மேதினம்!
உழைப்பால் பூத்த
மலர்வனம்!
வியர்வை முத்து!
வென்ற
புகழ்ச்சொத்து!
பாடுபடும் பாட்டாளி
பட்ட தொல்லை – நீக்கிப்
பழுத்த கொல்லை!
இரும்புருக்கு ஆலை
முதலாளியின்
இதயத்தை உருக்கிய நாள்!
செங்கொடி!
சூட்டிய திருநாள்! – இன்பம்
மீட்டிய பெருநாள்!
தொழிலாளர்
போராட்டம்! – பெற்ற
தேரோட்டம்!
உப்பு,
சருக்கரையாய்
இனித்த சுவைநாள்!
துயர்விளைத்த
தொழிலகம்!
எழிலகம் ஆனனாள்!
வாடிய நெசவாளர்
வலியே நீங்க
வழியே வகுத்தநாள்!
ஆளுவார்க்கம்
புரிந்த கொடுமை – ஒழிந்து
பொலிந்த பொதுமை!
உழைப்பாளர்
உலகின் முதுகெலும்பு!
உணர்த்திய நன்னாள்!
உரிமைக்குரல்
முழங்கிய தோழர் – பெருமை
வழங்கிய வன்னாள்!
சுற்றிய மாடெனத் – துயர்
முற்றிய மாந்தர் – நலம்
பற்றிய புகழ்நாள்!
வெந்து நொந்த
வேதனை நீங்கி – நலச்
சாதனை தந்தநாள்!
கடும்பணியாளர்
வேலி உடைந்தநாள் – நற்
கூலி அடைந்தநாள்!
அடிமையென வேலை
ஆற்றும் மக்கள் – வென்று
போற்றும் புவிநாள்!
அன்பே தெய்வம்!
உழைப்பே தெய்வம்!
உணர்வாய் மனமே!
உண்மை வாழி!
உயர்ந்தோர் வாழி!
உழைப்போர் வாழி!
பாட்டரசர் கி. பாரதிதாசன்