கடல் அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தது. கொஞ்சம் சிணுங்கலுடன் சேலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு கரை வந்தாள். கடல்மணலில் உக்காந்திருந்த கட்டுமரத்தில் அவள் உக்காந்தாள்.

திரும்ப கடலை வெறித்தாள். இந்தக் கடல்தானே தன் வாழ்வைப் புரட்டிப் போட்டது. நிலைகுலையச் செய்தது. என்றாலும் அவளுக்கு ஏனோ அதன்மீது கோபம் வரவில்லை. இன்று ஏனோ புதுவிதமான உணர்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

அவள் அருகில் வந்து நின்றான் கதிர். இவன் தன் பழைய காதலைச் சொல்லி சிலாகிக்க வந்திருக்கானோ அல்லது தன் பழைய காதலைச் சொல்லிப் புதுப்பிக்க வந்திருக்கானோவென நினைந்து குழம்பினாள். அந்த நேரத்தில் கடல் கரையை அடித்து வீழ்த்த , நண்டு விரைந்தோடி தன் குழிக்குள் பதுங்கிக் கொண்டது.

‘‘என்ன செம்பூ நல்லாருக்கியா?’’

‘‘ம், நீ’’

‘‘ஏதோ இருக்கேன்’’ என்று சொல்லியவன் மெல்லியக் குரலில் ‘‘செம்பூ கொஞ்சநாளா உன் ஞாபகம் அடிக்கடி வருது, அதான் உன்னப் பாக்கலாம்னு வந்தேன்’’

‘‘நானும் உன்னை பாக்கனும்னு நெனப்பேன்… ஆனா..’’

‘‘அந்த நாட்களை மறக்க முடியலடி, அதனாலதான் எப்படியாச்சும் உன்னைப் பாத்துப் பேசணும்னு வந்தேன், நீ இராத்திரி எங்க தூங்குவ’’ சடாரென கதிர் கேட்டதும் அதிர்ந்தாள்.

‘‘எங்கேன்னா…’’

‘‘இல்ல, இரவுல சந்திக்கலாம்னுதான்’’ கதிரை ஒரு மாயக்கள்ளனாய் உணர்ந்தாள்.

‘‘இல்ல கதிரு, நான் எப்படியெப்படியோ நெனச்சிட்டேன் போல… நீ ஒன்னு செய்யீ, மொதல்ல எனக்குத் தாலி கட்டு, பிறகு இரவென்ன பகல்லயே வரேன்’’ஆற்றாமையும் கோபமும் கலந்து கூறினாள்.

‘‘ஏய், எனக்குக் கல்யாணமாகி ரெண்டு புள்ளவ இருக்கு தெரியும்ல உனக்கு, நீ தாலி அறுத்துட்டு வந்து நிக்கறவ… ரொம்ப பண்ணாதே’’ பேசிக்கொண்டு அவள் கையை இறுகப் பற்றினான்.

‘‘ஆம்பள புத்திய காட்டிட்டேல்ல, நம்ம தடம் மாறிப் போன காதல பேசித் தீக்க வந்திருப்பேன்னு நெனச்சேன்.. எல்லா ஆம்பள மாதிரி சட்டுனு என் ஒடம்புக்குள்ள நொழயப் பாக்குற’’ வெடுக்கென பற்றிய கையைத் தட்டிவிட்டுச் சற்றே கோபத்தோடு பேசிவிட்டு அவ்விடத்தை விட்டு வேகமாக நடந்தாள். அப்போது அவள் மாமங்காரன் ஆறுமுகம் எதிரில் வந்து கொண்டிருந்தான். கதிரிடம் பேசியதைப் பார்த்திருப்பானோ என எண்ணியபடியே நடந்தாள். மாமங்காரன் தன்னை சாடையாகப் பார்ப்பதாக உணர்ந்தாள். கடல் எப்போதும்போல் நண்டைத் துரத்துவதிலேயே குறியாக இருந்தது.

தான் உண்மையில் சொள்ளைதானா? நண்டுல ஒரு வகையத்தான் சொள்ள நண்டுனு சொல்வாங்க. நண்டுக்கு அதன் ஓடுதான் வலிமை. அவ்ளோ சீக்கிரம் நண்டு ஓட்ட பேக்க முடியாது. களிநண்டு சொல்லவே வேணாம். அவ்ளோ கஷ்டம் கடிக்க. ஆனா சொள்ள நண்டு அப்படியில்லே. அதன் ஓடு கடினத்தன்மையோட இருக்காது. மேலே நெகிழித் தாளைத் தலமேல கவுத்தனா போல இருக்கும். கொழம்பு வச்சாலும் ருசிக்காது. உள்ளே சதையும் அவ்வளவா இருக்காது. வேற வழியில்லாமத்தான் அத சமைச்சி சாப்பிடுவாங்க.தனக்கேன் இந்தப் பேர் வந்தது?

எல்லாரும் சொள்ளைன்னு கூப்பிடறப்ப அவன் எப்படி கூப்பிட்டான்? . செம்பூ ன்னு கூப்பிட்டான். தன் பெயர் செம்பூவை என்பதே மறந்து வெகுநாளாயிற்று. ஊர்களில் பெத்தவங்க வச்ச பேர் ஒன்னுன்னா பட்டப்பேர் வச்சிக் கூப்பிடுறது வேறாயிருக்கும். அது வழிவழி வந்த மூதாதையர் பேராயிருக்கலாம், பழக்கவழக்கத்த வச்சிக் கூப்பிடுற பேராயிருக்கலாம், இப்படி நெறய காரணம் இருக்கு.. தனக்கு என்ன காரணம் இருக்கமுடியும்? யார் என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு, அதிர்ந்து பேசாததனாலயா? தான் எதுக்கும் லாயக்கில் லேனு அவங்க நெனக்கறதாலயா? தனக்குள்ளே பல கேள்விகளைக் கேட்டபடி வீடு கிட்ட வந்து சேர்ந்தாள்.

‘‘அடி சொள்ள, எங்கடிபோய் தொலஞ்ச, உன் அண்ணிக்காரி உன்ன மீன் ஆயச்சொல்லி தேடிக்கிட்டிருந்தா…சீக்கிரம் போ, காண்டு வந்து கத்தப்போறா’’

வேலியாண்ட ஒக்காந்திருந்த அவள் அம்மா அதட்டி அனுப்பினாள். திண்ணையில் பக்கத்துவூட்டு பவுனம்மா அக்காவிடம்… ‘‘பொழுது போயி எம்மா நேரம் காணாம். எங்க போய் தொலஞ்சாலோ, எப்பப்பாரு மேச்சல்லயே இருக்கறது. புருசன சாவக்கொடுத்தவ மாதிரியா இருக்கா. சோடிச்சிகிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு கெளம்பிடறே.. அவமானமா இருக்கு..’’ அண்ணிக்காரி சொல்வதற்குள் இவள் கொட்டாயில் நுழைந்து குண்டானில் மீன் எடுத்து வந்து மீன ஆய உக்காந்தாள்.

‘‘பாப்பா… இம்மாநேரம் எங்க போச்சாம்’’ எளக்காரமாகக் கேட்டாள் அண்ணி.

‘‘எம்மவள காணாம், கடலாண்ட வெளயாடறன்னு சொல்லிச்சி பச்சமாக்கா..அதான் தேடிகிட்டுப் போனேன். .’’

‘‘நல்லா இருக்கு நாயம் நடுவுல இருக்கு சாயம்… இம்மாநேரம்.. இந்தத் திண்ணைல படுத்து கெடந்தா உம்மவ..இப்பதான் பச்சம்மா கடக்கிப் போயி மாங்கா வாங்கியாற அனுப்பியிருக்கேன்’’ நக்கலாகப் பேசினாலும் ஒரு வார்த்தை எதித்துப் பேசமாட்டாள்.

‘எல்லாரையும போல ஏன் நான் தல சீவக்கூடாது? பொட்டு வக்கக்கூடாது? பூ வைக்கக்கூடாது? ஏக்கமாயிருந்தது அவளுக்கு. மத்த பொண்ணுகளப் போல் சோடிச்சிகிட்டுப் போகணும்னு ஆச அடிக்கடி வருவதை உணர்ந்தாள். அதுகூட வேறொரு ஏக்கமும் வருது. அதைக் கண்டு தனக்குள்ளே பயந்தாள். அது தன்னை விழுங்கிவிடக்கூடும் என்பதாலும் இருக்கலாம். ஆனா அந்த ஆச தன்னை இரவிலும் தூக்கத்திலும் துன்பப்படுத்துவதை உணர்ந்தாள். அத வெளியில் சொல்லி ஆறுதல் அடைய முடியாத ஒன்று என்பதையும் அறிந்திருந்தாள்.

பத்தாவது படிக்கறப்ப இந்தக் கதிர காதலிச்சேங்கறதாலயே தன்னைக் கேக்காம அடியும்புடியுமா அந்த மரக்காணத்தானுக்குக் கட்டிவச்சாங்க. அழுதுபுரண்டபோதும் ஒத்துக்கிடலை. கல்யாணமாகி வருசம் ஒன்னாகிறதுக்குள்ள போட்டுக்குப் போயி, புயல்ல சிக்கிக் கடல்ல கரைஞ்சிப் போயிட்டாங்கற செய்தி மட்டுந்தான் வந்தது. அவன் காணாப் பொணமாகிட்டான்… கருமாதி செய்ய கையோடு பொறந்த வூட்டுக்கு வந்தவதான். தணல்ல வெந்து தணியறாப்போல அவ வாழ்க்கை அமைஞ்சிட்டுது. ஆமாம் அவநெல தலகீழா தொங்கற வௌவாலாட்டமா இப்படி மாறிடிச்சேன்னு கவலைப்பட்டாள்.

புருசன்வீட்ல வாழ்ந்தாள் அவ்ளொதான். ஒரு வருசத்துல வாழ்ந்த வாழ்க்கை பெரிய எந்த ஞாபகத்தயும் தேக்கி வச்சில்ல. ஆனா தாலியறுத்துக் கருமாதி முடிச்சி தாய்வீட்டுக்குக் கூட்டியாரப்ப அவனோட கொழந்தய சொமந்திருப்பது கூட அறியாதவளாயிருந்தாள். நாள்போகப் போக குழந்தையை உணர்ந்தாள். இப்ப அந்த மகளுக்கு ஐந்து வயசு.

என்ன படிச்சிருக்காள் வேலைக்குப் போவ. அடிக்கடி அம்மாவும் அண்ணியும் திட்டித் தொலைக்கறாளுக. அங்க நின்னு என்னா சிரிப்பு. ஆம்பள பையன்கிட்ட என்றால் பேச்சுன்னு. முண்டச்சியாத்தான் போயிட்டா,அதுக்குன்னு யார்ட்டயும் பேசக் கூட முடியாத அளவுக்குச் சொள்ளையாயிட்டோமே என மனசுக்குள் அழுதாள்.

இத்தனைக்கும் இவ வாழ்க்கைய யார் முடிவு செய்யறா. அம்மாளா, அண்ணனா, அண்ணியா யாருன்னே தெரியாத ஒரு கொழப்பதுல அல்லவா இவ வாழ்க்கை தொங்கல்ல ஆடுது. கட்டிக்கத் துணி, மூணுவேள சோறு, அதான் இவளோட சொர்க்கம். மத்த பொண்ணுங்கள போல ஒரு சினிமாவுக்குப் போகணும், பீச்சுக்குப் போகணும்னு ஆசக் கெடந்து அல்லாடத்தான் செய்யுது. கேட்க பயந்தாள். கேட்டால் குதர்க்கமா பேசுவா அண்ணிக்காரி.

கதிராவது பழைய காதலை நினைத்துத் தன்னைத் தாங்கவானென்ற சிறிய அல்பாசையிலத்தான் அவனைச் சந்தித்தாள். ஆனா அவளுடைய ஆசயில மண் விழற மாதிரி கேட்டதை அவளால் ஒப்ப முடியலை. காலம் மனுசங்கள எப்படி மாத்துது. அன்னக்கி உருகி உருகி காதலிச்சவனா இன்னிக்கி இப்படிப் பேசிட்டான். ஏதேதோ மனசுக்குள் ஓட மீன் ஆய அருவாமனையைத் தேடி எடுத்தாள். இந்த அருவாமன ஒரு மொக்க அருவாமன.காஞ்சப் பீயக் கூட கருக குனு வெட்டாது. இந்த அருவாமன மாதிரிதான் நாமளும் ஆயிட்டோமா என எண்ணிப்பாத்தாள்.

‘‘கொழம்பு சுண்டிப் போவப் போவுது, எங்கயும் மெதக்காம, சீக்கிரம் ஆஞ்சி எடு.’’ அண்ணியின் குதர்க்கமான வார்த்தைக்கு மறுபதில் பேசியதேயில்லை. பேசத் தோணும், ஆனாலும் ஒரு பயம் மனசுக்குள் வரும். அவ வாயத் தொரந்தா காந்தாரி மாதிரி கத்திக்கிட்டே இருப்பாள். அண்ணிக்காரி என்ன பண்றான்னு சாடையா பாத்தாள். அவ திண்ணையாண்ட ஒக்காந்து உதிரிப் பூக்கட்டிக் கொண்டிருந்தாள்.

அந்தப் பூ தன்னைப் பத்து படுகேவலமா சிரிக்கற மாதிரி தோணியது இவளுக்கு. பூமீது கொள்ளை ஆசை. தழைய தலைய பொடவ கட்டி, வகிடெடுத்து தலைய சீவி, குஞ்சலம் வச்சிக் கட்டிக்கிட்டு மல்லியப் பூவ தலை நிறைய வச்சிக்கிட்டு, எதுத்த விட்டு ஆனந்திய மாதிரி தன் வாழ்க்கை இனி மாறாதா என ஏங்கினாள். தன் புருசனோட வாழ்ந்த அந்த ஒரு வருச வாழ்க்கை அத்தனை இன்பம் நெறஞ்சதா இருந்திருக்கவில்லை. நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாளைத் தள்ளியதுதான் மிச்சம். நெனச்சிப் பாத்து சந்தோசப்படவோ துக்கப்படவோ முடியாத அளவுக்குத்தான் இருந்தது. எப்படியோ வாழ்ந்தா . அவ்வளவே.

‘‘யம்மா, இந்தா மாங்கா. பச்சம்மா ஆயால்ல கொஞ்சம் மீன் கொழம்பு கேட்டாங்க’’ மகள் அஞ்சனா கிண்ணத்தையும் மாங்காவையும் தன்முன் நீட்டினாள்.

‘‘இதக் கொட்டாயில போயி வையிடி, இம்மாநேரம் எங்க போன’’

‘‘தோ.. பார்ரா… இவ இம்மா நேரம் எங்கயோ போயிட்டு மவள கேக்கறாளாம் மவளை. பச்சம்மா கொழம்பு கேட்டாளா..இதுக்கொண்ணும் கொறச்சலில்லே. இவளும் மூளி, அவளும் மூளி ரெண்டுக்கும் தோது போ» சிரிச்சிக் கிட்டே கரிச்சிக் கொட்டினாள் அண்ணி. அம்மா ஏனோ இவளுக்காக ஒருபோதும் வக்காலத்து வாங்கிப் பேசியதே கெடயாது. அப்படியே அம்மா கொணந்தான் தனக்குமிருக்கோவென எண்ணினாள். அவளிடம் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசினா ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டித் தீத்துடுவா அண்ணி. எங்கேர்ந்துதான் பிரவாகம் எடுக்குமோ தெரியாது. அத்தனை நுணுக்கமா கொற சொல்லுவா. அதுக்கு பேசறதவிட பேசாம இருந்துடறதே தேவலைன்னெதான் இவள் வாய்மூடிக் கெடப்பாள். தாங்காத துயரம்னா அடுப்பங்கர கொட்டாயில போயி அழுதுத் தீர்ப்பாள்.

‘‘எங்க அந்த சனியன், எங்க அந்த சனியன்’’ கோபமா கத்திகிட்டே திண்ணைல ஒக்காந்தான் அண்ணனங்காரன். மீன் ஆஞ்சி கொட்டாவுக்குள் எடுத்துக் கொண்டு போன அவளுக்கு நடுக்கமெடுத்தது. ஏன் இப்படிக் கத்தறான்.என்னா தப்பு நடந்துட்டுது அவளுக்குப் புரியலை.ஆறுமுகம்

‘‘சொள்ளை இத்தனை நேரம் எங்க போச்சுனு கேளுடி. கடலாண்ட எதுக்குப் போச்சின்னு கேளு. எனக்கு மானம் போவுது. இந்த மூளியால.. ஏ… யம்மா, உம்மவ லட்சணத்த பாரு… எவனான்ட பேசிட்டு வந்துச்சின்னு கேளு. இது லாயக்குப்பட்டு வராது. அவனவன உன் தங்கச்சிய அங்கப் பாத்தேன். இங்கப் பத்தேங்கறானுவ. நான் வேட்டிக் கட்டிக்கறதுக்குப் பதிலா பொடவை கட்டிக்கிட்டுப் போயிடலாம். அதக் கூப்டு என்னான்னு கேளு.’’ ஆங்காரமாய்க் கத்திக் கொண்டிருந்தான் அண்ணங்காரன் ராசு.

‘‘ஓ.. இதான் விசயமா, இவ்ளோ நேரம் எங்க போனான்னு அலைஞ்சிகிட்டிருந்தேன் நானு. ஏய்.சொள்ள வெளில வாடி, எங்க பூந்துகிட்டிருக்கே, கோட்டானாட்டம் எங்க கழுத்த அறுக்க வந்திருக்கு.’’ கூட சேந்து கத்தினாள் அண்ணி.

மெதுவாக கொட்டாயிலேர்ந்து வெளிய வந்தவள கண்டதும் திண்ணய விட்டு ஓடியாந்து அண்ணன் ‘ப்ளார்‘ என அறைஞ்சான். செம்பூக்கு தலை சொழன்றது. அப்படியே தலைய புடிச்சிகிட்டு கொண்டே வாசல்ல ஒக்காந்தா. அம்மாக்காரி ஒப்பாரி வச்சி ஓங்கி அழ ஆரம்பிச்சிட்டா. அவளால அதைத்தான் செய்யமுடியும். அவளும் மவளைப் போன்று கதியற்றுக் கெடந்தாள்.

‘‘ஒப்பாரிய நிறுத்து மொதல்ல. உம்மவ ஒழுங்குக்கு வராது இனி. எத்தினியோ மொற கண்டிச்சிப் பாத்துட்டேன். மாமா பக்கிரி எத்தினியோ தடவை சொல்லிச்சி நானும் சொல்லிப்பாத்துட்டேன். ஊரே காறித் துப்புது உம்மவளப் பாத்து, மானம் போயி உசுரு வாழறதவிட பேசாம செத்துப் போவ சொல்லு’’ ரொம்பவும் காட்டமாகப் பேசினான்.

அவளுக்குப் புரிஞ்சிப் போனது. இந்த மாமங்காரந்தான் வேட்டு வச்சிருக்கான். அவனுக்கு அவ கெடக்கலைனு ஆதங்கம். ஒருநா எல்லாரும் கூத்துப் பாக்கப் போயிட்டப்ப தனியா கொட்டாயில படுத்துக் கொடந்தா இவ. பூன மாதிரி கதவத் தொறக்க முயன்றான் .

‘‘யாரு’’

‘‘நான்தான் … மாமா ஆறுமுகம்’’

‘‘என்ன இந்நேரத்துல மாமா’’ இரவு மணி பத்து இருக்கும், கதவைத் திறந்தாள்.

‘‘ஒனக்கு ஒடம்பு சரியில்லேனு அக்கா சொல்லிச்சி, அதான் வந்தேன்’’ கதவ தொறந்ததும் உள்ளே போய் ஒக்காந்தான். அப்படியே நலம் கேட்டுட்டுப் போயிடுவார்னு பாத்தா வூட்டுக்குள்ளே வந்து ஒக்காந்துட்டாரே. என்ன பண்றதுன்னு புரியாம நின்னாள்.

‘‘வா, இங்க ஒக்காரு’’, தன்னருகில் ஒக்காரச் சொன்ன மாமாவைப் பாத்து மொறச்சாள். தன் அப்பனைவிட பெரியவன் இந்தாளு. யாருமில்லா இந்த நேரத்துல தாங்கிட்ட பேச என்ன இருக்கு என மனதிற்குள் பொருமினாள்.

‘‘அட, வா ஒக்காரு, உனக்கு என்னா வேணும் சொல்லு, நான் பாத்துக்கறேன் உன்னை.உம்மவளுக்கும் செய்ய வேண்டியத செய்யறேன். நீதான் வேலக்கி வித்தக்கிப் போவாம எவ்ளோ கஷ்டப்படுறேன்னு தெரியுது சொள்ளை. நான் இருக்கேன். கவலப்படாதே’’ நின்னுகிட்டிருந்த அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

‘‘மாமா எந்திரி மொதல்ல, வூட்டுக்குப் போ..இப்படி மோசமான நடந்தா கத்திக் கூப்பாடு போடுவேன்.. போ… போயிடு.. ’’இவளுடைய கண்டிப்பான வார்த்தயக் கேட்டதும் எழுந்து போயிட்டான். அதிலேர்ந்து தன் அண்ணங்கிட்ட இல்லாதததையும் பொல்லாதததையும் சொல்லிக் கொண்டிருக்கான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டாள்.

வீட்டில் எப்படியாவது தெனம் ஒரு சண்டை நடக்க இவந்தான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டாள் . இதை எப்படி தன் குடும்பதுல சொல்ல முடியும்? முடியாது. அப்ப இந்த மாமங்காரன் வச்ச வத்திதான் இப்பக் கொழுந்துவுட்டு எரியுது. தான் இனி இதுலேர்ந்து மீள வழியில்லையென நினைக்கும்போது கண்களில் கடல் பெருகியோடியது.

‘‘அழுவறத பாரு… சனியன் செத்தவங் கூடயே போய் தொலஞ்சிருக்கலாம், என் மானத்த வாங்குறதுக்குன்னே வந்துருக்கு. யம்மா, நீ சொல்லு… சோறு தண்ணிக்குக் கொறவச்சமா.. துணிமணிக்கு கொற வச்சமா… இது மவளுக்கு ஒன்னுஞ் செய்யாம வுட்டுட்டமா.. சொல்லும்மா, வேற என்னா பண்ணலாம் இதை’’ கடுகடுப்புடன் பேசிய அண்ணனை ஏறெடுத்துப்பார்த்தாள்.

‘‘ஒண்ணு பண்ணலாம்னா’’ சொல்லி விட்டு எல்லாரையும் பார்த்தாள்.. ஏதோ சொல்ல வருகிறாளென அண்ணன், அண்ணி, அம்மா, தன்மகள் அனைவரும் திரும்பிப் பார்த்து உறுதியாகச் சொன்னாள்.

‘‘என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுங்க’’ திடமாகச் சொன்னாள். ஒரு நிமிடக் காற்று மூச்சுப் பேச்சற்று நின்றது.

Categories: சிறுகதை

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »