நீரின்றி அமையாது உலகு என்பதுபோல்
பெண்ணின்றி அமையாது நல்வாழ்வு.!
சக்தியின்றிச் சிவனும் இல்லை என்றுரைத்து
சிவனும் சொன்னார் நெற்றிக் கண் திறந்தே.!
பத்துமாதம் சுமந்துகாக்கும் பொறுமை கொண்டு
பக்குவமாய் உணவை பண்போடும் அன்போடும்
பாசத்தோடு குழைத்து படைக்கும் குணவதியாய்
பார்போற்றும் உன்னத படைப்பு பெண்ணாவாள்.!
தங்க மகளாய் பிறந்து தரணியில் மிளிர்ந்து
தாயாக தோழியாக தாரமாக சகோதரியாக,
தனித்துவமாய் வளர்ந்து உயர்ந்து நின்று
தன்வளர்ப்பில் தவறு நேராதுக் காத்திடுவாள்.!
குடும்பத்தை கோயிலாக குலம்தழைக்கச் செய்வாள்
கொண்டவனை தெய்வமாகப் பெருமைக் கொள்வாள்.!
குழந்தைச் செல்வங்களை ஈன்றெடுத்து மகிழ்வோடு
அன்பும் அறிவும்தந்து மெழுகாய் உருகிநிற்பாள்.!
சரசுவதியாய் லெட்சுமியாய் பார்வதியாய் என்றும்
மனைவிளங்கச் செய்து தோள்கொடுத்து நிற்பவள்.!
அரவணைத்து ஆறுதலாய் அன்னையாக வந்தவள்
அம்மா என்றழைக்க அபயம்தரும் சக்தியாவாள்.!
மாண்புடைய மகளிர் மகத்துவம் உணர்ந்து
கண்ணில் இமையாய் கருத்தோடு காத்திடுவோம்..!
மண்ணில் இன்னலின்றி மகிழ்வோடு வாழ
பெண்மையை போற்றி மதித்து மகிழ்வோம்.!
1 Comment
நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் · மார்ச் 8, 2020 at 15 h 20 min
இனிய வணக்கத்துடன் தமிழ்நெஞ்சம் சகோதரர் அவர்களுக்கு மகிழ்வுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. வாழ்த்துகள்.