ஹைக்கூ
ரசிகுணா
1
ஆடு மேய்த்தவன்
ஓய்வெடுக்கும் போது
துரத்தியது வெயில்.
2
மழையும் வெயிலும்
வேடிக்கை பார்க்கிறேன்
அதற்கிடையே வானவில்..
3
இந்தப் பிரபஞ்சம்
இயங்க மறுத்து விட்டால்
உலகமே மயானம்..
4
பூச்செடி வைக்க
குழி தோண்டினான்
தாத்தாவைப் புதைத்த இடத்தில்
5
கிளிஞ்சல்கள் விற்கும்
சிறுமியின் பை நிறைய
கடலின் வாசனை…
6
மலைக் கோவில்
கூடாரத்தில் வந்தமர்ந்த காகம்
என்ன வரம் பெற்றதோ..
7
இந்த மார்கழிக் காலையில்
நிலவு மறைவதற்கு முன்பே
சூரிய உதயம்…
8
கலவர பூமியில்
மாபெரும் ஆயுதங்கள்
ரோஜாப் பூக்கள்..
9
கல்லறைத் தோட்டத்தில்
யார் அழைத்தது
இந்தப் பட்டாம்பூச்சிகளை…
10
நெடுஞ்சாலை ஓரத்தில்
பழங்கள் விற்கும் சிறுமியிடம்
ஒரு பாடப்புத்தகம்..
11
தென்னங் குரும்பையை
உருட்டி விளையாடுகிறது
ஒரு பூனைக் குட்டி..
12
பக்தர்கள் பசியாறியபின்
பசுவிற்கு உணவாகின்றன
அன்னதான இலைகள்..
13
கூண்டில் இருந்த கிளி
பறந்து சென்ற போதிலும்
அதன் வாசனை மாறவில்லை..
14
ஒரு கூட்டத்தைக் கூட்டியது
குளத்து மேட்டில்
கரையேறிய முதலை..
15
ஒரு மூங்கிலை
வெட்டிச் செதுக்கும் போதே
மகன் வாசித்துவிட்டான்..
16
சில்வண்டின் பாடலை
ரசிக்கும் போது
பூவும் அசைந்தாடுகிறது…
17
அடிக்கடி கண்விழித்தேன்
முற்றுப் பெறாமல்
எத்தனை கனவுகள்..
18
இந்த மயான பூமியில்
கல்லறை அனைத்திலும்
எத்தனை சிலுவைகள்..
19
இரவு முழுவதும்
ஒப்பாரி வைத்தது
தாயை இழந்த குட்டி
20
குளிர் காலப் பூனையொன்று
ஓலமிட்டு அழும்போது
குழந்தை சிரிக்கிறது..
1 Comment
Rasi · ஏப்ரல் 16, 2020 at 15 h 36 min
சிறப்பு வாழ்த்துகள்