தாய்நாட்டை பிரிந்த
அகதிபோல் ஆனேன்
உன்னைப் பிரிந்து
வாடும் நான்

– தட்சணா மூர்த்தி

கொடுத்துச் சிவந்த
கரங்களைக் காண்கிறேன்!
குங்கும வியாபாரி
என்றால் அப்படித்தான்!

– க.பன்னீர் செல்வம்

ஆயிரக் கணக்கானோரை
எழுப்ப வேண்டும்
மரணத்திற்கெதிரான மருந்து
யார் கையில் இருக்கும்?

– முனைவர் ம.ரமேஷ்

தொடரி கிளம்பி நேரமாயிற்று.
சன்னலில் எட்டிப் பார்க்கிறேன்.
இன்னும் துரத்தியவாறே…
உன் நினைவுகள்.

– புகழேந்தி

எனக்குள்
நீ.
ஒளிந்து விளையாடமுடியாமல்
நான்.

– காவனூர். சீனிவாசன்.

மரம் குறித்து
கவிதை ஒன்று
எழுதுகிறேன் குறிப்பேட்டில்
படபடக்கிறது தாள்.

– சக்திஅருளானந்தம்

நமக்குத் தெரியவில்லை
அதற்குத் தெரிந்திருக்கிறது
எங்கோ துளிர்விடுகிறது
பச்சை மூங்கில்.

– வெற்றிப்பேரொளி

காயங்களும் கண்ணீரும்
சொந்தமாகிப் போன வாழ்வில்
விரக்தியிடமிருந்து
விலகித்தான் நிற்கிறேன்…

– ஆத்தூர் சாகுல்

பேருந்துப் பயணத்தில்
ஊசி விற்ற சிறுவன்
தைத்துக்கொண்டே வருகின்றான்
என் பயணம் முழுதும்.

– ஆ.நடராஜன்

வயலை உழுகின்ற உழவன்
அரை நிர்வாணமாய்
வரப்பில் நின்ற பொம்மை
அழகான ஆடையுடன்..!

– அனுராஜ்

வாசனை இல்லா
வண்ண வண்ணப் பூக்கள்
பறிக்க முடியாதபடி
அவள் சேலையெங்கும்.

– தமிழ்.

நடந்த தூரத்தை
அளவிட முடியவில்லை
சுற்றும் பூமியை
நிறுத்திட இயலாது.

– வா.சண்முகம்

உலக நாடுகளைச்
சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள்.
கீழே விழுந்து உடைகிறது
பொம்மை விமானம் .

-ஆ.நடராஜன்

நிமிர முடியாதவனுக்குத்
தாள்களே தலைகள் !
நிமிர்ந்தே நடப்பவனுக்குத்
தலைகளே தாள்கள் !

– கவிக்கோ துரைவசந்தராசன்

உயிர் இல்லையென்றாலும்
உயிர்பயம் காட்டுகிறது
அத்துமீறும் பறவைகளுக்கு
சோளக்காட்டு பொம்மை..

– தென்பரை இராக பாஸ்கர்

வண்ணங்களில் சிறந்தது
கறுப்புதான் என்கிறேன்…
காரணம் கேட்கிறீர்கள்
கண் இல்லை எனக்கு.

– செல்வா ஆறுமுகம்

நீ எப்பாத்திரத்தில்
ஊற்றுகிறாயோ..
அப்பாத்திரத்தில்
நிறையும் நீராவேன்..

– சாரதா க. சந்தோஷ்

பாடு பொருள் என்னிடம்
ஏதும் இல்லையென
நினைத்துக் கொள்ளாதே …
உனது கொலுசொலிகள் உள்ளனவே !

– கா.ந.கல்யாணசுந்தரம்

உச்சாணிக்கொம்பில்
என்னை ஏற்றி விட்டு
உற்சாகத்தில் பலர்
தன்னந்தனிமையில் நான்..

– லஷ்மி கார்த்திகேயன்

ஒரு தெரு கூட
இத்தனை கிளர்ச்சி தருமா
எதிர்பார்க்கவில்லை
நீ வசிப்பதால்.

– பான்ஸ்லே

நீ ஓர் அலகு
நான் ஓர் அலகு
இருவரும் இணையின்
அதுவே பேரழகு !

– நளினி தேவி

வாழ்க்கையை ஒரு
கேள்விக்குறியோடுஅணுகுகிறேன்
அதுவும் கேள்விக்குறியோடு
என்னை தினம் பார்க்கிறது

– சரஸ்வதி ராசேந்திரன்

நிதர்சனம் இதுவென்ற
புரிதலின்
உணர்தலால்
இயல்பு வசப்படுகிறது!

– அன்புச்செல்வி சுப்புராஜு

பனிக்குடம் உடைந்து ஓடுகிறது
தடைகளை மீறி
அந்த ஆறடி பள்ளத்தை நோக்கி
மனித வாழ்க்கை.

– த.அதியமான்

உனக்குள் புதிதாக
வெட்கம் முளைத்து
துவங்கப் பட்டது
என்னை வீழ்த்தும் யுத்தமொன்று.

– தமிழ் அரசன்

எப்பொழுதும் மிஞ்சம்
வைக்கிறார் அப்பா
குழந்தைகள் உறங்கியதும்
பசியாறினாள் அம்மா.

– கேசவன் புருஷோத்தமன்

கையசைத்து அவள்
பேசத் தொடங்கினாள்
விழி அசைக்காமல்
சிலையாகி போனேன்

– ஷர்ஜிலா யாகூப்

காண்போரிடமெல்லாம்
கவனமாக கைகொடுக்கிறான்
அந்த ஒற்றைக்கல் மோதிரம்
காதலியின் அடையாளம்…

– ஐ.தர்மசிங்

தூக்கத்திற்கு நான்
பாய் விரிக்கிறேன்
ஏக்கம் எங்கிருந்தோ வந்து
சுருட்டிப் போடுகிறது

– கண்ணன் புலமி

எதையோ இழந்ததாக எண்ணி
வருந்திக் கொண்டிருந்தேன்.
இறுதியில்தான் தெரிந்தது நான்
இழந்தது என்னைத்தான் என்று.

– மா. ஷங்கர்

ரோஜாவை நினைப்பவர்கள்
முள்ளுக்கும் சேர்த்தே தான்
நீரிரைக்க வேண்டும் மனமே
மனித வாழ்வும் அப்படியே.

– ஜென்சி செல்வராஜ்

மறப்பதற்கு மனதை
திசை திருப்பிப் பார்க்கிறேன்
வார்த்தைகளின் வடிவமாக
அங்கும் வந்து வதைக்கிறாய்

– மருதா சமத்

ஒவ்வொரு சொல்லாக
உதிர்த்துக் கொண்டிருக்கிறாய்
நான் கவிதைகளாகக்
கோத்துக் கொண்டிருக்கிறேன்

– மதுரா

நாட்டின் குடிநீர் பஞ்சம்
அமைச்சரவையில் விவாதம்
அயல்நாட்டு பானங்களை
ருசித்தபடி…

– வெ. கலிவரதன்

ஆழ உழுது விதைத்தேன்
உன் நினைவு களை
மறுநாள்,,,,, நீ தான்
எங்கோ முளைத்து விட்டாயே

– பாவலர் வீரவாணன்

மிதிபட்ட புல் தலைநிமிர்கிறது
மீண்டும் வளர,
மனிதனுக்குப் பாடமிது-
கற்றுக்கொள்வானா…!

– செண்பக ஜெகதீசன்


1 Comment

தென்பரை இராக.பாஸ்கர் · செப்டம்பர் 10, 2019 at 4 h 41 min

எனது கவிதையையும் பதிவிட்டமைக்கு நன்றிகள் பல…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...