உழைக்கும் கைகள்
—— உண்மையின் வேர்கள் – இவை
தழைத்தல் இல்லா
—— சருகு இலைகள்.

உலகை உயர்த்த
—— உதித்த மலர்கள் – இவை
உலகோர் உண்ண
—— உதிர்ந்த கனிகள்.

இருளை ஒளியால்
—— நிறைத்த திரிகள் – இவை
திருட்டு உலகில்
—— திணறும் ரணங்கள்.

வியர்வைத் துளியில்
—— விளைந்த விதைகள்ள – பிறர்
துயரம் போக்க
—— தோன்றிய மரங்கள்.

ஓய்தல் இல்லா
—— உயிரின் வலிகள் – என்றும்
சாய்தல் இல்லா
—— சரித்திர மலைகள்.

உழைப்பவன் என்றும்
—— கூரைக் குடிசையில் -அவன்
உழைப்பை உறிஞ்சும்
—— உத்தமர் கோடியில்

உழைப்பைப் போற்றும்
—— உன்னத மனங்கள் – அவை
பிழைகள்  இல்லா
—— பிஞ்சுக் கரங்கள்.

அந்தி  வானைப்
—— பிளக்கும் உளிகள் – வரும்
ஆண்டு முழுவதும்
—— அவனுக்கான நாட்கள்..