கிள்ளை மொழியெல்லாம் கிளியேயுன் நினைவூட்ட
          மெல்ல மயக்குமென் மேவும்நிலை சொல்லுதற்குத்
துள்ளும் கயல்சரியோ?  துடிப்பான மான்சரியோ?
          மெல்ல அலையெழுப்பும் சிற்றோடை நீர்சரியோ?

மஞ்சுப் பொதிசரியோ ? மயக்கும் விழிசரியோ?
          கொஞ்சும் குயில்வந்து குரலிசைத்துச் சொல்லிடுமோ?
நெஞ்சம் நிறைந்ததென் நெகிழ்ந்த காதலதைச்
          சொற்களின் தூதாகச் சொல்லிவிட எதுசரியோ?

தழுவிடும் ஆசைவந்துத் தத்தளிக்கும் குமிழியென
          மொத்தமாய்க் குமிழ்விட்டு மோதியென்னை நிலைகுலைக்கும்
சத்தமின்றித் தூதுசொல்லச் சரியான தூதெதுவோ?
          நித்தமுன்னைத் தழுவிடுமக் காற்றிங்கு சரிவருமோ?

மெல்ல முகிழ்மலர்கள் மேனி தடவியிங்கே
          செல்லும் காற்றினிலேச் சீராய் மணம்பரவும்
சொல்லும் காதல்மொழி சுகந்தப் பொடிசுமந்து
          உன்னிடம் வரும்போது உள்ளம் மணத்திடுமே!