கோயில் மணி டாண் டாண் என்று அடித்தது. நேரம் மாலை ஏழு மணியிருக்கும். காரைவிட்டு இறங்கிய சந்திரன் கைகால்களைக் கழுவிவிட்டு பக்தி சிரத்தையாக உள்ளே நுழைந்தார். வழக்கமாகத் தன் மனைவியோடு வருபவர் தனியாக வருவதைக் கண்டதும் அர்ச்சகர் கேள்விக் குறியோடு பூசைத் தட்டை வாங்கினார். சந்திரன் தனது மனைவி கமலாவின் பெயரைச் சொல்லி அவள் நலம் பெறவேண்டி பற்றுச் சீட்டைக்கொடுத்தபோது விடயத்தை ஊகித்துக்கொண்ட அர்ச்சகர் பிரமாதமாக மந்திர உச்சாடனை செய்து பிரசாதங்களை அளித்தார். ‘என்ன பிரச்சினை வந்தாலும் இந்த விநாயகர் தீர்த்துவைப்பார் பயப்படாமல் போங்கோ’ என்றதும் சந்திரன் பெருமூச்சுவிட்டபடி நகர்ந்தார்.

சந்திரன் ஒரு ஸ்தாபனத்தின் உயர் அதிகாரி. வயது 40. மனைவி கமலா. இரண்டு பிள்ளைகள். கமலாவுக்கு சிறிதுகாலமாக காய்ச்சல் விடாமல் இருந்தது. சந்திரனுக்கு கவலை தொற்றிக்கொண்டது. மன ஆறுதலுக்காக கோயிலுக்குச் சென்றுவந்தவர் கண்ணில்தான் தூர இருந்த பெண்ணின் விம்பம் விழுந்தது.

‘மைதிலி! நீயா? எவ்வளவு காலத்துக்குப் பிறகு?’ என்று அவர் உள்ளம் துடித்தது. காரணம் மைதிலியின் கழுத்தில் தாலி இல்லை. நெற்றியில் சந்தனம் மேல் குங்குமம் இட்டிருந்தாள். மைதிலி கண்களை மூடி தியானித்துக் கொண்டிருந்தாள். ஆவளைத் தொந்தரவு செய்யாமல் வெளியே வந்து சீமென்ட் ஆசனத்தில் அமர்ந்தார். நினைவு ஒருபறவை.. விரிக்கும் தன் சிறகை என்பது போல் அவருக்கு பழைய நினைவுகள் தலைதூக்கின.

சந்திரனும் மைதிலியும் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பிரிவில் ஒன்றாகப் படித்தவர்கள். மைதிலி மிக அழகானவள். கலகலவென கன்னத்தில் குழி விழச் சிரிப்பாள். சந்திரனும் நல்லவர். ஒழுக்கத்தோடு வாழ்பவர். இதை அறிந்த மைதிலி அவரோடு நட்புறவாடினாள்.

‘என்ன சாமியாரே! சௌக்கியமா?’ எனக் குறும்போடு அழைப்பாள். வணங்குவது போல பாவனை காட்டுவாள்.

சந்திரனின் மனம் மைதிலியை நாடியது. ஆனால் அவளிடம் தன் காதலைச் சொல்லப் பயந்தார். காரணம் மைதிலியின் சுபாவம் தன்னைப் பார்த்து பல்லைக் காட்டியவர்களைத் துரத்தியடிப்பாள். தேவையற்ற சலனங்களுக்கு அவள் இடங்கொடுக்காமல் இருந்தாள். மற்ற மாணவர்கள் அவளுக்குக் காதல் கடிதம் எழுதுவதை சந்திரனிடம் சொல்லிச் சிரிப்பாள்.

‘ஏன் சாமியாரே ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கக் கூடாதா? உடனேயே காதல் கடிதம் எழுதுவதா? இப்போது காதலிப்பார்கள். பின்பு பெற்றோர் சம்மதிக்கவில்லை. சீதனம் வேண்டும் என்று கூறிவிடுவர். காதலாவது கத்தரிக்காயாவது? ஆனானப்பட்ட இராமனே சீதையை நெருப்பில் குதிக்கச் சொன்னவர் தானே? மனைவியைப் பணயப் பொருளாக வைத்து சூதாடி அரசவையில் சேலையை உரியும்போது மௌனமாயிருந்தவர் தருமபுத்திரர்..’ என்பாள்.

மைதிலியின் வார்த்தைகளைக் கேட்ட சந்திரன் தன் காதலை மனதுக்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டார். பின்பு இருவரும் சகஜமாகப் பழகினார்கள். அவர் பட்டயக் கணக்காளராக பதவி பெற்றார். மைதிலி ஒரு ஆசிரியராகி, வேறு ஊரில் உள்ள பாடசாலைக்குச் சென்றுவிட்டாள்.

சில வருடங்களில் தான் தொழில் புரிந்த அலுவலகத்துக்கு வேலைக்கு வந்த கமலாவை விரும்பி மணமுடித்தார் சந்திரன். அவரது இல்லற வாழ்க்கை இனிமையாகக் கழிந்தது.

இப்போது மைதிலியின் வரவு இன்று அவரது சிந்தனையில் முள்போல குத்திக்கொண்டிருந்தது.

‘எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த யோசனை?’ என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார்.

மைதிலிதான். அதே கருகருவென்ற கேசம்.. அதே சிரிப்பு.. அதே கன்னக் குழி..

‘சந்திரன்.. என்ன சாப்பிடுகின்றீர்கள்? அப்படியே கமல்ஹாசன் மாதிரியே இருக்கீங்களே. ஆச்சரியமாக இருக்கின்றது’ என்றாள்.

இருவரும் பேசியபடியே கார் இருக்கும் இடத்தை அண்மித்து விட்டார்கள்.

சந்திரன் மைதிலியிடம், ‘உங்களை உங்கள் வீட்டில் கொண்டுபோய் விடவா?’ என்று கேட்க மைதிலியும் ‘சரி’ என்றாள்.

தன் மனதை அரித்துக் கொண்டிருந்த விடயத்தைப் பக்குவமாகக் கேட்டார் சந்திரன்.

‘மைதிலி நான் உரிமையோடு கேட்கின்றேன். நீ ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை?’

‘எனக்குப் பிடித்தவரை நான் சந்திக்கவில்லை. நான் சந்தித்த ஆண்கள் எல்லோருமே பணத்தாசை பிடித்த பிசாசுகள். திருமணத்துக்குப் பிறகும் வேலைக்குப் போக வேண்டும் என்று கண்டிஷன் போடுகின்றனர்.

அதுவுமில்லாமல் திருமணமான பின்னர் எனது குடும்பத்தாருக்கு உதவி செய்யவும் கூடாதாம். ஏனது தந்தை இறந்துவிட்டார் சந்திரன். அம்மா என்னோடுதான் இருக்கிறா. என் இரண்டு தங்கைகளையும் திருமணம் முடித்துக் கொடுத்துவிட்டேன். அவர்களும் என் பணத்தில்தான் குறியாக இருக்கின்றார்கள். சுயநலமிக்க உலகம் இது. உன்னைப் போல் ஒருத்தர் கிடைத்திருந்தால் நான் எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பேன். நிச்சயம் உனது மனைவி கொடுத்து வைத்தவள். சாமியாராக இருந்தவன் இப்போ குடும்பஸ்தன்’ எனச் சொல்லிவிட்டு கலகலவெனச் சிரித்தாள் மைதிலி.

கிணறு வெட்டப் போய் தேவதை கிளம்பியதாக இருந்தது சந்திரனுக்கு. கார் வெள்ளவத்தையை அடைந்தது.

‘மைதிலி உண்மை நட்பிற்கு மதிப்புக் கொடுத்து என்னை வெறுத்துவிடுவாயோ என்று பயந்துதான் என் காதலை உனக்குச் சொல்லவில்லை’ என சந்திரன் கூறினார்.

மைதிலி மௌனமானாள். சந்திரனும் எதுவும் பேசவில்லை. தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் சந்திரனைத் திரும்பிப் பார்த்தாள் மைதிலி.

‘நீ ஆம்பிளை. தைரியமாகச் சொல்லியிருக்கலாம். நீ கேட்டிருந்தால் நான் மாட்டேன் என்றா சொல்லியிருப்பேன்?’ என்றுவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.

இருவர் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.

மைதிலி விம்மலுடன் காரைவிட்டு இறங்கினாள்.

கார் கதவு அடைக்கப்பட்டது.

கார் கதவு மட்டுமல்ல..

சந்திரனின் மனக் கதவும்தான்!!!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..