‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து, ராகம் போட்டு பாடிக் கொண்டே, முத்தழகி கட்டிய பாத்தியில் நாத்தை நட்டுக் கொண்டிருந்தாள். வேலை ஒரு பக்கம் இருக்க பாட்டும், பேச்சும் சுவராசியமாய் நடந்து கொண்டு இருந்தது.

‘‘ஏண்டி முத்தழகு, என்ன இங்கன வந்திருக்கவ, நீ இங்கன வந்தது உங்க அண்ணனுக்கு தெரியுமா?’’ என்று கருத்தம்மா கேட்க,

‘‘ஸ்ஸ்…மெல்லப் பேசுக்கா.. எங்க அண்ணனுக்கு தெரிஞ்சா விடுமா? அண்ணன் ஊருல இல்ல..’’ என்று நிமிராமல் வேலையில் கருத்தாய் பதில் சொன்னாள் முத்தழகு.

‘‘அது சரி. உங்க அண்ணன் முத்தரசு, நீ கூலிக்கு வேலை செய்யிறனு தெரிஞ்சா வானத்துக்கும் பூமிக்கும்ல குதிக்கும்’’

‘‘குதிக்குமாவா….? ஆத்தி, என்னைய வெட்டி பொலி போட்ரும்’’.

‘’பின்ன எதுக்குடி வந்தவா…?’’

‘’அது வந்து,,, என் மாமே கதிர பார்க்கதே வந்தேன். வேலைக்கு வந்த சாக்குல அவங்க காட்டுல அத பார்த்துக் கிட்டே இருக்கலாம் இல்ல கருத்தம்மா.’’

சொல்லி முடிக்க கதிர் காட்டுக்கு வர ‘’ஸ்.. வரான்’’ என்று முணு முணுத்தப்படி தலை நிமிராமல் சொன்னாள் கருத்தம்மா.

‘‘யாரது? நசநசன்னு பேசிட்டு.சோலிய பாக்க வந்தம்மா,,, பாத்தமானு இல்லாம என்ன பேச்சு வேண்டிக் கெடக்கு..?’’ என அதட்டினான்,

‘‘யாரது புதுசா இருக்கு, அட அடே’’

‘‘ஆத்தாடி..! அத்தி பூ போட்ட அதிச யமா பொறந்தவ, கதிர் காட்டுக்கு கூலிக்கு வந்திருக்கா. எகத்தாளமாய்ப் பேசினான்’’

‘‘இந்தா புள்ள,,, என்ன மொறப்பு எல்லாம் பயங்கரமா இருக்கு…?’’

‘‘உனக்கு தேவை கூலிக்கு ஆளு எனக்கு தேவை கூலி அந்த மட்டும் நில்லு. எங்க அண்ணன மருவாதி இல்லாம பேசுன, கருக்கருவாளாலேயே கழுத்த அறுத்து புடுவேன் பாத்துக்கோ…’’ அவள் எகிற அங்கிருந்து நகர்ந்தான் கதிர்.

‘‘அவனோடு முறச்சிக்கிட்டாலும் அவன் போவதையே பார்த்தவள். அவளுக் குள்ளையே ரசித்துக் கொண்டாள். இருக்காதா பின்னே, கதிரை பார்க்க தானே வேகாத வெயில்ல காய்ந்து சோலி பார்த்துக் கொண்டிருக்கிறாள்.’’

கதிர்… முத்தழகியின் அண்ணனிடம் கூலிக்கு வேலை செய்தவன் தான். தன் முயற்சியினாலும், உழைப்பினாலும், கவன மாக படிப்படியாக முன்னேறினான்.

இது முத்தரசுக்கு பிடிக்கவில்லை. இவனால் தான் தன் வருமானம் பாதித்ததாய் கதிர் மேல் சிறிதும் பற்றின்றி போட்டியும், பொறாமையும் கொண்டிருந்தான் முத்தரசு. அதன் விளைவே கதிரை முத்தரசுக்கு பிடிக்காமல் போனது. அவனைக் காணும் போதெல்லாம் ஏச்சும், பேச்சும், சண்டை யுமாய் இருந்தது.

ஆனால் முத்தழகு அப்படியில்லை கதிரைக் காணும் போதெல்லாம் புன்னகை யும் காதலும் ஊற்றெடுக்கும், வெளியே காட்டிக் கொள்ள மாட்டாள்.

தங்கச்சிக்காக எதைக் கேட்டாலும் செய்வான் முத்தரசு. அவனை பொறுத்த மட்டில் முத்தழகு தான் அவனுக்கு எல்லாமே.
இதுவரை அவளும் அது வேணும் இது வேணும் னு எதையும் கேட்டதில்லை.

கதிருக்கு மனம் கனத்திருந்தது. அக்கால கல் கட்டிடமும் அவன் வீட்டு மரக் கட்டிலில் தன் கைகளையே தலையணையாக்கி, மேற் கூரையை வெறித்தப்படி படுத்திருந்தான்.

அவனை உறவென்று கொண்டாட ஊரில் அத்தனை பேர் இருந்தாலும். அவனுக் கென்று பாசமாய் முகம் பார்க்க சோறு பொங்கி போட யாருமில்லை. அவனுக்கு துணையாய் அவன் ஆத்தா இருந்தாள். இப்போது அவரும் இல்லை. ஒற்றை மனிதனாய் வாழ்வது அவனுக்கு வருத்தத்தை கொடுத்தது.

‘‘முத்தழகியை சிறு வயதிலிருந்தே அவனுக்கு தெரியும். ரிப்பன் ஒரு பக்கம் அவிழ்ந்த தலையும். அழுக்கு படிந்த பாவாடை சட்டையுடன் அவனோடு அவள் புழுதியில் புரண்டு விளையாடிய நாட்க ளெல்லாம் அவன் கண்முன்னே வந்து போனது’’

‘‘நல்லவள் தான் முத்தழகி. அவள் மீது ஆசை இருந்தாலும்’’

‘‘ப்ச்.. விதி யாருக்கு யார்னு எழுதி வச்சிருக்கோ’’ சலிப்படைந்தவனாய் எழுந்து கருப்பன் கடைக்கு போனான்.

‘ஒரு சுக்கு காபி போடுண்ணே…’’ ம்ம்..போடுறேன்.

‘‘ஏன்ப்பா… கதிரு காலா காலத்துல ஒரு கல்யாணத்த பண்ணுனா உனக்குன்னு ஒரு துணை இருக்கும்ல. ஏன் தனியா கிடந்து கஷ்டப்படுற..?’’

‘‘ப்ச்…நடக்குறத பேசுண்ணே…’’

‘‘ஏன் நடக்காது..?’’ சரியா அதே நேரம் அங்கே வந்த முத்தரசு, ஹ…ஹா… நாதி இல்லாதவனுக்கு எவன் பொண்ணுக் கொடுப்பான். ஏற்கனவே நொந்து போய் இருந்தவனுக்கு அமிலத்தை எடுத்து ஊற்றியது போலிருந்தது.

‘‘என்னடா மொறப்பு எல்லாம் பெருசா இருக்கு.. யோவ்… நான் பொண்ணு பார்த்துக்குடுன்னு சொன்னேனா..? உன் கிட்ட சோத்துக்கு கை ஏந்தி வந்தேனா? எம்பொழப்ப பார்த்துக்கிட்டு நான் இருக்கேன். என்கிட்ட வச்சிக்காத’’ன்னு சொன்னவன் அங்கிருந்து வெரசா கிளம்பினான்..

‘‘வீட்டிற்கு வந்தவன் வரப்பு செதுக்க மம்முட்டியை எடுத்துக்கொண்டு வயலுக்கு போனான். வளைவில் கதிர் காட்டுக்கு போய் கொண்டிருப்பதை பார்த்த முத்தழகி நெத்திலி கருவாடும் கத்தரிக்காயும் போட்டு அவனை நினைச்சுக்கிட்டே மணக்க மணக்க கொழம்பு வச்சு தூக்கு போணில அழுத்தி சோறு போட்டு குழம்பு ஊத்தி எடுத்துக்கிட்டு வயலுக்கு போனாள்,

அதுவரை அமைதியான இடத்தில் வரப்பில் ஓடும் தண்ணீர் சத்தம் மட்டும் கேட்டவன். பெண் குரல் கேட்கவும் உலுக்கித்தான் போனான். படக்கென்று திரும்பியவனுக்கு மின்னிய முகத்தை தாவணி நுனியில் துடைத்தவாறு நின்றிருந்தாள் கையில் தூக்கோடு,.

‘‘அடச்சே நீயா…?’’ என்றவன், தன் வேலையைத் தொடர்ந்தான்.

‘‘ஏன் தொர, யாரை எதிர்பார்த்த…?‘‘ என்றவள், தன் கையில் வைத்திருந்த தூக்கை எடுத்தபடி ‘‘இந்தாயா.. உனக்கு சுடசுட சோறு போட்டு நெத்திலி கருவாடு குழம்பு வச்சு மணக்க மணக்க எடுத்தாந்தே. வந்து ஒரு வா சாப்புட்டு வரப்ப வெட்டு’’ என்றாள்.

‘‘அறிவு கெட்டவளே உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா இதையே சாக்கா வச்சிக்கிட்டு ஊரைக் கூட்டி பஞ்சாயத்து வச்சி என்ன காச்சி காச்சிபுடுவான்’’ நீ கெளம்பு புள்ள.

‘‘ச்சே…! உனக்கு போயி ஆச ஆசையா சோறு கொண்டேந்தேன் பாரு, என்னைய சொல்லனும்’’ என்றவள் அங்கிருந்த வரப்பு மேட்டு மேல உட்கார்ந்தாள்.

‘‘ப்ச்… எதுக்கு டி இங்க உட்காருற..?’’

‘‘இந்த, என்ன எப்ப பாரு தாளிக்க போட்டக் கடுகு மாதிரி பொரியிறே…? எங்க உன் நெஞ்ச தொட்டு சொல்லு எம்மேல உனக்கு ஆசை இல்லன்னு. ஏய்யா இப்படி பண்ற உச்சி வெயில் அனலாட்டம் உன்ன நினைச்சு நித்தம் உருகி கிடக்கேன்.

நா வெளஞ்சு நிக்கிறதே உனக்காக தாய்யா. என்னிக்கு இருந்தாலும் எங்கழுத்துக்கு உங் கையாலதான் தாலி வாங்குவேன்.’’ வெடிச்சு சிதறிய அழுகையோடு அங்கிருந்து வெரசா வெளியேறினாள்.

‘‘ஏ.. ஏ கூறுகெட்டவளே நில்லுடி’’ என்றபடி வேகமாய் ஓடிவந்தான்.

‘‘ஏன்டி முத்தழகு இப்படி பண்ற ஒரு பக்கம் முத்தரசுக்கு என்னைக் கண்டாலே ஆகலைங்கிறான், நீ என்னடானா… என்னோட தான் உம் வாழ்க்கைன்னு சொல்லு வீசி கொல்லுற..’’ அவன் சொல்ல,

‘‘யோவ் உனக்குதா நான் ஆகனும் இல்லையினா மண்ணாதா போவேன். சொல்லிபுட்டேன். நீயே முடிவு பண்ணிக்கோ’’ அங்கிருந்து விருட்டென்று சென்று விட்டாள்.

‘‘அன்று இரவு கயித்து கட்டிலில் தூக்கமிழந்து புரண்டவன் நீலவான வெண்ணிலவை வெறித்தவனுக்கு வெள் ளந்தியான முத்தழகியே மனம்முழுக்க நிறைந்து இருந்தாள். அவள் சொன்ன வெறித்தனமான வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.’’
முத்தழகியை கல்யாணம் செய்து கொண்டால் முத்தரசனால் வாழ்க்கையில் நிம்மதியை இழக்க நேரிடுமோ.. என்று பயந்தான். அவள் அண்ணன் அவனை படுத்திய துன்பத்துக்கு, இவன் முத்தழகியை வைத்தே முத்தரசை பழி வாங்கிட முடியும். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. அவள் காதலை சொல்லும் போதெல்லாம் எத்தனை பொறுப்பாய் தப்பு என்று அவளுக்கு எடுத்து சொல்லி வாதிடுகிறான்.

‘‘என்னடி சொல்ற சோறு வேணாம்னு தொரத்தி விட்ருச்சா, அழுகாதே முத்து நெஞ்சுல உன்ன சுமந்தாலும் உங்க அண்ணங்கிட்ட சங்கடம் எதுக்குன்னு தான் கதிரு ஒதுங்கி இருக்காப்புல’’

‘‘நானுந்தே என்ன செய்ய முடியும்’’

‘‘அடியே முத்தழகு அழுகாதடி… கதிருக்காக, நீ அழறனு மட்டும் உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா ரத்த ஆறே ஓடுமேடி. கதிர் மாதிரி ஒருத்தன் எங்க தேடினாலும் கிடைப்பான? சாமிதேன் உங்க அண்ணனுக்கு நல்ல புத்திய கொடுக்கனும்’’ கருத்தம்மா சொல்லிக் கொண்டே அவள் வீட்டிற்கு கிளம்பினாள்.

அந்தி பூக்களின் மணம் மனதை சிறிது மலரச் செய்தது. கதிரை நினைத்துக் கொண்டே கால் போன போக்கில் நடக்க தொடங்கினாள், பறவைகள் வந்தடையும் அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்தாள். வேதனை கலந்த காதலில் மயங்கியிருந்த அவளுக்கு இருட்டியதுக் கூட தெரியவில்லை.

காய்ந்த சருகுகளுக்கிடையில் தன்னை நெருங்கி வரும் காலடி ஓசைக் வந்த திசையில் முகத்தை திருப்பினாள் திகைத்து போனாள். கதிர் நின்றிருந்தான்.

‘‘இங்கன என்னா பண்ணுற புள்ள…?’’

‘‘உன்ன தாய்யா.. நினைச்சுட்டு இருந்தே. அய்யனாரு சாமி மாதிரி முன்னாடி வந்து நிக்குற…’’

‘‘ஏய் ஓனக்கெல்லாம் அறிவே இல்லையா?’’ சட்டென்று எழுந்து அன்பாய் அவன் கையை பிடித்தாள்.

‘‘அடிங்க.. அப்படியே விட்டேனு வைய்யே, ஓ வீட்டுல போயிதேன் விழுவ. இருட்டிடுச்சு வா வீட்டுல விட்டுட்டு போறேன்.’’ முறைத்து நின்றவளின் கையை பிடித்து இழுத்தான்.

‘‘நான் தொட்டா கத்தற’’

‘‘இந்தா மொதல்ல என்ன தொட்டு பேசாத நான் என்ன உன் பொண்டாட்டியா..?’’ அவள் சீற, கதிரின் முகம் இருண்டே விட்டது.

‘‘என்னா மூஞ்சிய தொங்க போட்டு கிட்ட.? நெசத்தத்தேன் கேட்டேன். ஒடனே உனக்கு வலிக்குதா..?’’

‘‘எனக்கு எப்படி இருக்கும் தெனமும் என்ன ஒதுக்குறப்போ. நெஞ்சுல என் நினைப்பு இருக்குல்ல..?’’ என்று அவன் முகம் பார்த்து கேட்டாள். அவளுக்கு பதில் சொல்ல முடியாதவனாய்..

‘‘ம்ம்…என்ன நிக்குற…?

வா இந்நேரம் ஒன்னையும் என்னையும் யாராவது பார்த்தா தப்பாகிடும் புள்ள. வா மொதல்ல.. பேச்சுதான்டி ஒனக்கு. ஊரு பத்தி ஒண்ணும் தெரியாத வெள்ளந்தி புள்ளடி நீ. எதுவா இருந்தாலும் பொறவு பேசிக்கலாம். கிளம்பு புள்ள’’ அவளை சமாதானப்படுத்தி கூட்டிச் சென்றான்.

‘முத்தழகியின் சொல்லால் மீண்டும் குழம்பியது மனம். கட்டுக் கொள்ளாமல் தவித்தான். இதற்கு தீர்வு அவனின் கல்யாணம் தான் என்று தெளிவாக தோன்றியது அவனுக்கு.

கை பிடித்து பேசிக்கொண்டு இருந்ததை கண்ட ரங்கன். நடந்தது என்ன வென்று தெளிவாக தெரிந்துக் கொள்ளாமல் நண்பன் முத்தரசனிடம் பத்த வைத்தான்.

‘தன் தங்கை தான் கதிரை விரும்புகிறாள்’ என்று தெரியாமல், கதிர் தான் முத்தழகியை விரும்புவதாக» நினைத்தான்.

‘தன் பேச்சை தங்கை மீறமாட்டாள்’ என்ற நம்பிக்கையில் காதும் காதும் வைத்தபடி முத்தழகிக்கு ரகசியமாக திருமண ஏற்பாடுகள் செய்தான்.

‘‘முத்தழகி நாளைக்கு காலைல நேரமா குலதெய்வ கோவிலுக்கு போகணும் எல்லாம் ரெடியா எடுத்து வச்சிடு.’’
ஏதுமறியாதவளாய் கதிரை நினைத்த படி கோவிலுக்கு பொங்க பொருள்களை துள்ளும் மனதோடு எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.

ரங்கனை தங்கைக்கு கல்யாணம் செய்ய முடிவு செய்திருந்தான். ரங்கன் தெய்வமாக ஒசந்து தெரிந்தான் முத்தரசன் கண்ணுக்கு.
அங்கு கல்யாண ஏற்பாட்டைக் கண்ட அதிர்ச்சியில் தலை சுற்றியது அவளுக்கு. செய்வதறியாது திகைத்தாள்.

அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கதிரை கட்டிக்கொள்ளத் தான் ஆசை என்று அண்ணானிடம் சொல்லவும் முடியவில்லை.
பல போராட்டத்திற்கு பின் ‘‘முத்தழகு…’’ பலமான சத்தம் காதை பொலக்க, உடலில் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது அவளுக்கு. நிமிர்ந்தவளுக்கு, தலையில் இடியே இறங்கியது. காரணம் முத்தரசன் அவன் கழுத்துக்கு அருகில் கத்தியை வைத்திருந்தான்.

‘‘இப்போ நீ தாலி கட்டிக்கலைனா என் கழுத்தை அறுத்துக்குவேன்’’ முரடனாய் கத்தினான்.

‘‘கத்தி முனையில் முத்தழகி கழுத்தில் தாலி ஏறியது. தான் கதிரை ஜெயித்தவனாய் பெருமிதம் கொண்டவன். தன் தங்கையின் விருப்பம் அறியாதவன் ஆனான்.

என்ன நடந்தது என்று யூகிக்க முடியாது நடந்த கல்யாணத்தால் புத்தி பேதலித்து மயங்கி சரிந்தாள்.

வைத்தியம் பார்த்த வைத்தியர் ‘‘பேரதிர்ச்சி பட்டு இருக்கா.. உன் தங்கைக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றார்.

அதை கேட்டவனுக்கு ரத்தம் ஓடுவது நின்று இருதயம் உறைந்து நின்றான்.

எங்கெங்கோ வைத்தியம் பார்த்தும் முத்தழகி குணமடையவில்லை.

ரங்கனும் பையத்தியம் என்று அரவணைக்காமல் விட்டுவிட்டான்.

முத்தரசன் அவனிடம் கேட்டதற்கு ‘‘பைத்தியத்தோட என்னை வாழச் சொல்றியா…? ஆளை விடு சாமி’’னு போனாவன் வந்து எப்படி இருக்கிறாள் என்று கூட பார்க்கவில்லை.

பல மாதங்கள் ஆனது முத்தழகியின் மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை.இதை நினைத்தே நொந்து நூலான முரடன் முத்தரசன் முடங்கி போனான்.

சரியாக உண்ணாமல், உறங்காமல் நோய்வாய்ப்பட்டான். தங்கையையும் கவனிக்க முடியாமல், தன் உடம்பையும் பார்த்துக்க இயலாமல் சித்தரவதைப் பட்டான்.

‘‘அடியே… புள்ள எப்படி துள்ளி திரிஞ்சவ இப்படி அடங்கி கிடக்கியே? ரத்தமெல்லாம் கொதிக்குது டி. இப்படி உன்ன பாக்க முடியலையே என்னால’’, அழுதாள் கருத்தம்மா.

முத்தரசை நிமிர்ந்து பார்க்க பயப்படுவாள் கருத்தம்மா…ஆனால் இன்று தைரியம் வந்தவளாய்… ‘‘அப்படி என்னய்யா உனக்கும் கதிருக்கும் பரம விரோதம்? அவனை பழிவாங்குறதா நினைச்சு ‘‘உன் தங்கச்சி பொழப்ப நாசம் பண்ணிட்டியே… அவ நெஞ்சுல கதிரைதாய்யா சுமந்துகிட்டு இருந்தா…அவ ஆசை என்னான்னு ஒரு வார்த்தை கேட்காம இப்படி பைத்தியப் பட்டம் வாங்க வச்சுட்டியே…
முத்தழகு எவ்வளவு கட்டாயப் படுத்தியும் உன்ன அவமானப்படுத்தக் கூடாதுனு ஒதுங்கி போனவன்யா கதிரு அப்படிபட்ட மனுசன் தேடுனாலும் கிடைக்குமா? அவசரபட்டு இந்த கதிக்கு ஆளாக்கிட்டியே’’ அவள் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ, முந்தரசனுக்கு உச்சந்தலையில் ஆணி அடித்த வலி ஏறியது.

அப்போது தான் அவனுக்கு உறைத்தது கதிரின் மேலிருந்த ‘பொறாமை யும், போட்டியும்’ தான் இந்த நாசத்திற்கு காரணம் என்று காலம் கடந்து புத்திக்கு உறைத்தது.

அப்போதே கதிரை பார்க்க தோன்றியது முத்தரசனுக்கு. கதிரை பார்க்க சென்றவன் தெம்பில்லாதவனாய் ரோட்டோரம் சரிந்தான். அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று தூக்கினார்கள் கூட்டத்தில் கதிரும் இருந்தான். கதிரைக் கண்ட முத்தரசு தட்டு தடுமாறி க.. கதிர் உன்னோட பேசனும் என்னை வீட்டிற்கு கூட்டிட்டு போறீயா…

அவன் கண்கள் கெஞ்சுவதை போலிருந்தது ஒன்றுமே வெளங் காதவனாய் கதிர் அவனை அழைத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான்.

‘‘கதிர் உன்னை தப்பான பார்வையில் பார்த்து உனக்குள்ள இருக்க நல்ல மனச புரிஞ்சிக்காம போயிட்டேன்.’’ கருத்தம்மா சொல்லித்தான் முத்தழகு உன்னை விரும்பினானு தெரியும். என்னை மன்னித்து விடு விழி விசும்ப ஆண் என்ற கர்வம் நீங்கி குழந்தையாய் கண்ணீர் விட்டான் முத்தரசன்.

சங்கிலியின் சல சல சத்தம் வந்த திசையை பார்த்த கதிர் மூர்ச்சையாகி போனான்.

பல மாதங்களுக்கு பிறகு முத்தழகியை இந்த நிலையிலா அவன் காண வேண்டும்.

சோத்தை அள்ளி இறைத்து விளை யாடியவளின் முன் பொல பொலன்னு பொங்கி வழிந்த கண்ணீரை துடைக்க கூட செயலற்று நின்றான்.

அவள் கட்டப்பட்ட தூணில் தன் தலையை இடித்துக் கொண்டு கதறினான். ‘‘உன் கதிர் வந்து இருக்கேன்டி புள்ள, நீ பிடிவாதகாரி டி.. அடியே முத்தழகி நீ தாண்டி எ.. ஏ பொஞ்சாதி நான் உன்ன பாத்துகிறேன்டி’’ ன்னு அவளைக் கட்டிக் கொண்டு, அவளின் கனவை நனவாக்க துடித்துடித்துக் கொண்டிருந்தான் கதிர்.

உடல் நிலை சரியில்லாத முத்த ரசனால் அவனை சமாதானம் செய்ய கூட முடியாமல் செயலற்று இருந்தான். அவன் அவ்வளவு பாதிக்கப்பட்டு இருந்தான்.

முத்தழகையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கதிரின் கண்களில் கண்ணீர் கீழே விழவில்லை.
மனதில் முத்தழகை போல் கண் களில் அது தொற்றி நின்றது…

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »

சிறுகதை

தண்டவாளத்தில் ஓர் உயிர்

அது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் போகிற பாசஞ்சர் ரயில். அந்த ரயிலோட டிரைவர் ஜான்சன்மற்றும் டீசல் அஸிஸ்ட்டண்ட் அழகர் எஞ்சினிலி ருந்தார்கள். அது மதுரையில் 7மணி அளவில் கிளம்பி 12 மணிஅளவில் ராமேஸ்வரம் சென்றடையும்.

 » Read more about: தண்டவாளத்தில் ஓர் உயிர்  »