தொடர் 6
இதுவரை 3 மோனைகளைப் பார்த்துவிட்டோம். இப்போது மற்றவற்றையும் காணலாம்
4. ஒருஉ மோனை
ஓரடியில் உள்ள முதல் மற்றும் நான்காம் சீர்கள் முதல் எழுத்தில் ஒன்றிவருவது ஒருஉ மோனை எனப்படும்.
எடுத்துக்காட்டு
- அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
அகர – ஆதி ஒருஉ மோனை - கண்கள் வழியே வழியும் காதல்
கருத்தில் சிறந்து மனத்தைக் கவரும்
கண்கள் – காதல்
கருத்தில் – கவரும் ஒருஉமோனை
5. கூழைமோனை
முதல் மூன்று சீர்களில் ஒரே மோனை வந்தால் அது கூழை மோனை எனப்படும் .
எடுத்துக் காட்டு
- கல்வி கற்க கற்க இன்பம்
செல்வம் சேரச் சேர இன்பம்
முதலடியில் க கூழை மோனையாகும்
இரண்டாவது அடியில் செ – சே – சே கூழை
மோனையாம்
- என்னை ஏற்க ஏனோ மறுக்கிறாய்
பெண்ணே பித்தனாய் பிதற்றுகின் றேனே
முதலடியில் எ மற்றும் ஏ
இரண்டாவதடியில் பெ,பி,பி கூழை மோனையாம்
6. மேற்கதுவாய் மோனை
1, 3, 4 ஆகிய சீர்களில் முதல் எழுத்துகள் ஒன்றி வந்தால் அது மேற்கதுவாய் மோனை எனப்படும்.
எடுத்துக்காட்டு
அன்பெனும் மனத்தை ஆண்டவன் அருள்வான்
இன்பமும் சுரக்கும் ஈகையன் இறைவனே
7. கீழ்க்கதுவாய் மோனை
1, 2, 4 ஆகிய சீர்களில் மோனை வந்தால் அது கீழ்க்கதுவாய் மோனை எனப்படும்.
எடுத்துக்காட்டு
தர்மம் தலைகாக்கும் மறவாதே தாயே
கர்வக் களைவரினும் ஏங்கிநிற் காதே
8. முற்றுமோனை
ஓரடியின் அனைத்து சீர்களிலும் ஒரே எழுத்து முதலில் வந்தால் அது முற்று மோனையாகும்
எடுத்துக்காட்டு
1.
கற்க கசடற கற்பவை கற்றபின்
2.
அன்பே அருமருந்தே ஆசை அற்புதமே
இன்பம் ஈகையுடன் எடுத்துவக்கும் இன்முகமே
இதுவரை எட்டு வகையான மோனைகளைப் பார்த்து விட்டோம்
மோனை பற்றிய தெளிவு தங்களுக்குக் கிட்டியிருக்கும் என நம்புகிறேன்.
இவை அனைத்தும் தாங்கள் தெரிந்து வைத்திருத்தல் நலம்
பெரும்பாலான கவிதைகளுக்கு
அடிஎதுகை
பொழிப்பு மோனை
இவை இரண்டு இருந்தாலே போதும்
கவிதைகள் நிச்சயமாக மிளிரும்
அடுத்து இயைபு பற்றி காண்போம்.