

தங்கள் ஆசிரியப் பணியின் சவால் கள் சாதனைகள் என்ன?

நான் ஒரு ஆசிரியர் என்று சொல்வதில் அளவிலா பெருமை அடைகிறேன். ஆங்கில ஆசிரியரான எனக்கு கிராமப்புற பிளஸ் டூ மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்று கொடுத்து அவர்களை தேர்ச்சி பெறச் செய்வது என்பது பெரிய சவாலான பணியாக இருந்தது. அடிப்படையிலிருந்து அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் சவால்களை உளவியல் முறையில் எதிர்கொண்டேன். மாணவர்களை நட்புடன் அணுகி எளிய முறையிலும் விளையாட்டு முறையிலும் அவர்களை ஈர்த்து வெற்றி பெற வைப்பது பெரிய சவால்தான். அதுவே என் சாதனையும்கூட. என்னுடைய 30 ஆண்டு பணிக் காலத்தில் என் பாடத்தில் ஒரு மாணவர் கூட அரசுத் தேர்வில் தோல்வியடைந்தது இல்லை என்பது என் பணிச் சாதனை. «சிகரம் தொட்ட முதுகலை ஆசிரியர்» என்ற விருது பெற்றேன் . பல நாடுகளிலும், இங்கு பல்வேறு பகுதிகளிலும் வாழும் என் மாணவர்கள் இன்றும் என்னுடன் தொடர்பில் உள்ளனர். நல்ல பணியில், பதவியில் இருக்கின்றனர் என்பது எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும்.

நீங்கள் பெற்ற விருதுகள்?

எண்ணற்ற விருதுகள். அத்தனையும் மதிப்பானது. என் பொறுப்பை உணர்த்தக் கூடிய விருதுகள். தமிழக அரசின் ‘‘தமிழ்ச்செம்மல் விருது’’, கலாம் விருது, ‘‘பாரதியார் விருது’’, இலங்கையில் மத்திய அமைச்சர்களிடம் பெற்ற ‘‘தமிழ்மணி விருது’’, ‘‘தமிழகச் சிறந்த ஆசிரியர் விருது’’ மலேயா பல்கலைக்கழகம் மலேசியாவில் ஆய்வுக் கட்டுரைக்கான சிறப்புச் சான்றிதழ், ‘‘தமிழன் விருது’’, ‘‘பெண் சாதனையாளர் விருது’’ தமிழ்ச்சங்கம் கம்போடியா அளித்த ‘‘ஔவையார் விருது’’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.

நூல்கள் வெளியிட்டு இருக்கிறீர்களா?

ஆம். ஐந்து நூல்கள் வெளியிட்டி ருக்கிறேன். ‘‘வாருங்கள் சிகரம் தொடலாம்’’ என்ற கவிதை நூல் மணிமேகலைப் பிரசுரத்தில் வெளியிட்ட என் முதல் நூல். மாணவர்களை ஊக்கப்படுத்த நான் எழுதிய கவிதை நூல். ‘‘உன்னைத் தேடு உனக்குள் நீயே!’’என்னுடைய இரண்டாவது கவிதை நூல். இளைஞர்களுக்கு வழிகாட்டும் சமூகச் சிந்தனைகளைப் பதிவிட்டிருக்கிறேன். ‘‘இலங்கை நோக்கி இலக்கியப் பயணம்‘‘ என்ற பயணக்கட்டுரை என்னுடைய மூன்றாவது நூலாகும். இலங்கை சென்ற போது சந்தித்த தமிழர்களின் வாழ்வியல், வலி, உணர்வு போன்ற அனுபவங்களைப் பகிர்ந்துள்ளேன். ‘‘ஒரு பெண்ணின் பயணம்’’ என்ற மொழிபெயர்ப்பு நூல். 86 வயதாகும் பிரேமா சிவராமன் என்ற அம்மா எழுதிய “The Journey of a girl child” என்ற சுயசரிதையை தமிழில் மொழிபெயர்த்து உள்ளேன். தன்னம்பிக்கையூட்டும் நூல். ‘‘பட்டுச் செல்லமே.. பாட்டு பாடவா’’ என்ற சிறுவர் பாடல்கள் நூல் குழந்தை இலக்கியத்தில் அடி எடுத்து வைக்க உதவியது. இப்பாடல் Youtube / Hosur Manimekalai சேனலில் உலகலாவிய குழந்தைகள் கண்டு மகிழ்கின்றனர். தற்போது ‘‘அழகின் எல்லை அங்கோர்வாட்’’ என்ற கம்போடியா, தாய்லாந்து பயணக் கட்டுரை நூல் தமிழ்நெஞ்சம் வெளியீடாக வர உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (பன்னாட்டு அறிஞர்கள் கலந்து கொண்டஇரண்டு நாள் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் தொகுப்பாளராக என் அனுபவத்தையும், பல சுவாரசியமான நிகழ்வுகளையும், கருத்துகளையும் இந்நூலில் ஆவணப்படுத்தி யுள்ளேன்.) மரபுக் கவிதை நூல் வெளியிட உள்ளேன். குழந்தைகளுக்கு நிறைய எழுதவேண்டும் என்ற ஆவல் உள்ளது.

பன்னாட்டுத் தமிழர் நடுவம், அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியாவில் நடாத்திய பெருவிழாவில் கவிஞர்களுடன் தமிழ்ச்செம்மல் ஓசூர் மணிமேகலை

சமூக சேவைகளில் தங்கள் பங்கு பற்றி கூற முடியுமா?

சமூகஆர்வலராக ஓசூரில் உள்ள பல அமைப்புகளுடன் இணைந்து செய லாற்றி வருகிறேன். ‘‘மனாரா அறக் கட்டளை’’ துணைத் தலைவராக, ஆதர வற்றோர், முதியோர், மனநலம் குன்றியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம். பெற்றோர்களை இழந்த பெண் குழந்தைகளின் கல்வி தொடர உதவி வருகிறோம். தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கும், ஏழைப் பெண்களுக்கும் உதவி வருகிறேன். பெண்கள் தங்களால் முடிந்த வரை ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஊக்கமூட்டி அவர்களைத் தன்னம் பிக்கையுடன் செயலாற்ற வைத்துக் கொண்டி ருக்கிறேன். பள்ளிகளில் தன்னூக்கப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறேன். சாதித்துக் கொண்டிருக்கும் இளம் தலைமுறையினரை ‘’நாளைய பிரபலங்கள்’ என்று உள்ளூர் தொலைக்காட்சியில் அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறேன். மாணவர்களை இளைஞர்களை வழிநடத்தி மேன்மையுறச் செய்ய வேண்டும் என்பதே என் குறிக்கோள்.

நல்லாசிரியராகப் பள்ளிப்பிள்ளைகளுடன் ஓசூர் மணிமேகலை

உங்கள் குடும்பம் மற்றும் எதிர்கால திட்டங்கள் 

அன்பான கணவர். அருமையான பிள்ளைகள். மகன், மகள் இருவரும் திருமணமாகி, நல்ல பணியில், குழந்தை களுடன் மகிழ்வாக உள்ளனர். என் பேத்தி களுக்கு நான்தான் அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுத் தோழி. என் குடும்பத்தாரின் துணையுடன் நான் நிறைய எழுதவேண்டும். நிறைய நூல்கள் வெளியிட வேண்டும். நிறைய நூல்கள் படிக்க வேண்டும். நிறைய மாணவர்களைச் சந்தித்து உரையாட வேண்டும். நிறைய சமூகச் சேவைகள் ஆற்ற வேண்டும். இப்படி நிறைய நிறைய ஆசைகள் நிறைவேறும் விருப்பங்களாக மனதில் இருக்கின்றன. பேரிடர் காலத்திலிருந்து அனைவரும் மீண்டு, நண்பர்களை, உறவு களை மீண்டும் நேரில் சந்தித்து நிறைய பேச வேண்டும். உங்களைப் போன்ற படைப்பாளர்களை, தமிழறிஞர்களைச் சந்தித்து மனம்விட்டு உரையாடவேண்டும். இது போதுமே!

என்னுடன் கலந்துரையாடி என் மனம் திறக்க வைத்து, இனிமையான நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப் பளித்த உங்களுக்கும் தமிழ்நெஞ்சம் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் மகிழ்வான வணக்கத் தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி.


4 Comments

A Muthuvijayan · ஜூன் 1, 2021 at 9 h 34 min

அருமையான பதிவிற்கும் அக்காவுக்கும். வாழ்த்துகள். கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

Kalaivani · ஜூன் 1, 2021 at 13 h 13 min

மிகவும் அருமையான நேர்காணல் … பல பெண்களுக்கு மிகவும் தூக்கம் ஆனதாகவும் நம்பிக்கை தரக்கூடிய பதிவு. வாழ்த்துக்கள்

நிறைமதி நீலமேகம் · ஜூலை 1, 2021 at 14 h 38 min

சிறப்புங்க சகோதரி, இனிய நல்வாழ்த்துகள்💐💐💐

செல்லமுத்து பெரியசாமி · அக்டோபர் 25, 2022 at 12 h 47 min

அருமை மிகச்சிறப்பு சகோதரி! இனிய நல்வாழ்த்துகள் சகோதரி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

தமிழை முன்னெடுத்துச் செல்வோம்…

தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது

நேர்காணல்

தேயிலை தேசத்து சாமான்யனுடன்…

நேர்காணலில் நாம் சந்திக்கவிருப்பவர், தமது காத்திரமான படைப்புகளோடு இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்.'கோவுஸ்ஸ ராம்ஜி' எனும் புனைபெயரில் எழுதிவரும் இவர் எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வலம் வரும் காளியப்பன் உலகநாதன் ஆவார்>

நேர்காணல்

அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும்

அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும் உமாசுப்ரமணியன்| பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் இதோ… நேர்கண்டவர் பெண்ணியம் செல்வக்குமாரி