ஹைக்கூ கவிதைகளைக் குறித்த இக்கருத்துக்கள் ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும்
- மூன்றடிகளால் பாடுவது.
- ஹைக்கூ கற்பனையை ஏற்காது.
- ஹைக்கூ உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது
- ஹைக்கூ உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது
- ஹைக்கூ தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும்
- ஹைக்கூ கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை.
- ஹைக்கூ இருண்மையை மேற்கொள்ளாது.
- ஹைக்கூவில் நுண்பொருண்மை இல்லை.
- கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை.
- பிரச்சாரமின்மை.
- எளிமையாகக் கூறுவது.
- சொல்லுவதைக் காட்டிலும் சொல்லாமல் விடுவது.
- சின்ன உயிர்களையும் சிறப்பித்துப் பாடுவது.
- மின்னல் என வரும் ஈற்றடி அமைப்பினைக் கொண்டதாக இருப்பது.
- மெல்லிய நகைச்சுவையுணர்வு இழையோடியிருக்கும்படி அமைவது.
- இயற்கையைப் பாடுவதுடன் இயற்கையை மனித உணர்வுகளோடு இணைத்துப் பாடுவது.
- ஆழ்மன உணர்வுகளும் மெல்லிய சோகமும் இழையோடும்படி அமைவது.
- பிற உயிர்களைத் தனக்கு இணையாக மதித்துப் பாடுவது.
என்ற கருத்தை ஹைக்கூ படைப்பாளர்களும், வாசகர்களும் கருத்தில் கொண்டு ஹைக்கூ கவிதைகளை அணுக வேண்டும்
ஹைக்கூ – சொல் விளக்கம்
‘ஹை’ என்பதற்கு ஜப்பானிய அடிச் சொல்லுக்கு அணுத்தூசி, கரு, முழுமையான கரு என்ற பொருள் உண்டு. ‘கூ’என்பது சொற்றொடர், வெளிப்பாடு, வாக்கியம், பகுதி, ஒரு வரி, ஓர் அடி, ஒரு செய்யுள், ஒரு கவிதை என்றும் பொருள் தருகிறது ஜப்பானிய அகராதி. (நிர்மலா சுரேஷ், ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல், ப.15.)
இவற்றை இணைத்துப் பார்க்கையில் ஹைக்கூ என்பது கரு போன்றும், உயிரணு போன்றும் உருவானதொரு கவிதை என்னும் முழுப்பொருளைத் தரும். மேலும் வளர்ச்சிக்கும் விரிவுக்கும், ஒரு கருவுக்கு உள்ளிருக்கும் இன்னொரு கவிதைக் கருவைக் காண்பதற்கும் ஹைக்கூ என்ற சொல் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.
ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ‘Haiku’ என்ற சொல்லுக்கு இணையாகத் தமிழில் ஹைகூ, ஹைக்கூ, ஹைய்கு, ஹொக்கு, அய்க்கூ, ஐக்கூ என்ற சொல்லாட்சிகளும், அதன் வடிவத்தைச் சுட்டும் வண்ணம் துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்பா, அகத்தியக் கவிதை, கடுகுக் கவிதை, குட்டைக் கவிதை, குறுங்கவிதை, நறுக் கவிதை, மத்தாப்பூக் கவிதை, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை முதலான பெயர்களாலும் அடையாளப்படுத்தப்படுகிறது. இன்று ஹைக்கூ என்ற சொல்லாட்சியே தமிழ் இலக்கிய உலகில் இடம்பெற்றுள்ளது
ஹைக்கூ வாசிப்பு முறை:
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும் (மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மூன்றாவது அடி என்ன சொல்லவரும் என்று சிந்தனையில் மூழ்க வேண்டும்… மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி நாம் சிந்தித்த கருத்தைப் பிரதிபலிக்காது எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஹைக்கூவும் வாசகனும்:
ஹைக்கூ ஒரு காட்சியைக் காட்டுகிறது. அதைப்பற்றிச் சொல்வதில்லை. அதன் விளைவான உணர்ச்சிகளையும் சொல்வதில்லை, படிப்பவரின் கற்பனைக்கே அவைகளை விட்டுவிடுகின்றது.
எழுதும்போது கவிஞனுக்கும் கருப்பொருளுக்கும் ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் எண்ணங்களைக் கலையவிடாமல் நேரடியாகச் சொல்லும்போது கவிஞனின் உணர்வுக்கும், வாசகனின் மனதிற்கும் கவிதை ஒரு பாலமாக அமைந்து நேரடித் தொடர்பை உண்டாக்கிவிடுகிறது
கவிஞனின் எண்ணம் முழுவதையும் ஹைக்கூ வெளிப்படுத்துவதில்லை, ஹைக்கூ கவிதைகளைப் புரிந்துகொள்வதில் வாசகனுக்கு மிகப்பெரிய பங்குண்டு ‘ஹைக்கூ ஒரு பொருளை சுட்டிக் காட்டுவதோடு நின்றுவிடும், வாசகனே அதில் மறைந்திருக்கும் உணர்ச்சிகளைத் தேடித் துருவிக் கண்டுபிடித்து சுவைக்க வேண்டும்
மேலும், ஈரோடு தமிழன்பன் அவர்கள் ‘ஹைக்கூ முழுமையானதாகவோ, தெளிவான கருத்துத் தெறிப்புடனோ இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாசகன் தனது கைவசம் கொஞ்சம் வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஹைக்கூவைப் படிக்க வேண்டும். அவை தேவைப்படலாம். அவன், தனது அனுபவங்களையும், அனுமானங்களையும், கற்பனைகளையும் எடுத்துக் கொண்டு சென்றால், தானும் படைப்பாளியோடு ஒரு பங்குதாரராகிப் பயனை இதயக்களத்தில் வரவு வைக்கலாம். வாசகனும் கவிஞனோடு சேர்ந்து ஹைக்கூவை மணந்துகொண்டு அவனுக்கு ஒரு விதத்தில் சகலையாகி விடுவதைத் தவிர வேறு வழியில்லை’ (தமிழன்பன், சூரியப் பிறைகள், ப.10.) என்று குறிப்பிடுவதிலிருந்தும் ஹைக்கூ கவிதையைப் புரிந்து பொருள் கொள்வதில் வாசகன் எந்த அளவுக்கு இன்றியமையாதவனாக விளங்குகின்றான் என்பதை உணரலாம்.
ஹைக்கூவில், நாம் காட்டும் காட்சி அல்லது நிகழ்ச்சி இயற்கையைப் பற்றி, மனிதனைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி ஓர் அரிய உண்மையை உணர்த்துவதாக, வாசகன் உள்ளத்தில் ஒளியேற்றுவதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஹைக்கூ எழுத வேண்டிய அவசியமில்லை (அப்துல் ரகுமான், சோதிமிகு நவகவிதை, ப.44.) என்பார் அப்துல் ரகுமான்.
ஹைக்கூவின் மரபு குறித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கூற்று (அப்துல் ரகுமான், சோதிமிகு நவகவிதை, ப.44
ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய மரபுகள் உண்டு.
- ஹைக்கூவில் முதல் இரண்டடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்
- மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்றமொழி. தந்தி மொழியைப்போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும்.
- உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும். ஹைக்கூவுக்குத் தலைப்பிடக் கூடாது என்பதற்கான காரணம் இதுதான்: தலைப்பைத் தாண்டிச் சிந்திப்பதைத் தடை செய்கிறது. ஒரு ஹைக்கூவின் உட்பொருள் (குறியீடு போல்) விரிந்து செல்வதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு ஹைக்கூக்கள் பெரும்பான்மையும் ஒற்றைப் பரிமாணத்தில்தான் வருகின்றன என தன் வருத்தத்தைப் பதிவுசெய்வார் கோவை ஞானி. ஒரு உண்மையான ஹைக்கூ குறைந்தபட்சம் இரண்டு உட்பொருளையாவதுத் தாங்கி நிற்பது சிறப்பு.
மேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன என்றால் மிகையாகாது.