மழைக்கால ஓரிரவில்..
உதிர்த்துக் கொண்டிருந்தது
வெண்ணிறப் பூக்களை மேகம்..
உலவும் காலத்தில் உயிர்த்தோழியுடன்
பறிக்கும் உயிரை அவனது வசீகர கண்கள்..
காரணம் தேடும் மனம்
ஊர் சுற்ற.. தவமாய் தவமிருந்து
விழிகளை சந்திக்க..
ஏனோ அவன் எனைத் தொடர..
ஆள் அரவமற்ற தெருவில்..
பூமழை மனதிலும் திடீரென..
உள்ளே தள்ள வெளிவரும் இதயத்தை..
நிற்காமல் நின்றேன் ஓரிடத்தில்
பதின்ம வயதின் பருவத் துடிப்போ..
இது தான் முதல் காதலா..?!
தோற்றேன் ஒத்திகை பார்த்து..
நடுங்கியது உடல் சாரலில் நனைந்து..
நுரையீரல் சற்றே வீங்கியது..
அழைப்புக்குரல் “என்னங்க”
நிராயுதபாணியான நொடியில்
நிமிர்ந்தேன் தரிசிக்க
விரும்பிய கமலக்கண்ணனை..
மஞ்சள் நிற தெருவிளக்கினடியில்
அழகிய மணாளன்..
சருகானேன் காதலில்லை
அந்தக் கண்களில்.. இடி தாக்கியது..
அவன் திருவாய் மலர்ந்ததில்..
“உங்கள் தோழியின் பெயரென்ன..?!”