பிரான்சு நாட்டில் வாழும் தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் அனுப்பிய புத்தக கட்டொன்று கிடைக்கப்பெற்று பிரித்தால் மிக அருமையான வடிவமைப்பில் ஒரு புத்தகம். சுவிஸ் நாட்டில் வசிக்கும் சகோதரி பைந்தமிழ்ச்செம்மல் நிர்மலா சிவராசலிங்கம் அவர்களது புத்தகம். மரபுக்கவிதை யாப்பதில் சிறந்து விளங்கும் சகோதரி அவர்களின் ஹைக்கூ கவிதைப் புத்தகம். அதுவும் இருமொழிக் கவிதைத் தொகுப்பு. ஆம் நூறு ஹைக்கூக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருமொழிகளிலும் நிரம்பிய புத்தகம்.

வடிவமைப்பே கவிதைகளைப் படிக்கத் தூண்டுகிறது.

ஓடைநிலா என்பது அந்நூலின் பெயர். அட்டையில் உள்ள நிலா நம்மை உள்ளே அழைக்கிறது வாசிக்க. நண்பர்கள் கா.ந. கல்யாணசுந்தரம், அனுராஜ் அவர்களின் அணிந்துரை வாழ்த்துரையோடு தொடங்குகிறது புத்தகம். ஆங்கிலத்தில் இவற்றை மொழிமாற்றம் செய்த திரு புகழேந்தி நண்பர் இளைய பாரதி கந்தகப்பூக்கள் உள்ளிட்டோரின் வாழ்த்துரையும் உண்டு.

ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டிரண்டு கவிதைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அழகிய படங்கள் பின்னணியில் வடிவமைக்கப் பட்டுள்ளன. வண்ணப்பிரதியாக அச்சிட வடிவமைக்கப்பட்டுள்ளது.

கவிதைகள் அனைத்து தடங்களிலும் பயணிக்கின்றன. இயற்கை காட்சிகள் சமூக அவலங்கள் போன்று அனைத்தையும் தொட்டுச் செல்கின்றன. பெரும்பாலும் இயற்கை சார்ந்த கவிதைகளே அதிகம்.

ஹைக்கூ என்பது ஜப்பானிய கவிதை வடிவம். இது 5/7/5 என்ற அசைக்கட்டுப்பாடுகள் உடையது. முதல் இரண்டு வரிகள் ஒரு செய்தியையோ காட்சியையோ சொல்ல மூன்றாவது வரி அதற்கு மாறுபட்ட எதிர்பாராத செய்தியைச் சொல்லும். முதலிரண்டு வரிகள் ஒரு செய்தி கூறும். இரண்டும் மூன்றும் வேறு ஒரு செய்தி கூறும். இதில் இரண்டாவது வரி மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும். இதுவே ஹைக்கூவின் உத்தி.

ஆனால் அசைக்கட்டுப்பாடு தற்போது தமிழ்க்கவிஞர்களால் பின்பற்றப்படுவதில்லை என்பதை ஹைக்கூ கவிஆளுமைகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மூன்றுவரிக் கவிதையே ஹைக்கூ என ஆகிப் போனது.

கவிஞர் நிர்மலா சிவராசசிங்கம் அவர்களின் நூலிலும் இந்த அசைக் கட்டுப்பாடு இல்லை. ஆனால் ஹைக்கூ வுக்கான உத்தி கடைப்பிடிக்கப் பட்டுள்ளது. பெரும்பாலான கவிதைகள் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. சூரியன் அலைகள் கடல் காடு மரம் என்றே கவிதைகள் சுற்றி சுற்றி வருகின்றன. ஒன்றிரண்டு சமூகக் கருத்துகளும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன. விவசாயி உழைப்பாளி மணற்கொள்ளை போன்றவையும் கவிதைகளில் பிரதி பலிக்கின்றன.

படகு சவாரி
நன்றாக இருக்கிறது
வானில் முகில் கூட்டம் (9)

காய்கறிகளின் விலை
வீழ்ச்சி அடைகிறது
சந்தையில் கூட்டம் (26).

ஓட்டப்பந்தயம்
விறுவிறுப்பாக நடக்கிறது
கடை வியாபாரம் (27)

பட்டாசு சத்தம்
குறைந்துகொண்டே போகிறது
குழந்தையின் அழுகை ( 34)

வண்டிச்சக்கரம்
ஓடிக்கொண்டிருக்கிறது
வியாபாரியின் வாழ்க்கை (36)

விழாக்கால விடுமுறை
மகிழ்ச்சியைத் தருகிறது
மகனின் வருகை (49)

சிறுவர் உழைப்பு
குறைந்து போகிறது
பள்ளி வாழ்வு (56)

வயிற்றுப்பசி
குறைந்து செல்கிறது
குடத்தில் நீர் (67)

அடர்ந்த காட்டில்
நிறைந்து இருக்கின்றன
காலடித்தடங்கள் (88)

மரத்தடி நிழலில்
படுத்து உறங்கும்
வேர்கள் (89)

 

இவ்வாறு கவிதைகள் நம்மனதை அள்ளிச் செல்கின்றன. ஹைக்கூக்களுக்கு கற்பனை தேவையில்லை; இயற்கையான நிகழ்வுகளை அப்படியே சொல்வதுதான் ஹைக்கூ கவிதை; ஆனால் இயற்கை நிகழ்வு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். அட என்று படிப்பவரைச் சொல்ல வைக்க வேண்டும். இவற்றை கவிஞர் நிர்மலா அவர்களின் கவிதைகள் செவ்வனே செய்திருக்கின்றன. கற்பனை இல்லாத கவிதைகள். சில கவிதைகள் மிகச் சாதாரண செய்திகளையும் சொல்லிச் செல்கின்றன.

பாராட்டத்தகுந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள். நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் தமிழ் வரிகளுக்கு நேரடியாக ஆங்கில வரிகள் இல்லாது சற்றே இடம் மாறி இருந்தாலும் அருமையாகவே இருக்கின்றது. வாழ்த்துகள்!

ஆசிரியர் :
நிர்மலா சிவராசசிங்கம்
மின்னஞ்சல் :
sivamnirmala@gmail.com

பதிப்பாசிரியர் :
தமிழ் நெஞ்சம் அமின்
editor@tamilnenjam.com


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »