இலங்கை அரசின் இனவெறிப் படுகொலைக்குத் துணை நிற்கும் நடுவணரசும் ஏன் தமிழக அரசும், உருசியா, சீனா போன்ற பொதுவுடைமை நாடுகளும், ஏனைய உலக நாடுகளும் வரலாற்றுப் பிழை செய்வதை இந்நூல் அரண் செய்கின்றது. தமிழர் யார்? சிங்களவர் யார்? இலங்கையின் வரலாறு என்ன என்பதையும், அறிவியல் முறையிலான மரபணுக்கூறு இயல், மானிட இயல், தொல்லியல் சார்ந்த மண்டைஓடு, எலும்புகள், கலங்கள் பற்றிய ஆய்வியல், நாணயவியல், நிலவியல், சமுதாய இயல், மொழியியல், வரலாற்றியல், இசை,ஆடல், நாடகஇயல், இறையியல், இலக்கண இலக்கியவியல், அசைவியக்கக் கூறுகள், தொன்மம், அய்தீகம் முதலியவற்றின் அடிப்படையில் இலங்கை உட்படப் பல்வேறு நாடுகளைச் சார்ந்த உலகளாவிய ஆய்வியல் கருத்துகளின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளது. முற்றிலும் மாறுபட்ட இவ்வணுகுமுறை வரலாற்றுக் கொடை என்பதில் மிகையில்லை.

இலங்கையின் தொல் வரலாறு கூறும் நூல்களாகக் கொள்ளப்படும். தீப வம்சம்’ (கிமு.4), மகாவம்சம்’ (கி.மு.6) புனைவுகளும், சமயச்சார்பும், இயற்கை இறந்த நிகழ்வு களும் கொண்டவை என்பதைக் குறைந்த அளவு வரலாற்றறிவுடையோர் கூடப் புரிந்து கொள்ள முடியும். மேலும் குடியேற்ற வல்லாண்மை நாடுகள் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ளும் நோக்கில் தமக்கு உரிய பிரித்தாளும் சூழ்ச்சி, இன அடிப்படையில் மக்களைப் பிரித்தல் போன்ற கூறுகளுடன் இலங்கை வரலாற்றை எழுதியுள்ளன. மகாவம்ச, தீபவம்ச அடிப்படையில் இலங்கை அறிஞர் எழுதியுள்ள (குணவிதாரண) வரலாறு அணுக்கருவி ஆய்வுகளை விடவும் தவறான வரலாற்றியல், கடுமையான விளைவுகளையுடையது என்பதைஎடுத்துக்காட்டுகிறது. வேண்டுமென்றோ அல்லது சரியான புரிதல் இல்லையோ இலங்கைக்கு துணை நிற்கும் ஒவ்வொரு நாடும் அறிந்து கொள்ள வேண்டியதன் இன்றியமையாத தேவையை இந்நூல் வலிமையாகவே உணர்த்தியுள்ளது.

இலங்கை வட இந்திய தோற்றமும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும் கொண்டது என்ற ஆய்வின் கருதுகோள் தக்க தரவுகளுடன் தெளிவாக்கப்பட்டுள்ளது. வட இந்தியா, தென் இந்தியா என்ற பாகுபாட்டைப் போலவே இலங்கையும் கரையோர நாடு, கண்டி நாடு என உயர்வு தாழ்வு மனப்பான்மை உணர்வுடன் கூடிய இரண்டு பிரிவுகளாக உள்ளது. இந்திய உறவுமுறை அமைப்பு, உறவுச் சொற்கள், அசைவியக்கக் கூறுகள், சிங்கள மொழியின் இலக்கிய இலக்கண அமைப்பு, இசை இலக்கணம், பொதுமக்கள் இலக்கியம், பத்தினிக் கடவுள் வழிபாடு, இலங்கைத் தொல்குடி வேடரும், சிங்களரும், இலங்கைத் தமிழரும் வணங்கும் கதிர்காம கடவுள், ஊர்ப்பெயர்கள், நாகசதுக்கம், கோயில் அமைப்பு முதலானவை தென்னிந்திய தமிழ் மொழியுடன் ஒத்து இருப்பதை நூல்விரிவாகவும் வெகு எளிய, நல்ல தமிழில் விரித்துரைப்பதைப் பாராட்டவேண்டும்.

இந்தியாவின் மேற்கு வங்கம், ஒடிசாப் பகுதியிலிருந்து குடியேறியவரே சிங்களவர் எனக் கூறப்படுகிறது. ஆழ்ந்து நோக்கும் போது, சிங்கள மரபணுக் கூறுகள் தென்னிந்திய மக்களுடன்தான் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அறியமுடிகிறது. தொடக்கத்தில் ஒத்த மரபணுக் கூறுகளைக் கொண்டிருந்த மக்கள் காலப் போக்கில் இரு வேறு இனக்குழுக்களாகப் பிரிந்து பின்னர்த் தனித்தனி இனமாகவும் சமூகமாகவும் மாறியுள்ளமை (அண்மைக் காலத்தில்)யை நூல் விரிவாகக் கூறுகின்றது. சிங்களச் சமுதாய அமைப்பில் முதலிடம் பெறும் ‘கராவ’, ‘சலாம’ இனத்தவர் தமிழகத்தில் இருந்து பல காரணங்களால் பல்வேறு காலங்களில் இலங்கைக்கு குடிபெயர்ந்தவரின் மரபினரே. புலப்பெயர்வுக்குப் பின் ஒரு மொழி, ஒரு சமயம் சார்ந்தவர் வேறொரு மொழி, வேறொரு சமயத்தைத் தழுவும் போது நாளடைவில் இன்னோர் இனக்குழுவாக உருவாவர் எனும் வரலாற்று நிகழ்வுக்கு எடுத்துக்காட்டாகவே இலங்கையைக் கொள்ள வேண்டும் எனும் கருத்தியல் மறுக்க இயலாத சான்றுகளுடன் அரண் செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து சென்ற தமிழர், மலையாளர், கன்னடர், துளுவினரும், தென்கிழக்காசியாவிலிருந்து புலம் பெயர்ந்த சாவகரும் காலப் போக்கில் சிங்களராகியுள்ளனர். பின்னர் இரண்டு தலையாய மொழி பேசும் குடும்பங்களாக மாறியுள்ளனர். சிங்களம் என்ற சொல் பல்வேறு மொழிபேசுவோரின் வழிவந்த குழுக்களை ஒன்றிணைத்து நிற்கும் சொல்லாகும். சிங்கள அறிஞராகிய ஏ.த.செல்வா இலங்கையில் குடியேறிய மக்களே தமக்குள் தடையின்றி கலந்து சிங்கள தேசிய இனத்தை உருவாக்கினர். எனவே சிங்களத்தில் வாழ்வோர் தம்மை ஒரு குடும்பத்தையோ, இனத்தையோ சார்ந்தவர் எனக் கூறல் கூடாது என்ற கூற்றை இந்திரபாலா போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர் என்பதை நூல் சுட்டிக் காட்டுகின்றது.

அசைவியக்கக் கூறாகிய அய்தீகம் எல்லா மரபிலும் காணப்படுவது போலவே சிங்கள மரபிலும் காணப்படுகிறது. பவுத்தம் சார்ந்த தீபவம்சம், மகாவம்சத்தில் பத்தினிக் கடவுள் வழிபாடு இடம்பெறவில்லை. இதனைச் சுட்டிக் காட்டும் நூல், இவ்வழக்கு பவுத்தத்திலிருந்து இந்து சமயத்திற்குச் சென்றது என்பதை மறுக்கின்றது. தமிழகத்து முருகக் கடவுள் வழிபாடு போன்று இலங்கைத் தொல்குடி வேடர்களும், சிங்களரும், தமிழரும் வழிபடும் கதிர்காம வழிபாடு இருப்பதையும்நினைவிற் கொள்ளவேண்டும்.

நூலின் கருத்துகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துக் காணின், இந்தியாவில் தோன்றிய தொல் சமயமாகிய பவுத்தம் இலங்கையில் வேரூன்றிய உயிரிர்ப்புடன் இருக்கின்றது. இந்து சமயத்தை எதிர்த்துத் கடவுளைத் தம் வயமாக்கிக் கொண்டுள்ளது. சிங்களர், வட, தென்னிந்தியரோடும், இலங்கைத் தமிழரோடும் இன உறவு கொண்டவர். வரலாறு முழுவதும் ஒரு தனி நிலப்பகுதிகளில் வாழ்ந்துவருவதால் தமக்கென்று சில தனித்துவங்கள் கொண்டு சிறப்பாகப் போற்றுகின்றனர் என்பதே நூலின் முடிவாக அமைந்துள்ளது.

உலகின் முதல் அறிவாளர் இனம் எனப் பறை சாற்றிக் கொள்ளும் இன்றைய ஆட்சி – இந்திய ஆட்சியாளர் இந்த உண்மைகளை அறியாதவர் எனப் புரிந்து கொள்ள முடியாது, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் சிங்கள அரசுக்கு இந்தியா துணை நிற்பது உள்ளங்கை நெல்லிக்கனி! உலக அறிஞர்கள் ஆய்ந்து எழுதிய வரலாற்று உண்மைகளே இவை என்ற வகையில் உலக நாடுகள் அறியாதிருக்கவும் வாய்ப்பில்லை. இயற்கை வளமுள்ள இலங்கையைத் தம் கட்டுக்குள் கையகப்படுத்தும் செயலே இது என்பது வெள்ளிடைமலை! இந்நூல் சிங்களமொழியில் வெளிவருமானால் சிங்கள வெறியர்களின் கண்களைத் திறக்கும்.


1 Comment

மீனா · ஆகஸ்ட் 2, 2019 at 5 h 46 min

மிக்க மகிழ்ச்சி தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

நூல்கள் அறிமுகம்

வெய்யோனின் வேந்தன்

இராமாயணம் வாசித்தவர்கள் அதில் பல காண்டங்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்…

அது போல இந்த இராவண காவியத் தில் மூன்று காண்டங்கள் தமிழ்போல.

த = தன்னிகரில்லா தமிழ்வேந்தனைப் பற்றி முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின் றார் எழுத்தாளர் ஸ்ரீமதி.

 » Read more about: வெய்யோனின் வேந்தன்  »