அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள். இன்று அவளுக்கு முக்கியமான நாள்.நேர்முகத் தேர்வுக்காக அவளை அழைத்திருந்தார்கள்.

‘‘ஹாய், அனு எப்படி இருக்கீங்க?” பரிச்சயமான குரல் கேட்டு நிமிர்ந்தவள்,

அங்கு தன் பால்ய நண்பன் அகிலனைக் கண்டதும் ஆச்சர்யத்துடன்…

“வாவ்! நீங்களா? நா நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க அகிலன்? நல்லா இருக்கீங்களா?’’ எனக் கேள்வி மேல் கேள்வியாக அடுக்கினாள்.

‘‘எனக்கென்ன நா சூப்பரா இருக்கேன். சரி நீங்க எங்கே இந்தப் பக்கம்?’’ என்று அவன் கேட்க, ‘‘இந்தக் கம்பெனிக்கு இன்டர்வியூக்கு வந்தேன். பா”

‘‘அப்படி என்றால் உங்களுக்கு வேலை உறுதிதான்” என சொல்லிச் சிரித்தான், அகிலன்.

‘‘என் தகுதிக்கு வேலைக் கிடைத் தால் போதும். எனக்கு ரெக்கமண்ட் ஒண்ணும் வேண்டாம்.” சிறிது கோபம் கலந்த புன்னகையுடன் அனு சொன்னாள். ‘‘சொல்ல மறந்துட்டேனே… இந்தக் கம்பெனி வினோத்தின் அப்பாவுடையது. அவருக்கு பின் மகன்கள் நிர்வாகத்தை கவனிக்கின்றனர்.’’அகிலன் சொல்லும் போதே’ வினோத்தின் பெயரைக் கேட்டவளுக்கு, பின்னந் தலையில், சம்மட்டியால் அடித்தது போல வலித்தது. அனு தன் தங்கையோடு வாழ்ந்த அந்தப் பொன்னான நாட்களும், தங்கை இறந்துக் கிடந்த அந்தக் கோர காட்சியும் மனக்குமுறலோடு அவள் மனக் கண்ணில் திரையோடியது.

***

‘ஐகிரி நந்தினி விஸ்வ வினோதினி நந்தனுதே’’ உள்ளம் உருகி பிரார்த்தனை செய்து விட்டுத் தனது செல்ல மகள்களை அழைத்து விபூதி இட்டாள் வசுந்தரா.

‘‘அம்மா பசிக்குது’’ அபி அழைக்க வெண் பொங்கலையும், வடையையும் பரிமாறினாள்.

‘‘அம்மா காலேஜ் டைம் ஆயிடுச்சு பை, பாய்’’ என்று சொல்லிய மகள்களை பிரமிப்பாகப் பார்த்தாள் வசுந்தரா. ஏனென்றால் ஒரே முக அமைப்பு உடைய இரட்டைக் குழந்தைகள். அபியும், அனுவும்! அதனால், பெருமிதம் கொண்டாள்.

அபியும் வினோத்தும் காதலர்கள்.

அன்று கல்லூரி முடிந்ததும், மகாபலிபுரம் சுற்றிப் பார்க்க செல்லலாம் என்று முடிவு செய்தனர். மகாபலிபுரம் மாலை ஐந்து மணியை நெருங்கி கொண்டிருந்தது சூரியன் முழுதாக மறையவில்லை. கதிர்கள் அபியின் முகத்தில் விழுந்து அழகிற்கு, மேலும் அழகு சேர்த்தது. ஒரிரு முடிக் கற்றைகள், அவளின் நெற்றியின் அழகிற்கு பணிந்து வணங்குவது போல் வளைந்து நெற்றியை முத்தமிட்டு கொண்டிருந்தன.. பேசுபவளின் உதடுகளின் அசைவில் வெளிப்பட்ட முத்துப் பற்கள் அழகைக் கூட்டியது.

மெல்ல மெல்லத் தன் பார்வையை கீழிறக்கிய வினோத் அவளது ஒவ்வொரு அணுவிலும் பேரழகு விரிந்து கிடந்ததைக் கண்டு பிரமிப்புக்குள்ளானான். அவள் மேனி வழங்கிய பொலிவில் தனக்குள் தவித்துக் கொண்டிருந்தவனை, எழுப்பியது ‘‘என்னங்க கண்ணை திறந்துக் கிட்டே தூக்கமா?’’ என்ற அவளது குரல். அவள் சிரிக்க தன் கைகளினால் அவளைத் தன்னை நோக்கி இழுத்தான். முகங்கள் இரண்டும் ஒன்றோடொன்று உரசிக்கொள்ள, இதழ்கள் இரண்டும் சில வினாடிகள் இணைந்தன. அந்தி கவியத் தொடங்கி விட்டதை உணர்ந்த அவர்கள் இயற்கையை ரசித்து விட்டு இன்பக் களிப்புடன் அங்கிருந்து கிளம்பினர்.

விதி யாரைத்தான் விட்டது?

காதல் வானில் சிறகடித்துப் பறந்த வினோத் அபி அவர்கள் மீது யார் கண் பட்டதோ? விதி தன் விளையாட்டைக் காட்ட ஆரம்பித்தது.
குதூகலத்தோடு மகாபலிபுரத்திலிருந்து கிளம்பிய கார் வினோத் அபியை சுமத்துக் கொண்டு அந்தச் சாலையில் சீறிப்பாய்ந்துக் கொண்டிருந்தது. ஒரு கண நேரம் தான், பாவம் அவர்களே எதிர்பார்க்க வில்லை. எதிரில் வந்த லாரி ஒன்று அவர்கள் கார் மீது மோத இரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே அபி துடிதுடித்து உயிரை விட்டாள். கண்முன்னாடி அவள் சாவ தைக் கண்ட அவன் தன் நினைவை இழந்து மயங்கிச் சரிந்தான். அக்கம் பக்கத்தி லிருந்த சிலர், அவனை மருத்து வமனையில் சேர்த்தனர்.

அபியின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு வசுந்தரா மருத்துவமனைக்குப் புறபட்டார். அனுவையும் அழைத்துக் கொண்டுவந்த அவன் தாய் அழுதுக் கொண்டிருந்தாள்.

‘‘டாக்டர் என்ன சொன்னாங்க?’’ அனு கேட்க, ‘‘நினைவு இல்லாமல் கிடக்கிறான் பாருங்கள். சில நினைவுகள் மறந்து விடுமாம். அதிர்ச்சியான தகவல் எதையும் தெரியப் படுத்தக் கூடாதாம்’’ அருகிலிருந்த உறவுக்காரர் சொல்ல, ‘‘நீங்கள் எதுவும் கவலை படாதீர்கள். எல்லாம் சரியாகிவிடும்’’ என்று ஆறுதல் சொன்னாள் அனு.

தன் மகளைப் பறிக்கொடுத்த வசுந்தரா. கண்களில் நீரோடு அங்கிருந்து அனுவோடு விடைபெற்றாள்.ஒரு வருடம் கடந்து இப்போது அகிலனால் மீண்டும் தங்கையின் நினைவு பற்றிக்கொள்ள – ‘‘அனு.. அனு’’ என்ற குரல் கேட்டு நினைவுக் கலைந்தாள். ‘‘நடந்து முடிந்ததை நினைத்து வேதனைப் படாதே அனு. இப்போது வினோத்திற்கு அபி இறந்தது எதுவும் நினைவில்லை. சில விசயங்கள் எதிர்மறையாய் வினோத்தின் நினைவில் உள்ளதாம் டாக்டர் சொன்னார். அபி உயிருடன் இருப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறான். அதிர்ச்சியான தகவல் எதுவும் அவனிடம் சொல்லக் கூடாதுனு டாக்டர் சொன்னதால், நாங்கள் யாரும் தெரியப் படுத்தவில்லை’’.

நினைவு திரும்பிய வினோத்தின் முதல் கேள்வி ‘‘அபி எங்கே?’’

‘‘மருத்துவத்திற்காக அமெரிக்கா சென்றிருக்கிறாள். என்று சொல்லி இன்று வரை சமாளித்து கொண்டு இருக்கிறோம்.’’ அகிலன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்த வினோத் ‘‘அபி’’ என்று அனுவை இறுக கட்டிக் கொண்டான். அவன் பிடியிலிருந்து விலக முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவளிடம்…

‘‘அபி என்னை விட்டு அமெரிக்க போக உன்னால் எப்படி முடிந்தது? உன்னைப் பிரிந்து நரக வேதனையை நான் அனுபவிக்கிறேன். ஏன் என்னை தொலை பேசியில் தொடர்புக் கொண்டு பேசவில்லை.’’ என்று நேசக் கேள்விக் கணைகளைத் தொடுத்தான். பதில் சொல்ல முடியாமல் அனு நெளிந்து கொண்டிருந்தாள்.

இந்நேரத்தில் அங்கு வினோத்தின் அண்ணன் பிரமோத் வர, வினோத் அனுவை பிடித்த பிடியைக் கொஞ்சம் தளர்த்தினான்.
பிரச்சினையை சமாளிக்க பிரமோத் ‘‘பெங்களூரில் உள்ள கம்பெனியில் நாளை ஆடிட்டிங் இருக்காம். உடனடியாக அங்கே கிளம்பி கம்பெனியை பார்த்துக்கொள் வினோத்!’’ என்றான்.

‘‘அண்ணா நீண்ட பிரிவுக்குப் பின் இப்போதுதான் அபியை சந்தித்து உள்ளேன். நான் போகவில்லை’’ என பதிலாகச் சொன்னான் வினோத்.
‘‘இப்போதே கிளம்பு’’ என்று கண் டிப்பாக சொல்லவும், தவிர்க்க முடியாமல் பிரியா காதலோடு அபி மீண் டும் வந்ததை இன்பமாய் நினைத்துக் கிளம்பினான். பின் எப்படியாவது இந்த விசயத்தை வினோத்திடம் சொல்லி விட வேண்டும் என்று மூன்று பேரும் முடிவெடுத்தனர்.

வினோத்திற்கு சிகிச்சை அளித்த டாக்டரைச் சந்திக்க அனுவை கூட்டிக்கொண்டு பிரமோத் சென்றான். நடந்த பிரச்சினையை எடுத்துச் சொன்னார் கள் டாக்டரிடம்! ‘‘இப்போது சொல்ல வேண்டாம். அது ஆபத்தில் முடியும்.” என உறுதியோடு டாக்டர் சொன்னார்.

அங்கிருந்து வரும்வழியில் தேநீர் அருந்த காரை நிறுத்தினான்பிரமோத். அனுவின் கனிவான பண்புகளும், கண்ணுக்கே தெரியாத அவளின் நெற்றி பொட்டும், காட்டன் புடவையும், கழுத்தில் மெல்லிய சங்கிலியும்,கைகளில் இரண்டு வளையல்களும் மிகவும் எளிமையாக இருந்தவளை கண்ட பிரமோத், அவளிடம் மனதை பறிகொடுத்தான்.

மணம் நுகர்ந்து தேநீர் பருகிவிட்டு அமைதியாக கிளம்பினர் இருவரும்..

அனுவின் சுறுசுறுப்பான செயல் பாடும் புத்திசாலித்தனமான பேச்சும் பிரமோத்தை வெகுவாய் கவர்ந்தது.
அவன் உள்ளத்தின் கதவை தேவதை ஒருத்தி தட்டுவது போல் அவன் உணர்ந்தான். ஒரு வேளை இதான் காதலோ..? தனக்குத் தானே கேட்டுக்கொண்டான்.

பெங்களூரு சென்ற வினோத்தால் – வேலையில் கவனம் செலுத்த முடிய வில்லை. அனுவைப் பார்த்ததிலிருந்து அபியென நினைத்து நினைத்து காதல் கொண்டு வாடினான். நீ விரும்பிய அபி இவளல்ல இவள் அவள் கூடப்பிறந்த அனு. உன் அபி இறந்து விட்டாள் என்று யார் அவனிடம் சொல்வது? அப்படி யாராவது சொன்னால் விபத்தில் ஏற்பட்ட அதிர்வில் அவனால் அதைத் தாங்கும் சக்தி உண்டா? அவள் நினைவு அவனை அலைக்கழிக்க – ஊர் சென்று அபியாய் அவன் எண்ணும் அனுவைச் சந்திக்கக் கிளம்பி விட்டான்.

இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி வர இருக்கிறது. ஊர் சென்றவன் அவளுக்குக் கைபேசி மூலம் தொடர்பு கொண்டான். தொடர்ந்து அவன் தொடர்பை அனு துண்டித்தாள். நேரிலும் பலமுறை சென்று சந்திக்க முற்பட்டான். அவள் அதற்கு இடம் கொடுக்க வில்லை. அவனை சந்திப்பதை அவள் தவிர்ப்பதை அவன் நன்கு உணர்ந்தான். வினோத் அனுவை விரும்புவதும் அவள் காதல் வேண்டி அவள் பின்னே சுற்றுவதும் – அனுவின் பெற்றோருக்குத் தெரிய வந்தது.

‘‘ஏய் ! இங்க என்னடி நடக்குது? பாவம்! வினோத் உன்னையே சுத்தி, சுத்தி வாரான். நீ அவனைக் காதலிக்கின்றாயா?’’ வசுந்தரா கேட்க, சட்டென மறுத்தாள் அனு. ‘‘அய்யோ அம்மா! அத எப்படி உனக்கு வெளங்க வைக்கறதுன்னு எனக்குத் தெரியல்ல. நானும், அபியும் ‘டுவின்ஸ்’ ங்கறது அந்த வினோத்துக்கு தெரியாதும்மா! அபி உயிரோடதான் இருக்கான்னு நினைச்சு நான்தான் அந்த அபின்னு நினைச்சு என்னையே சுத்தி சுத்தி வர்றாரும்மா!’’ என்று கூறிய அனு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறி முடித்தாள்.
‘‘சரி அந்த தம்பி கிட்ட நடந்த சம்பவத்தை எல்லாம் கூறி… நீ அந்த தம்பியையே கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?’’ அவள் அம்மா வசுந்தரா கூறியது, அனுவை சிந்திக்க வைத்தது!

‘‘அம்மா இது நாம அவர் உயிரோட விளையாடுற மாதிரிம்மா!’’ ‘‘அட போம்மா என்னமோ எம் மனசுக்கு பட்டதை சொல்லிட்டேன்’’அம்மா வசுந்தரா வெகுளி யாய் சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.அனுவிற்கு அவள் அம்மா சொல்லியது சரியாகவும் பட்டது.

இரவு பிரமோத்தின் மனநிலை அனுவையே சுற்றிக் கொண்டிருந்தது. உறங் காமல் பல வித எண்ணங்களால் தாக்குண்டு இறுதியாக தன் காதலை அனுவிடம் சொல்ல முடிவு எடுத்தான். தீபாவளி அன்று சொல்லிடனும் என்று தன் மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அனுவை நினைத்து கொண்டே அன்றைய இரவின் உறக்கத்தை தொடர்ந்தான் பிரமோத்.

பொழுதும் விடிந்தது. தாயும் மகளுமாய் வினோத்துடைய அண்ணன் பிரமோத்திடம் தங்களின் முடிவைச் சொல்லி அவனுடைய எண்ணத்தையும் அறிந்துக்கொள்ள விரும்பினார்கள்.

நெடுநேரப் பேச்சுக்குப்பின் பிரமோத்தும் தனது ஒருதலைக் காதலைச் சொல்ல முடியாமல் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு அவர்களின் விருப்பத் திற்கு சரியென்றான். ஆனாலும் அவனில் ஏற்பட்ட வலி சொல்லி மாளாது. என்ன செய்வது வினோத் நல்லபடியாக வாழ்ந்தால் போதுமென்று நினைத்தான்.

இன்று தீபாவளி ஊரெங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு – தகதகவென்று மின்னிக் கொண்டிருந்தது. அனு நிலைக் கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டாள். அபிக்கு மிகவும் பிடித்தமான சேலை – ரவிக்கைக்குத் தன்னை மாற்றிக் கொண்டாள். மகளைப் பார்த்த வசுந்தரா…

‘‘அனு! எங்கண்ணே பட்டுடும் போல! அழகா மகாலட்சுமியாட்டம் இருக்கேடி! என்னோட அபியே நேர்ல வந்து நிக்கற மாதிரி இருக்குடி.’’ தன் இரு கைகளால் மகளின் தலையிலிருந்து முகம் தடவி நெட்டி முறித்தாள்.

அனு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் காதலைத் தெரிவிக்க – வினோத்தைத் தேடிச் சென்றாள். கைபேசி வாயிலாய் – தான் வருவதை வினோத்திற்கு தெரியப் படுத்தியும் இருந்தாள். வினோத்தும் அவ னுக்கு அபியாய் தெரியும் அனுவிற்காய் காத்திருந்தான்.
வீதியெங்கும் வாணவேடிக்கை – பட்டாசு வெடித்து ஊரே மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது.

‘உன்னைக் கண்டு நான் ஆட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகிக் கலந்து
உறவாடும் நேரமடா… ஆ… ஆ…
உறவாடும் நேரமடா…’

எங்கிருந்தோ பாடல் ஒன்று காற்றிலே தவழ்ந்து வந்து வினோத்தின் காதுகளை வருடிச் சென்றது.

வினோத்திற்கு ஏதோ ஓர் இனம் புரியாத வலி தலைக்குள் உருண்டு கொண்டிருந்தது. இது போல் ஒரு தீபாவளி அன்று தன் காதலை அபியிடம் அவன் தயங்கித் தயங்கித் தெரிவித்த போது –

‘‘அட பாவி மனுசா! இத சொல்ல எதுக்குய்யா இவ்வளவு நாள் எடுத்தே? உன்ன…’’ பொய் கோபம் கொண்டு அவன் மார்பில் தன் கைகளால் குத்தியவாறு அவனை அணைத்துக் கொண்டு இதழ் முத்தம் பதித்தாள். அதைத் தொடர்ந்து இருவரும் காதல் பறவைகளாய் சிறகடித்து பறந்தனர்.

கடைசியாக இருவரும் மகாபலிபுரம் சென்று கடற்கரையில் அமரந்திருந்து உரையாடியது, பின்னர், காரில் வரும் போது விபத்து ஏற்பட்டு தன் கண் முன்னே தன் அருமைக் காதலி துடி துடித்து உயிர் விட்டது யாவும் அவன் கண் முன் இப்போது நடப்பது போல் காட்சிகளாய் விரிந்தன. வினோத் பழைய நினைப்பிற்கு மீண்டான். நிச்சயமாகத் தெரியும் அவள் உயிர் விட்டது. அப்படி இருக்க இந்த அபி யார்?
அவன் மனதிற்குள் பல போராட்டம் தலையில் நிறைய ‘கடமுடா’ சத்தம். தலையைப் பிடித்தவாறு அப்படியே அமர்ந்து விட்டான். அந்த நேரத்தில்.அவனுக்கு மனதில் பட்டது – தனது நண்பன் அகிலன்தான். அவனை உடனே வருமாறு கைபேசியில் அழைப்பு விடுத்தான். அகிலனும் வந்து விட்டான். அகிலன் அனைத்தையும் ஒவ் வொன்றாக விளக்கமாகச் சொல்லச் சொல்ல – பிரமை பிடித்தவன் போல் வினோத் விக்கித்து நின்றான்.

வினோத் தன்னை தன் வசப்படுத்தி வைத்து ஒவ்வொன்றையும் கேட்டது – அகிலனுக்கு பிரமிப்பாய் இருந்தது.அகிலனுக்கும் விளங்கி விட்டது – வினோத் ‘நார்மல்’ நிலைக்குவந்து விட்டான் என்று! இந்நேரத்தில், அனுவும் வர – அகிலன் நாகரீகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.

அனுவும் அனைத்தையும் ஒளிவு மறைவின்றிக் கூறினாள். கடைசியில் தன் காதலையும் தெரியப் படுத்தினாள்.
வினோத் விரக்தியாக சிரித்தவாறே பேச ஆரம்பித்தான்.

‘‘அனு! என்ன மன்னிச்சிடுங்க! என் அபியா நினைச்சுத்தான் நா உங்க பின்னுக்கு அலைஞ்சேன். ஆனா – இப்ப என் அபி நீங்க இல்லேன்னு தெரிஞ்சதுக்கப்புறம்… உங்க காதல என்னால ஏத்துக்க முடியாதுங்க. அபிய நா அழகு பார்த்து மட்டும் காதலிக்கல்ல. அவ எம்மேல காட்டுன அன்பு – புனிதமான அவ இதயம், அந்த எடத்துல என்னால் யாரையும் வச்சு பார்க்க முடியல்லீங்க.
உருவத்தால – உயரத்தால – நிறத்தால, நீங்க என் அபி போல இருந்தாலும் – இந்த இதயம் அவ ஒருத்திக்கு சொந்தமானது. இதுல யாரையும் என்னால வச்சு அழகு படுத்தி பார்க்க முடியாதுங்க. என்னுடைய பேச்சு உங்களுக்கு பைத்தியக்காரத்தனமா தெரியலாம். பரவாயில்லீங்க. நா பைத்தியம் தான். லைலா மஜ்னு போல நா அபி பைத்தியம் தான்! என் வானத்துல அந்த ஒரு நிலவுதான்!’’
சொல்லி விட்டு – அனுவின் பதிலை எதிர்பார்க்காமல் – வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். தீபவொளி தெருவெங்கும் விழாக்கோலம்! பூண வாண வேடிக்கையுடன் – பட்டாசுகள் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன. அனு சிலையென நின்றாள். அவள் மனதில் வினோத் மலையென உயர்ந்து நின்றான்.

Categories: சிறுகதை

3 Comments

வீரவேல் சின்னக்கருப்பன் · நவம்பர் 3, 2020 at 14 h 19 min

சிறப்பு வாழ்த்துகள்

வீரவேல் சின்னக்கருப்பன் · நவம்பர் 3, 2020 at 14 h 21 min

அருமையான முடிவு

செல்லமுத்து பெரியசாமி · மார்ச் 5, 2022 at 15 h 49 min

வினோத்தின் முடிவு சரியானதுதான்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »

சிறுகதை

தண்டவாளத்தில் ஓர் உயிர்

அது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் போகிற பாசஞ்சர் ரயில். அந்த ரயிலோட டிரைவர் ஜான்சன்மற்றும் டீசல் அஸிஸ்ட்டண்ட் அழகர் எஞ்சினிலி ருந்தார்கள். அது மதுரையில் 7மணி அளவில் கிளம்பி 12 மணிஅளவில் ராமேஸ்வரம் சென்றடையும்.

 » Read more about: தண்டவாளத்தில் ஓர் உயிர்  »