“அன்பால் அறிவால் அகங்குளிரும்
அமுதமொழியால் அனைவரையும்”

தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.

இளமையிலே பல நூல்களைப் படித்த பெருமைக்கு உரியவர் வாரியார் சுவாமிகள். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” எனும் நோக்கில் தான் பெற்ற இன்பத்தை அடுத்தவர்க்கு அள்ளி வழங்கியவர் வாரியார் சுவாமிகள்.

இயல் இசையில் வல்லவரான மல்லைய தாசருக்கும், தெய்வ பக்தி நிறைந்த கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினோரு பிள்ளை களில் நான்காவதாகப் பிறந்தவர் இவர். 1906 ஆம் ஆண்டு ஆகஸ்டு 25 ஆம் நாள் காங்கேய நல்லூரில் அவதரித்தவர் திருமுருக கிருபானந்த வாரியார்.
நவமணிகளில் சிறந்தது முத்து மற்றைய மணிகள் எல்லாம் சாணை கொடுத்தால்தான் ஒளி உண்டாகும். முத்து பிறவியிலேயே ஒளியை உடையதாம். அதுபோலப் பிறவி யிலேயே ஞானத்தைப் பெற்றவர் வாரியார் சுவாமிகள்.

ஒருநாள் சின்னஞ் சிறுவனாக இருந்த வாரியார் உடையை மடக்கிக்கொண்டு நிலத் தில் உட்கார்ந்தாராம். உடனே அவரது தாயார் கனகவல்லி அம்மையார், வாரியாரைப் பார்த்து, சிறு குழந்தையாகிய நீ அழுக்குத் தரையில் உட்காரக் கூசுகிறாய். உள்ளத்திலே ஆசா பாசங்களான அழுக்குகள் இருந்தால், அந்த அழுக்குப் பிடித்த உள்ளத்திலே இறைவன் உட்காரக் கூசுவான். ஆகவே, நீ உள்ளம் தூயவனாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

அன்னை கூறிய நன்னலம் மிக்க சொன்னயம் பசுமரத்தாணிபோல் தன் நெஞ்சில் பதிந்தது என்ற தன் வரலாற்றைச் சொல்லும் போது வாரியாரே இதைப் பதிவு செய்திருக்கின்றார்.

“தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.”
(குறள். 399)

எனும் வள்ளுவர் குறளுக்கேற்ப எளிமை யாகவும், ஆழமாகவும் மற்றவர் நெஞ்சில் பதியக் கூடிய கருத்துகளைத் தன் உரையால், எழுத்தால், கதைகளால் உலகிற்கு வழங்கிய பெருமைக்கு உரியவர் வாரியார் சுவாமிகள்.

வாரியாரின் படைப்புகள் அத்தனையும் வாழ்வியல் நெறி உணர்த்தும் காலப் பெட்டகங்கள், கருத்துக் கருவூலங்கள் என்றால் அது மிகையாகாது. அவற்றுள் ஒரு சிலவற்றை இக்கட்டுரையில் வெளிப்படுத்த விழைகின்றேன்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.”
(குறள். 666)என்பார் திருவள்ளுவர்

நாம் எதை நினைக்கின்றோமோ அதை நினைத்தபடி அடைய முடியும், எப்பொழு தென்றால் நாம் திண்ணிய நெஞ்சம் உடையவராய் இருந்தால்.
மனிதன் மட்டுமே மனத்தை உடையவன். ஆறறிவு உடையவன். ஐயறிவு கொண்ட விலங்குளுக்கு வாய் இருந்தாலும் அவற்றை வாயில்லா பிராணிகள் என்கிறோம். ஏன் தெரியுமா? சிந்திக்கும் ஆற்றல் இன்மையால் சிந்தித்ததை அவற்றால் சொல்ல முடிவ தில்லை.

ஆனால் மனிதன் மனத்தை உடையவன் சிந்திக்கின்ற ஆறாவது அறிவு உடையவன். மனத்தினால் எண்ணியதை எண்ணியபடி எல்லோராலும் செய்ய முடியுமா? என்றால் முடியாது.

எண்ணியதை எண்ணிபடிச் செய்ய லாம். ஆனால் நல்லதைச் செய்ய வேண்டும் என்றால் அங்கு இறைவன் வந்து உட்கார்ந்திருக்க வேண்டும். எல்லா இடத்திலும் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் நம் மனத்தில் வந்து இருந்தால் மட்டுமே நாம் நினைத்ததை நினைத்தவாறு செய்ய முடியும்.

தூய்மையான இடத்தில்தான் இறைவன் இருப்பான். எனவே, நம் உள்ளத்தில் உள்ள அழுக்கு நீங்கினால்தான் அங்கு இறைவன் வந்து உட்காருவான். மனத்தழுக்கு நீங்கி னால்தான் அறச் செயல்களைச் செய்ய முடியும்.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.”
(குறள். 32)

என்பார் வான்புகழ் வள்ளுவர்.

மனத்தழுக்கு எது? ஆசையே மனத் தழுக்கு என்கிறார். வாரியார் ஆசையினால் பொறாமை உண்டாகும்.

பொறாமையும், ஆசையும் கோபத்தை உருவாக்கும் கோபத்தினால் இன்னாச் சொல் பிறக்கிறது. இந்த மனத்தழுக்குகள் நீங்கினால்தான் எண்ணியதை எண்ணி வாறு செய்ய முடியும்.

“அழுக்காறு அவாவெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.”
(குறள். 35)

என்பது குறள் கூறும் வாழ்வியல் நெறி

அழுக்காறு என்பது பொறாமை. அதாவது பிறருடைய கல்வி, புகழ் முதலிய உயர் குணங்களைக் கண்டு மனம் பொறாமல் உள்ளம் புழுங்கும் தீயநெறியே பொறாமை. இது மனிதனுடைய மனத்தை அழுக்காகிறது. இழுக்கு மிகச்செய்யத் துணிகிறது.

பிறர் செல்வம், பிறர் வளர்ச்சி என்று பிறரது மேன்மைகளைக் கண்டு உள்ளம் பொறாமல் புழுங்குவதே அழுக்காறு.
“அழுக்காற்றால் நெஞ்சம் அமுங்கிய புன்மாக்கள்
இழுக்காற்றால் இன்பநலம் எய்தார் பராபரமே”
என்பார் தாயுமானவர்

பொறாமை உடையவர்களுக்கு வேறு பகைவர்களே வேண்டாம். அந்தப் பொறாமையே அவர்களுக்குத் துன் பத்தைக் கொடுக்கும். எனவே, அடுத்த வர்மேல் நமக்கு ஏற்படும் பொறாமை நம்மையே தாக்கும் என்பதை வாரியார் சுவாமி கள் ஓர் அழகான கதை மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

ஒரு மன்னவன் சீரும்சிறப்பும் உடைய வனாக இருந்தான். செல்வம் படைத்த வன் ஆயினும், சுயஅறிவு இல்லாதவன் பிறர் கூறும் சொல்லை நம்பு கின்ற இயல் புடையவன். தன்னிடம் வந்து முகஸ்துதி செய்பவர்க்கு அள்ளிக் கொடுக்கும் குணம் படைத்தவன். பலர் அவனைப் புகழ்ந்து பேசி ஏமாற்றிப் பெரும்பொருள் பெற்றுச் சென்றார்கள்.

அந்த அரசனிடம் ஆடைகளை வெளுத்துக் கொடுக்கும் ஏகாலி ஒருவன் இருந்தான். தனது வேலையைச் சுத்தமாகச் செய்வான். நம்பிக்கையானவன். அடக்க மாகவும், அன்பாகவும் அரசனிடம் பழகி னான். அதனால் அரசனுக்கு அவன் மீது இரக்கம் ஏற்பட்டது. ஏகாலிக்கு நூறு, இருநூறு என்று அவ்வப்போது தாராளமாகத் தந்தான்.

அந்த அரசனிடம் மண்பானைகள் செய்யும் குலாலன் ஒருவனும் இருந்தான். அவனுக்கு ஏகாலி மீது பொறாமை ஏற்பட்டது.

“அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கும்
பேணா தழுக்கறுப் பான்”
(குறள். 168)

எனும் வள்ளுவர் சொன்ன குறளுக்கு இலக்கணம் ஆனான் அந்தக் குலாலன்.

ஏகாலி மீது கொண்ட பொறாமை யினால் அவனைப் பற்றி அரசனிடம் கோள் சொல்லி அரசனுடைய அபிமானத்தை மாற்றிவிட வேண்டும் என்று எண்ணினான்.

ஒருநாள் அரசனிடம் சென்று வணங்கி நின்றான். “என்ன குலாலனாரே” நலமா? என்ன சேதி ஏதாவது வேண்டுமா? என்று கேட்டான் மன்னவன்.

குலாலன், “அரசே! தங்கள் பெருமை எங்கும் பரவி யுள்ளது. ஆ! ஆ! தங்கள் புகழே புகழ். தங்களைப் போன்ற உத்தம அரசர் உலகிலேயே கிடையாது. முன்னும் இருந்த தில்லை. இனியும் இருக்கப் போவதில்லை. தங்கள் கீர்த்தி எட்டுத் திசைகளிலும் முட்டிப் பரவி உள்ளது. தங்கள் நற்குணங்களைப் போற்றாதவர்களே இல்லை. இந்திர போகமே உங்களிடம் அமைந்துள்ளது. ஆனால், ஒரு குறையுள்ளது. அதுவும் நீங்கிவிட்டால் தாங்கள் பூலோக இந்தி ரனைப்போல இருக்கலாம் என்றான்.

உடனே அரசன், “அப்பா! எனக்கு என்ன குறை? அதனைச்சொல்” என்றான்.

குலாலன், “அரசே! வேறு ஒன்று மில்லை. உங்களிடம் எல்லாம் அமைந் திருக்கின்றன. ஆனால், வெள்ளை யானை ஒன்றுதான் இல்லை. இந்திரனுக்கு வெள்ளை யானை உண்டல்லவா? உங்க ளிடம் கருப்பு நிற யானைதானே இருக்கின்றது. நமது அரண்மனை ஏகாலியிடம் கூறி அந்த யானையை மெல்ல வெளுத்துத் தருமாறு கட்டளை யிடுங்கள். வெளுத்துத் தந்துவிடுவான்.

பின்னர், வெள்ளை யானையோடு கூடிய தாங்கள் பூலோக இந்திரன் என்ற புகழ் பெற்று விளங்குவீர்” என்றான்.

மன்னன் சிறிது மதிநலம் குறைந்தவன் அல்லவா? யானையை வெளுக்க வைக்க முடியுமா? என்ற அறிவுகூட இல்லை. உடனே தனது அரண்மனை ஏகாலியை அழைத்து, “அப்பா ஏகாலி, நமது அரண்மனையில் உள்ள பட்டத்து யானையைக் கொண்டு போய் எட்டு நாட்களுக்குள் வெளுத்துக் கொண்டு வா!” என்றாள்.
பின், வெள்ளை யானையாக இருக்க வேண்டும், உனக்கு நிறைய பணம் தருகிறேன். ஆனால் காரியத்தை மட்டும் கருத்துடன் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் சிரச்சேதம் செய்வேன் போய்வா” என்றான்.

ஏகாலி இந்த உத்தரவைக் கேட்டு நடுங்கி விட்டான். தமது வாழ்வு முடிந்தது என்று எண்ணினான். மறுத்துப் பேசுவதற்குத் தைரியம் இல்லை. தலை குனிந்த வண்ணம் “நல்லது” என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.

அரண்மனையை விட்டுப் போகும் போது ஒரு புறம் குலாலன் நின்று அவனைக் கண்டு சிரித்தான். அதனைக் கண்ட ஏகாலி, ஓ இவன்தான் இந்த வினையை மூட்டினானா? என்று ஊகத்தால் உணர்ந்தான்.

கடவுளை நினைத்து, தெய்வமே நீதான் எனக்குத் துணை, உன்னை ஒழிய ஒருவரையும் நான் நம்பமாட்டேன். என்று துதிசெய்து கொண்டே சென்றான் ஏகாலி.
அரண்மனையிலிருந்து கொண்டு சென்ற யானை ஏகாலி வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தது. எட்டுநாள் கடந்தது.

இன்று ஏகாலியின் தலைபோகும் என்று எண்ணி மகிழ்ந்தான் குலாலன்.

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்”
(குறள். 319)

என்று உணராமல் இடைக்கால நிவாரணம் போல் மகிழ்ந்தான் குலாலன்.

மெல்ல அரசனிடம் போனான். அரசே, தங்கள் கட்டளையை ஏகாலி நிறை வேற்றினானா? சுத்த சோம்பேறி அவன். தங்கள் கட்டளையில் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை என்று கூறினான்.

உடனே, அரசன் ஏகாலியை அழைத்து “ஏகாலி, என்ன… யானையை வெளுத்து விட்டாயா? இன்றுதானே எட்டாவது நாள்.” என்று கோபத்துடன் கேட்டான்.
ஏகாலி, வணக்கமாக நின்று, “மன்னர் பெருமானே! கருணாநிதியே! தங்கள் கட்டளையை நிறைவேற்ற நான் பின்னடை வேனோ? தங்கள் வாக்கு வேதத்திலும் மேலான தல்லவா? இது என்ன, யானையை வெளுப்பது ஒரு பெரிய காரியமா? சுலபமாகச் செய்து முடிப்பேன்.

ஆனால், ஒரு சிறு தடையுள்ளது மன்னா, துணிகளைப் பானையில் இட்டு அடுப்பில் வைத்து அவித்துத்தான் வெளுக்க வேண்டும்.

எனவே, நமது குயவனாரை யானையை வைத்து அவிப்பதற்கு ஏற்றவாறு ஒரு பானையைச் செய்து கொடுக்குமாறு ஏற்பாடு செய்யுங்கள். அது மட்டுமல்ல, பானையில் யானை ஏறினால் அப்பானை உடையாமல் கெட்டியாகவும் இருக்குமாறு செய்யச் சொல்லுங்கள்.

பானை வந்துவிட்டால் ஒரே நாளில் வெளுத்து வெள்ளை யானையைக் கொண்டு வந்து அரண்மனையில் கட்டுவேன்” என்றான்.

உடனே அரசன் குலாலனை நோக்கி, அப்பா, ஏகாலி சொல்வது நியாம்தான், ஆடைகளைப் பானையில் இட்டுத்தானே அவிக்கின்றார்கள். ஆகவே, யானைக்கு ஏற்ற பானையை உடனே செய்து கொடு. இல்லையேல் உன்னைச் சிரச்சேதம் செய்வேன்” என்று கட்டளை இட்டான்.

“நீங்கரும் பொறாமை உள்ளோர்
நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே” – நீதிநூல். ஆதி.26

என்று பொறாமைப் படுபவர்கள் உலகத்தில் கேட்டையே அடைவார்கள் என்கிறார் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள்.
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண் டாக்கும் பகையாகும், ஆகையால், குற்றம் செய்யாமல் இருப்பதை நோக்க மாகக்கொண்டு தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதை

“குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை”
(குறள். 434)

என்கிறார் வான்புகழ் வள்ளுவர்.

அரசன் கூறியதைக் கேட்ட குலாலன் நடுநடுங்கிப் போனான். வேலிக்கு இட்ட முள் தன் காலுக்கு வந்தது போல் ஆயிற்று.

பொறாமையினால் ஏகாலிக்குத் துன்பம் கொடுக்க நினைத்தான். அந்தத் துன்பம் அவனுக்கே வந்து சேர்ந்தது.

என்ன செய்வது? என்று தெரியாமல் நரியைப் போல் விழித்துக் கொண்டே சென்றான்.

நேரே, ஏகாலியின் வீட்டுக்குப் போனான், தம்பி இது என்னப்பா? பெரிய ஆபத்தில் என்னைச் சிக்க வைத்து விட்டாயே! யானைக்குப் பானை செய்ய முடியுமா? அரசனோ, அறிவில்லாதவன். என் தலையை வெட்டி உருட்டி விடுவானே! என்று புலம்பினான்.

“அண்ணே, நீதானே முதலில் என் தலையை உருட்ட ஏற்பாடு செய்தாய்.

வினையை விதைத்தவன் வினையைத் தானே அறுப்பான்? வேட்டியை வெளுத்துக் கொடுத்துச் சிவனே என்று இருந்த என்னை, யானையை வெளுத்துத் தருமாறு அரசனிடம் கோள் மூட்டினாய் அல்லவா?

நானும் ஒரு தொழிலாளி, நீயும் ஒரு தொழிலாளி, ஒரு தொழிலாளி மறு தொழிலாளிக்கு அனுகூலம் புரிவதா? பிரதிகூலம் புரிவதா?

அண்ணே, நாமே நம்மில் ஒருவருக் கொருவர் நன்மையைச் செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாமல் இருக்க வேண்டாமா?

நீ என் வாழ்வில் கொள்ளி வைத்தாய்! காற்று வேகத்தால் உன்வாழ்வுக்கு அக்கொள்ளி வந்து சேர்ந்தது. இப்போது என்னிடம் வந்து மோதிக் கொண்டால் நான் என்ன செய்வேன் என்றான்.

“தம்பி, உனக்கு ஒரு கோடி கும்பிடு போடுகிறேன். அப்பா நான் பிள்ளைக்குட்டிக்காரன் என் தலையைக் காப்பாற்று” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.”
(குறள். 987)

எனும் வள்ளுவர் குறளுக்கு ஏற்ப மறுநாள் ஏகாலி குலாலனாரை அழைத்துக் கொண்டு அரசனிடம் சென்றான். வணங்கி நின்று, அரசே, குலாலனார் ஆனைக்கு ஏற்ற பானை செய்ய முயலும் போது இந்தத் தகவல் எப்படியோ இந்திரன் காதுக்கு எட்டிவிட்டது. பூலோகத்தில் எனக்குப் போட்டியாக இன்னொரு வெள்ளை யானை இருப்பது முறையல்ல. அப்படி இருக்குமானால் அந்த அரசனை உடனே கொன்றுபோடு! என்ற காலதூதனுக்கு கட்டளை இட்டாராம். அதனை அறிந்து தங்களிடம் கூறவந்தேன் என்றான்.

மன்னன் இதைக்கேட்டு அஞ்சினான். ஓ!.. அப்படியா? யானையை வெளுக்க வைக்க இனி எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். உங்களுக்கு வீண் துன்பம் தந்துவிட்டேன். இந்தாருங்கள் அதற்காக ஆளுக்கு ஆயிரம் வராகன்கள் கொண்டுபோய் சுகமாக இருங்கள் என்று இருவருக்கும் பொருள் தந்தான். இருவரும் அப்பொருளைப் பெற்றுக் கொண்டு திரும்பினார்கள்.

ஏகாலி, குலாலனாரை நோக்கி, இப்போ தாவது புத்தி வந்ததா? எப்பொழுதும் ஒருவன் மற்றொருவனுக்கு உபகாரம் புரிந்து ஒற்றுமையாக வாழ வேண்டும்.

“நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை”
என்பது ஆன்றோர் வாக்கு.

பொறாமைப்படுகின்ற இந்த மனத் தழுக்கு எதனால் வருகின்றது என்றால் ஆசை. இந்த ஆசை நான்கு வகைப்படும் என்பார் வாரியார் சுவாமிகள்.
பற்று : உள்ள பொருளின் மீது வைக்கின்ற பிடிப்பு
அவா : இன்னும் அது வேண்டும், இதுவேண்டும் என்ற நினைவு.
ஆசை : அடுத்தவர் பொருளை விரும்பி நிற்பது.
பேராசை : எத்தனைதான் வந்தாலும் திருப்தி இல்லாத ஆசையின் உச்சம்.
‘’ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழி நாசியயாடுஞ் செவியாம்
ஐவாய் வழிசெலும் அவாவினையே’’
என்பார் அருணகிரிநாதர்.

இந்த ஆசை மூன்று வகைப்படும் என்பார் வாரியார், அவை பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை.

பொன்னாசையும், மண்ணாசையும் மனிதப் பிறப்புக்கே உரியன. பெண்ணா சையோ எல்லாப் பிறவிகளுக்கும் உரியது. பிறவிகள் தோறும் தொடர்ந்து வரும் பெண்ணாசையும், அடுத்தவர் பொருள் மீது வைக்கின்ற பொன்னாசையும், மண்ணா சையும் விளைவிக்கும் பயன் எதுவும் இல்லை. அழிவு ஒன்றையே அது தரும்.என்பதை உணர்ந்து அடுத்தவர்க்குச் சொந்தமானவற்றின் மீது வைக்கின்ற ஆசையை விட்டொழியுங்கள் என்கிறார் வாரியார் சுவாமிகள். இதற்கு அவர் சொல்லும் கதை

குப்பனும் சுப்பனும் வயிற்றுப் பிழைப்புக்காகச் சம்பாதிக்க வேண்டு மென்று சந்தைக்குச் செல்கின்றார்கள். வழியில் ஒரு சிறு காடு, சிறு சிறு செடிகள் அடர்ந்து இருக்கின்றன. ஒரு துறவி பெருமூச்சு விட்டுக்கொண்டே, ஐயோ! ஆட்கொல்லி, ஆட்கொல்லி! என்று சத்தம் போட்டுக் கொண்டே வந்தார்.

“சாமியாரே! நில்லும். ஏன் இப்படிப் பயந்து ஓடி வருகின்றீர்? என்ன ஐயா விசயம்? “என்று இருவரும் துறவியரைக் கேட்டனர்.

‘ஐயோ! அங்கே ஓர் ஆட்கொல்லி இருக்கின்றது. அதைப் பார்த்து என் நெஞ்சு அஞ்சுகின்றது. அதனால்தான் ஓடுகின்றேன்.’ என்று கூறிவிட்டுச் சென்றார் துறவி.
குப்பன், ‘சுப்பா ஆட்கொல்லி என்றால் அது என்ன மிருகம்? சிறுத்தைப் புலியா? கரடியா? நாம் இன்று மாலை இந்த வழியாகத்தானே வர வேண்டும். நம்மைக் கொன்றுவிடுமே! ஆதலால் அந்த ஆட்கொல்லியைக் கொன்றுவிட்டால் நல்லது என்றான்.

சுப்பன் ஒரு பெரிய மூங்கிலை எடுத்து, அதன் நுனியில் ஒரு கத்தியைக் கட்டி, அங்குள்ள புதர்களைத் தட்டிக்கொண்டே சென்றான். ஒரு புதரில் தட்டியவுடனே கணீர் என்று சத்தம் கேட்டது. இருவரும் நடுங்கிப் போனார்கள். “அடேய் என்னமோ ஓசை கேட்கிறது? என்று மெல்லப் புதரைத் தட்டியால் நீக்கிப் பார்த்தார்கள். அங்கே தங்கக்காசுகள் நிறைந்த ஒரு தங்கக்குடம் இருந்தது.

இருவருக்கும் எல்லையில்லாத ஆனந்தம். இந்தச் சாமியார் ஒரு பித்துப் பிடித்தவன். இந்தத் தங்கக் குடத்தைக் கண்டு இந்த மாதிரி பயந்து ஓடுகிறானே! நல்ல காலம் இது நமக்குக் கிடைத்தது. ஆகா! நம் வறுமை நீங்கியது. இனி, நாம் இருவரும் கோடீஸ்வரர்கள் என்று மகிழ்ந்தார்கள்.

மெல்ல அந்தத் தங்கக் குடத்தை எடுத்துக் கொட்டி எண்ணிப் பார்த்தார்கள். 6000 தங்கக் காசுகள் இருந்தன. ஆளுக்கு மூவாயிரம் பவுன் எடுத்துக்கொள்வோம். குடத்தை இரண்டாக உடைத்துப் பங்குப் போட்டுக் கொள்வோம் என்று முடிவு செய்தனர்.

இப்போது கொண்டு சென்றால் யாரேனும் பார்த்து விடுவார்கள். அரசாங்கத்துக்கு அறிவித்து விடுவார்கள். நமக்குக் கிடைக்காமல் போய்விடும். எனவே, இருட்டிய பின்னர் எடுத்துச் செல்வோம் என்று முடிவு செய்து அப்புதரிலேயே மறைத்து வைத்துக் காவல் செய்தனர்.

உச்சிப் பொழுது வந்தவுடன், குப்பா, பசிக்கிறது, நீ ஊருக்குள் போய் ஓர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு எனக்கு ஓர் எடுப்புச் சோறு கொண்டு வா. நான் இங்குக் கவனமாகக் காவல் புரிந்து கொண்டிருக்கின்றேன்” என்றான் சுப்பன்.

‘நல்லது’ என்று கூறிவிட்டுச் சென்றான் குப்பன். போகிறபோது மனத்துக்குள் சிந்தனை அலை மோதியது.

இந்தச் சுப்பன் பயலை இன்று ஏன் நான் அழைத்து வந்தேன். அவன் என்ன குனிந்து நிமிர்ந்து பாடுபட்டானா? அந்தப் பயலுக்கு எதற்கு மூவாயிரம் பவுன் தரவேண்டும். அவன் வராமல் இருந்திருந்தால் 6000 பவுன் எனக்கே கிடைத்திருக்கும் எனறு சிந்தித்தவன் பணத்தின் மீது உள்ள ஆசையினால் அவனை ஒழித்துக்கட்ட முடிவு செய்தான்.

ஊருக்குள் சென்று சாப்பிட்டுவிட்டு சுப்பனுக்கு சாப்பாடு வாங்கினான். கூடவே விடமும் வாங்கிக் கொண்டான். அன்னம் குழம்பு இவற்றோடு நஞ்சும் கலந்து வைத்துச் சுப்பனுக்கு எடுத்துச் சென்றான். சுப்பன் இந்த உணவை உண்டபின் அவன் இறந்துவிடுவான். இருக்கின்ற புதையல் எனக்கே என்று ஆடிப்பாடி மகிழ்வுடன் சென்றான்.

அங்கே காவலுக்கு இருந்த சுப்பன் சிந்திக்கலானான். இந்தக் குப்பன் ஏன் நம்முடன் வந்தான் அவனுக்கு எதற்குப் பாதிப் புதையலை நான் தரவேண்டும். அவன் என்ன நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபட்டானா? என்று யோசித்து குப்பனைக் கொல்ல முடிவு செய்தான். கத்தியைக் கூர்மையாகத் தீட்டி மடியில் சொருகி வைத்துக் கொண்டான்.

குப்பன் உணவைக் கொண்டு வந்து வைத்து சுப்பா! சாப்பிடு என்றான். உடனே சுப்பன் புலிபோல் அவன்மீது பாய்ந்து குப்பனை ஒரே குத்தாகக் குத்தி வீழ்த்தினான். குப்பன் குப்புற வீழ்ந்து மாண்டான்.

சுப்பன் பெருமகிழ்ச்சியோடு உணவை உண்டான். அவ்வளவுதான் சுருண்டு வீழ்ந்து மடிந்தான். இருவருமே அளவுக்கு மீறிய ஆசையால் அழிந்தார்கள்.
மாலை அத்துறவி மீண்டும் அவ்வழியே வந்தார். இருபிணங்களையும் கண்டார். அந்தோ! இந்த ஆட்கொல்லி இருவரைக் கொன்றுவிட்டதே! அம்மம்மா!

இன்னும் எத்தனை பேரைக் கொல்ல இருக்கிறதோ! பரம்பொருளே! இது பொல்லாத ஆட்கொல்லி! என்று கூறிவிட்டுச் சென்றார்.

ஆசையை அறுத்தவர்களுக்கு ஆனந்தம் உண்டு என்று சொல்கிறார் குதம்பைச் சித்தர்

“ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டென்ற
ஓசையைக் கேட்டிலையோ குதம்பாய்
ஓசையைக் கேட்டிலையோ” (பாடல். 116)

ஆசை இல்லாத மனிதன் இல்லை. ஆனால், அடுத்தவர் பொருள் மேல் ஆசைப் படுவதே அழிவைத்தரும்.

பிறருடைய பொருளைக் கவர ஆசைப் படுவதால் வரும் பயனை விரும்ப வேண்டாம். அதனால் நன்மை அடைய முடியாது. அது மட்டுமல்ல குறையாத செல்வம் எதுவென்றால், இன்னொருவனுக்குச் சொந்தமான பொருளை அபகரிக்க நினைக்காமல் இருப்பதுதான் என்கிறார் வள்ளுவர்.

இந்த ஆசையினால் நமக்குச் சினம் உண்டாகின்றது. இந்தச் சினத்தைப் பலவீனத்தின் அறிகுறி என்பார் வாரியார். அளவுக்கு மீறிய சினம் அழிவைத் தரும் என்பார் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. இச்சினத்தை வென்றவர்களே ஞானிகளாக முடியும்.

டிக்கடி சினம் வந்தால் இரத்த அழுத்தம் ஏற்படும். இதிலிருந்து மீள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

சினம் வந்தால் அந்த இடத்தை விட்டுஅப்பால் போகவேண்டும் என்கிறார் வாரியார். சுடுகின்ற பாலை மற்றோர் பாத்திரத்தில் மாற்றினால் சூடு ஆறுகிறது. அதுபோல கோபம் வந்தவர்கள் வேறு இடத்திற்குச் சென்றுவிடலாம். ஏனென்றால் சினத்தினால் நாம் செய்வதும, தவிர்ப்பதுவும் நமக்கே தெரியாது. அறிவில் இருள் சூழும் சொல்லத்தகாத சொற்களை வாய் சொல்லும் என்பதால்தான்.

“மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.”
(குறள். 303)

என்கிறார் வள்ளுவர்.

இந்தச் சினமானது பேசத்தகாத வார்த்தைகளைப் பேச வைக்கும். நாவடக்கம் இன்றிப் பேசும்போது சொற்குற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இருள் சூழும். பகை மூளும் தனிமை உண்டாக்கும் கூடவே பிணிகளும் வந்து நம்மைப் பிடித்துக் கொள்ளும். நான் என்ற அகம் பாவத்தைக் கொடுக்கும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்கிறார் அவர்.

மனித உடலில் கண்கள் இரண்டு, கால்கள் இரண்டு, கைகள் இரண்டு, செவி இரண்டு, மூக்குத் துவாரம் இரண்டு, சுவாசிக்கும் நுரையீரல் இரண்டு, கிட்னி இரண்டு என்று இரண்டு இரண்டாய் இருந்தாலும் அவை ஒரு தொழிலையே செய்கின்றன. கண்கள் இரண்டாயினும் அவை காணும் பொருள் ஒன்றே, கால்கள், இரண்டாயினும் சென்று சேரும் இடம் ஒன்றே, ஆனால் நா ஒன்றுதான் அது செய்யும் செயல் இரண்டு. உணவைச் சுவைப்பதும் நாக்கு, உணர்வை வெளிப் படுத்துவதும் நாக்கு.

உடம்பில் எல்லா பகுதிகளையும் நரம்புடன் படைத்த இறைவன் நா ஒன்றை மட்டும் நரம்பில்லாமல் படைத்தான் என்கிறார் வாரியார். ஏன் தெரியுமா? நரம்புள்ள பகுதிகள் சுளுக்கிக் கொள்ளும். கை சுளுக்கும் கால் சுளுக்கும் நாவிற்கு நரம்பு இருந்தால் அது பேசும் போதெல்லாம் சொற்குற்றம் ஏற்படுவதோடு சுளுக்கிக்கொள்ளும் என் பதனால்தான் நாவை நரம்பில்லாமல் படைத்தான் இறைவன் என்பார் வாரியார் சுவாமிகள்

இந்த நாவடக்கம் நமக்கத் தேவை!
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.” (குறள். 127)

ஆண்டவன் அளித்த நாவால் அடுத்தவர் களைப் பற்றிக் குற்றங் குறைகளைக் கூறித் திரியக் கூடாது. அப்படிக் கூறும்பொழுது, அவர்கள் மீது இல்லாத குற்றத்தை இருப்பதாகச் சொன்னால் அவர்கள் செய்த பாவத்தில் ஒரு பாதி நமக்கு வந்து சேரும் என்கிறார் வாரியார் சுவாமிகள்.

எனவே, மனத்தழுக்கு இல்லாதபோது அங்கே இறைவன் உட்காருவான் இறைவன் அமர்ந்த உள்ளம் நல்லதையே நினைக்கும். நல்லதைச் செய்யும்போது அழுக்காறு இருக்காது, அளவுக்கு மீறிய ஆசை வராது, கோபம் குறையும்.

இன்னாச் சொல் எந்நாளும் வெளிப் படாது மனத்தில் வஞ்சகம் அழுக்காறு ஆசை முதலிய மாசுடையவர்கள் கூறும் இனிய சொற்கள் உண்மையான இன்சொல்லாக இருக்காது.

மனத்தில் மாசு இல்லாது கூறும் சொற்களே இன்சொற்களாகும் மனத்தூய் மையை கொண்டே இன்சொல் என்று உறுதி கொள்ளமுடியும்.
எனவே, மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால் இன்சொல் கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை இன்பத்தை அடைந்து வாரியார்

சொல்வது போல நற்கதி பெறுவோம்.
“சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். “
(குறள். 98)


1 Comment

வே.பூங்குழலி பெருமாள் · மே 31, 2020 at 18 h 33 min

அருமை மிக்க நன்றி தமிழ்நெஞ்ச(ம்)ன் ஐயா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »