வாழ்க்கை பலருக்கு போராட்டமான ஒன்று. அதே வாழ்க்கை தான் பலருக்கு மிகுந்த மகிழ்வை தரும் ஒன்றாகவும் இருக்கிறது. அவரவர் கண்ணோட்டத்தை வைத்தே அவரவரின் வாழ்வு மதிப்பீடு செய்யப்பட்டு அளக்கப்படுகிறது என்றால் அது மிகை இல்லை என்றே சொல்லி விடலாம். . இந்த வாழ்க்கை அப்படி என்ன பெரிதாக நமக்கு போதித்து விடுகிறது? என்கிற கேள்விகளுக்கு அது மிகப் பெரிய உண்மையை மனித குலத்திற்கு இயம்பி ஒரு நிலையாமை தத்துவத்தை விளக்குகிறது என்று பதில் அளிக்கலாம்.

அவனுக்கு என்ன நல்லா வாழ்றான். பொறந்தா அரசியல்வாதியாக பொறக்கனும். நினைச்சது எல்லாம் அனுபவிக்கலாம். அவனுக்கு என்ன அவன் தாத்தா சொத்துல வாழ்றான் என்று எத்தனை எத்தனை வெறுப்புணர்வு அடுத்தவரின் இன்பமான வாழ்க்கையை நினைத்து. மனிதனுடைய சந்தோசம் கெடுவது எதனால் என்கிற ஆய்வு சொல்கிறது “ மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் நாம் இப்படி வாழ்கிறோமே” என்கிற எதற்கும் உதவாத நினைப்பு தான் காரணம். நம் வாழ்வை மேம்படுத்தும் பொறுப்பு நமக்கு அதிகமாகவே இருப்பதை உணர வேண்டும். நமக்கு இணக்கமாக யாரோ ஒருவர் தான் வருவார்கள். அடுத்தவர்களால் நம்முடைய வாழ்க்கை வளர்ச்சிக்கு போகாது. நாம் தான் அதை பசுமையாக்கி செழுமையாக்க வேண்டும்

நல்ல விஷியத்தை தேடினால் நல்லது வாய்க்கும் என்பது சத்தியம். தேடுவது தான் தேவையாகிறது. வாழ்க்கைய பிரகாசமாக்கும் தேவையை அதிகப்படுத்தலாம். தூசுகளை வடிக்கட்டுவதை போல தேவையில்லாத காரியத்தை உங்களை காயப்படுத்துகிற செயலை உங்கள் உள்ளத்தை கெடுக்கிற அற்பங்களை வடிக்கட்ட பழக வேண்டும். முகம் சுழிக்கும் நிகழ்வை நாம் ரசிப்பதில்லை. நம் வாழ்வு நம்மை பார்த்து முகம் சுழிக்கும் படி நடந்து கொள்ள வேண்டாம். உங்களை நினைத்து உங்கள் உன்னதமான காரியங்களை நீங்கள் எப்போது பெருமை படுகிறீர்களோ அப்போது தான் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம் ஆகும்.

பதவிகளால் வருகிற ஆணவம் மோசமான வாழ்க்கையை கற்றுக் கொடுத்து விடும். சக மனிதனை தன்னை போலவே நேசித்த மாபெரும் ஞானி வள்ளலார் பணிவுக்கும் நேசிப்புக்கும் நமக்கு உதாரணமாக திகழ்கிறார். நம்மை பார்த்து உண்மையான புன்னகையோடு மற்றவர்கள் அணுகி பழக வேண்டும். கோபத்தாபங்கள் கடந்து வாழ்வை கடந்து அன்பை மதிப்பை அடுத்தவர்களுக்கு கொடுத்து விட்டு செல்ல தவற கூடாது. அது தானே அழகான வாழ்க்கையை நமக்கு கொடுக்கும்.

“ஐயா நான் எதாவது சாதிக்கனும் எப்டின்னு சொல்லுங்கய்யா” என்று கேட்ட மாணவியிடம் என்ன சொல்வதென்றே புரியாமல் இது வரையில் அந்த கேள்விக்கு பதில் சொல்லாமலே இருக்கிறேன். ஏனெனில் நான் இன்னும் சாதிக்க ஆரம்பிக்கவே இல்லை. ஆனால் ஒன்று மட்டும் அவளிடம் சொல்ல தோன்றுகிறது. பிறர்க்கு முன்னுதாரணமாக வாழ்ந்து விடும் அந்த நல்ல வாழ்க்கை தான் சாதனை வாழ்க்கையாக இருக்கும் என்று தோன்றுகிறது. வெற்றிகளை குவிப்பது மட்டுமே சாதனை இல்லை. நம் அருகில் உள்ளவர்களுக்கு நல்ல வாழ்க்கையை பெற்று தருதலும் நல்ல பிறவிக்கு உதாரணம் தானே?

மனசார வாழ்த்தி மனமார மன்னித்து மனப்பொய் இல்லாமல் மகிழ்வோடு அணுகுவது தான் சிறப்பு. நெற்று என் நண்பன் வந்தான் ச்சே…. என்ன கொடுமையான வாழ்க்கை. அவனவன் பிழைக்கிறதுக்கு நாம கஷ்டப்பட்டு உழைக்கிறோம் ஒழுங்கா சம்பளம் கூட கிடைப்பது இல்லை எப்படி வாழ்வது என்று புலம்பி தள்ளி தன் கோவத்தை கொட்டி தீர்த்து விட்டான். இந்த சூழ்நிலையில் அவனிடத்தில் போய் இன்பமாய் இரு எல்லாதையும் தாங்கித்தான் ஆக வேண்டும் என்றெல்லாம் அறிவுரை வழங்கினால் கண்டிப்பாக கோபத்தால் என்னை வாட்டி எடுத்து விடுவான். “நமக்கும் கீழே இருப்பவர் கோடி” என்று கண்ணதாசன் பகர்வதைப் போல நமக்கு கிடைத்த இந்த சூழலை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். வேட்டைக்குச் செல்லும் விலங்குக்கு சில நேரங்களில் பட்னி கிடக்க வேண்டி வரும். வெற்றி அடைய போகிறவன் சில நேரங்களில் வெறுப்படையாமல் கடந்து போகத்தான் வேண்டும். பாரம் சுமைக்கும் உடம்பு உறுதியோடு இருக்கும் என்பதனை மறந்து விட வேண்டாம்.

காரல்மார்க்ஸ் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வறுமையிலும் பஞ்சத்திலும் அடிபட்டு காதலியிடம் கூட இன்பமாக வாழ முடியாத போதும் ஒரு யுகப்புரட்சியை அவனால் ஏற்படுத்த முடிந்தது. படிக்காத பாமரனாக இருந்து தன் நடிப்பால் அறிவார்ந்த பகுத்தறிவை வெளிப்படுத்தி திரைத்துறையில் நீங்காத இடம் பிடித்த எம்.ஆர்.ராதா. திரை ரசிகர்களை நல்வழிப்படுத்த ஒரு காரணமாக இருந்தார். கால் ஆயுளோடு தன் வாழ்வை முடித்து கொண்ட மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணச்சுந்தரம் மாபெரும் சிந்தனையை சமூகத்திற்கு விதைத்து சென்றார். எத்தனையோ சாதனையாளர்கள் தன் வாழ்வை வாழ முடியாத சூழலிலும் வாழ்ந்து காட்டினார்கள். அவர்களுக்கு அமைந்த அதே பிறவி தான் நம் எல்லோருக்கும் வாய்த்திருக்கிறது. “யார்க்கும் இந்நிலை பொதுவன்றோ” என்று பாரதி சொல்வதை போல எல்லோருக்கும் வாழ்க்கை ஒன்று தான். அதை வாழ்வதும் வாழ்ந்து காட்டுவதும் நமது நடத்தையிலே இருக்கிறது. உங்கள் நம்பிக்கையின் அளவை பொறுத்தே வாழ்வின் அளவு இருக்கும்.

நம்பிக்கை நிறைந்தவர்கள் நடத்தையிலும் பாவனையிலும் பேச்சிலும் அழகாக தெரிவார்கள். நம்பிக்கையால் ஒப்பனை செய்து கொள்ளுங்கள் உங்களை. நம்பிக்கை தாழ்நிலை வாழ்க்கையை உயர்நிலையாக மாற்றும் வல்லமை படைத்தது. வலிமையான மனதை எந்த தருணத்திலும் கை விட்டு விடாதீர்கள். தினம் தினம் செய்படுங்கள். செயல்படாத நாள் உங்களுக்கு நரகம். ஒன்றை நோக்கி பயணிக்கும் போது பாதியிலேயே திரும்பி விட வேணா்டாம். நீங்கள் திரும்பிய இடத்தில் கூட வெற்றி இருந்திருக்கலாம்.

அர்த்தமுள்ளது வாழ்க்கை
உங்கள் அளவை அதிகரியுங்கள்

இந்த வாழ்வை கடந்து விடுவோம் என்கிற எளிய சூத்திரம் தான் மனித இனத்தையே வலிமைப்படுத்தி அரை வினாடி கூட வாழ்வை பற்றி நினைக்க விடாமல் வைக்கும் ஒரு மாய விளையாட்டு தான் இந்த வாழ்க்கை. மனிதனுக்கும் மனிதனுக்குமான வேறுபாடுகள் உண்டு. அது எந்த அடையாளத்தை வைத்து வருகிறது? என்கிற கேள்வி தான் ஒருவனை இன்னொருவனை விடவும் மேம்படுத்தி அல்லது தாழ்வுபடுத்தி காட்டுகிறது.அவரவருக்கான ஓர் அடையாளம் நிச்சயம் கை ரேகையைப் போல இருக்கும். அந்த அடையாளமே ஒருவன் எப்படி வாழ்கிறான் அல்லது வாழ்ந்தான் என்கிற அளவுகோலாகிறது.

உங்கள்
அகம் தீர்மானிப்பதே
உங்கள் அடையாளம்

“இந்த காலத்துல ஏன் டா தமிழ் படிக்கிற? சொன்னா கேளு பிசிஏ படி நல்ல எதிர்காலம் இருக்கு” “தமிழ் படிச்சி என்ன பண்ண போற? நல்ல வேலை கிடைக்காது. கிடைத்தாலும் நல்ல சம்பளம் கிடைக்காது” தமிழ் பயில்பவர்களுக்கு அது போன்ற அவநம்பிக்கை பேச்சு கண்டிப்பாக கிடைத்திருக்கும். நான் மட்டும் என்ன விதிவிலக்கா? எனக்கும் கிடைத்தது. தமிழ் படித்தேன் எதிர்காலம் இருந்தது. நல்ல வேலை மட்டும் இல்லை நல்ல மனத்திருப்தியும் கிடைத்தது. சம்பளம் மட்டும் இல்லை நல்ல மனிதர்களும் கிடைத்தார்கள். மாணவர்களை வழி நடத்தும் பெருமையும் கிடைத்தது. எல்லாம் தமிழ் மயம்.

நாம் அங்கீகாரம் ஆகும் வரை பல்வேறு அவமானங்கள் வந்தே தீரும். அதன் பிறகு நமக்கு கிடைக்கிற மரியாதை வெற்றி எல்லாம் அந்த அவமானங்கள் மேல் சிம்மாசனம் போட்டு நிற்கும். வாழ்தல் எளிது

அடையுங்கள் லட்சியத்தை
வாழ்க்கை அர்த்தமுள்ளது


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »