மலையகம் என்றதும் பெரும்பாலானவர்க்கு குறிப்பாக ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மலைநாட்டை நல்லதொரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறார்கள். சிலுசிலுவென்று குளிரும் புதிதாக திருமணத்தில் இணைந்தவர்கள் தேர்ந்தெடுக்கும் தேனிலவு பிரதேசமாகவும் பாடசாலை மாணவர்களளுக்கான சுற்றுலா தளமாகவுமே மலைநாடு இன்றுப் பார்க்கப்படுகின்றது. மலையகத்தில் தேயிலையும் இறப்பரும் பயிரிடப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. மேலும், பிரித்தானியர்களால் 1815ம் ஆண்டு கண்டி கைப்பற்றப்பட்டப் பின்னர் மலைநாட்டை அவர்கள் ஒரு பெருந்தோட்டமாக மாற்ற முனைந்து அதில் வெற்றிப் பெற்றனர். இவ்வெற்றிக்கும் பொருளாதார செழிப்புக்கும் பிண்ணனியில் மிகப்பெரிய மனிதத்துன்பியல் வரலாறு கடந்த 200 வருடங்களாக தொடர்கின்றது என்பது மறுப்பதற்க்கு இடமே இல்லை.
மேலே நான் குறிப்பிட்ட தலைப்பை அணுகுவதற்கு முன் மலையகத்தின் சில வரலாறுகளை உங்கள் கண்முன் ஒரு வரலாற்று வரைபடத்தை விரித்துக்காட்ட விரும்புகின்றேன். தென்னிந்தியாவின் பண்ணைமுறை அடிமைவாழ்க்கையும் தென்னிந்தியாவின் இராமநாதபுரம், திருச்சிராப்புள்ளி உட்பட்ட பல்வேறு இடங்களையும் மிகவும் தாக்கிய பஞ்சமானது மனித இருப்பை மனிதவளத்தை வெளிநோக்கித் தள்ளியது. மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவும் எங்கேயாவது தொழில் தேடிப் புறப்படலாம் என்ற மன நிலையை இவ் சந்தர்ப்பத்தை மிகவும் லாவகமாக ஏற்கனவே தென்னிந்தியாவை முற்றுகையிட்டிருந்த ஜரோப்பியருக்கு கையில் அல்வா கிடைத்தது போலிருந்தது. கரும்புத் தின்ன கைக் கூலி வேண்டுமா?
அவர்கள் மலேசியா பிஜித்தீவுகள் தென்னாபிரிக்கா இலங்கை நாடுகளுக்கும் தொழிலாளர் களை மிகமிக மலிவான கூலிக்காகக் தழிழ் தரகர்கள் மூலமாக பசப்பு வார்த்தைகளை அம்மக்களிடம் கூறி அவர்களை கொண்டு வந்தனர். இங்கே வந்தப் பின்னர்தான் ‘வந்து பாருடா வழுக்கை பாறை” என்ற நிலையை அவர்கள் கண்டனர். பிரித்தானியர், அவர்களை கொண்டு காடுகளை வெட்டி தேயிலையை பயிரிட்டனர். இது ஒரு நீண்ட வரலாறு. பின்னர், இந்த வரலாற்றை நான் புள்ளிவிபர அடிப்படையில் அவர்கள் பட்ட துன்பங்களை எப்படி அரசினால் அவர்கள் பழிவாங்கப்பட்டு பிரஜா உரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக மாற்றினார்கள் என்பதையும் எழுதுவேன்.
இப்போது அங்கிருந்த வந்த எமது நான்கு தலைமுறை மக்கள் இன்றும் மலையகப் பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள் ஜீவனோபாயக் தொழிலாக இந்த தேயிலை செடிகளேக் காணப்படுகின்றது.
மலையகப் பெண் தொழிலாளர்கள்
பெருந்தோட்டங்களில் அதிகமாக வேலை செய்வது பெண் தொழிலாளர்களே. அவர்களுக்கு நாட்கூலி அடிப்படையில்தான் சம்பளம் வழங்கப் படுகின்றது. எவ்விதமான மாதச்சம்பளம் அடிப்படையுமின்றி அவர்கள் பறிக்கும் கொழுந்தின் நிறையை கணித்தே அவர்களின் தின கூலி நிர்ணயிக்கப்படுகின்றது. குறைந்தக் கூலியில் நிறைய வருமானத்தை ஈட்டும் வகையில் பெருந்தோட்டப் பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இப்படியாக சதா உழைக்கும் வர்க்கமான இப் பெருந்தோட்டப் பெண்கள் கல்வியறிவற்றவர் களாகவும் அவர்களை இவ் தோட்டங்களில் அன்றிலிருந்து இன்றுவரை கொழுந்தெடுக்கும் மனித இயந்திரங்களாக வைத்துள்ளார்கள். கொழுந்துப் பறிக்க எவ்விதமான கல்வித் தகைமைகளும் அவசியமில்லையென்பதாலேயே அவர்களுக்கு கற்றலுக்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனது தாயார் தரம் 02 ம் ஆண்டு கல்விக் கற்கும் போது வெறும் 10 சதத்துக்கு தேயிலைக்காடுகளில் படரும் புல்லுகளை வெட்டவதற்க்காக போனவர் .அப்போது குழந்தை தொழிலாளர்களையும் களை எடுக்க கொழந்து பைகளை சுமந்து வர உள் வாங்கப்பட்டவாகளில் எனது தாயாரும் ஆவார்.
நான் மலையகத்தில் பிறந்த வளர்ந்த அந்த சமூகத்தைப் பற்றி நன்கறிந்தவர் என்ற அடிப்படையில் மலையகப் பெண் தொழிலாளர் களுக்கு அதிகமான பிரச்சனைகள் சுகாதார ரீதியில் காணப்படுவதை நன்கறிந்திருக்கிறேன். அவர்கள் பலவிதமான அசௌகரியங்களுடன் பெருந்தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். ஆனால், இந்த விடயத்தைபபற்றி யாரும் சிந்திப்பதே இல்லை. மலையகத்தை மூடு பனி சுழ்ந்திருக்கும் அழகைத்தான் மாறி மாறி பகைப்படமெடுத்தும் ரசித்துவிட்டு மக்கள் கடந்து போகிறார்கள். ஆனால், மூடுப்பனிக்குள் எத்தனை துன்பம் உறைந்துக் கிடக்கின்றது என்பதை யாரும் அறிவதில்லையே. அந்தத் துயர்களை உங்கள் முன் கொண்டு வரவே இக் கட்டுரை தேவையாகிறது.
மலையகத்தில் தொழில் செய்யும் பெண் களுக்கு மாதவிடாய் காலங்களில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றது. முறையான சுகாதார
கின்களை (கீவீsலீஜீமீக்ஷீ) அவர்கள் பாவிப்பதில்லை. வெறும் துண்டுதுணிகளை பாவிக்கிறார்கள். இதனால் அவர்கள் நீண்ட நேரம் தேயிலை மலைகளில் கொழுந்தெடுக்கும் போது அவற்றை அடிக்கடி மாற்ற இயலாமல் போகும் நிலை காணப்படுகின்றது. அங்கே, அதற்கான மலசலக் கூட நீர் வசதிகள் முறையாக இல்லை. அதிகாலை 7.30 மணிக்கு கொழுந்தெடுக்க சென்றால் மத்தியானம் 12.30 மணிக்கு வந்து பின்னர் மாலை 05.30 மணிக்கு வீட்டுக்கு வருகிறார்கள்..
இந்நிலையில் அவர்கள் துணித்துண்டகளைப் பாவிப்பதால் அவர்களுக்கு மிகுந்த அசௌகரியம் உருவாகின்றது. இதனை நான் பலரிடம் நேரடியாக அறிந்துளளேன். துண்டு துணிகள் பாவிப்பதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் இருப்பதாக 2007ம் ஆண்டு ஙிஙிசி உலகசேவை இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவித்தது.
இவ்வாய்வில்:
1. துண்டு துணிகள் பாவிப்பதால் அதிகமான இரத்தப் போக்கை அடையாளம் காணமுடிவதில்லை.
2. துண்டு துணிகள் ஆரோக்கியமற்றவை.
3. ஆரோக்கியமற்ற துண்டு துணிகளால் வெகு சிக்கிரமாக கர்ப்பவாசல் புற்றுநோய் உருவாகுகின்றது.
4. அவைகளை நீண்ட நேரம் பாவிப்பதால் எரிச்சலும் தொடர்ச்சியான உராய்வினால் தோல் உரிவதுடன் புண்களும் சதைகளில் பகுதியில் உருவாகின்றது.
இந்த ஆய்வு உண்மையில் மிகவும் மிகவும் வரவேற்கத்தக்கதாகும். அனேக வயது வந்தவர்களும் இளம் பெண்களும் துண்டு துணிகளால் அவதிப்படுகின்றார்கள். இதனை சுட்டிக்காடடிய ஙிஙிசி அவர்களுக்கு இலவசமாக நப்கீன்களையும் சுகாதார துவாலைகளையும் வழங்க வேண்டும் என மாநகராட்சிகளுக்கு வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டது.
ஆரோக்கிய துவாலைகளின் விலையானது 100 ருபாய் தொடங்கி 500 ருபாவரை விற்பனை செய்யபப்டுகின்றது. (இலங்கையில்) தரமான பெரிய ஷ்லீவீsஜீமீக்ஷீ நப்கீனின் விலையானது 440 ஆகும். பெண் தொழிலாளர்களின் நாட்கூலியே 650 ருபாவாகும். அவர்கள் எப்படி ஒவ்வொரு மாதமும் 100 ருபா தொடங்கி 440 வரை மாதவிடாய்க்கான நப்கீன்களை வாங்க முடியும்? இது மலையகத்தில் தொழில் புரியும் பெண்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் 40 — 45 வயதை ஒத்த பெண்கள் தொடர்ச்சியாக இரத்தப்போக்கை கொண்டுள்ளனர். இவர்கள் இதற்காக கை வைத்தியங்களையும் மருத்தவ செலவுகளையும் செய்து பயனற்றவேளையில் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று பின்னர் கர்ப்பப்பபையை எடுத்து விடுகிறார்கள்.
காரணம், அவர்கள் அதிகமாக சுமை சுமப்பதால் குறைந்தது 20 ளீரீ முதல் 50 ளீரீ வரை கொழந்தை தலையில் சுமக்கிறார்கள். மேலும் கொழுந்து மட்டுமல்ல கொழுந்தப் பறித்த பின்னர் வீடுகளுக்கு திரும்பும்போது விறகையும் சுமந்த வருகிறார்கள். இன்றுவரை அவர்கள் எரிபொருளாக விறகைப் பாவிக்கிறார்கள். இதனால் தானாகவே இவர்களுக்கு கர்பப்பை இறங்கி விடுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. (தகவல்: நேரடி கள உரையாடல் களப் பெண்கள்)
மேலும், மலையகப் பெருந்தோட்டப் பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் பயன் படுத்தும் இந்த நப்கீன்களை இப்போது ஓரளவு அறிந்து வைத்துள்ளார்கள். எனது தாயார் காலத்து தலைமுறை இந்த நப்கீன்கள் சுத்தமாக அறிந்திராவிட்டாலும் இன்றைய மலையகப் பெண்கள் “கொட்டஸ்” என்றப்பெயரில் இதனைப் ஓரளவுப் பாவிக்கிறார்கள். மேலும் பலர் இதனைப் பாவிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். காரணம்… மூடநம்பிக்கைகள் இடையில் பாயைப் போட்டு படுத்து விடுகின்றது. கொட்டஸ் பாவிப்பதால் தங்களுக்கு பேய்பிடிக்குமாம். பேய்க்கு இரத்தம் பிடிக்குமாம். இப்படிச்சொல்லி அதிகமானப் பெண்கள் கொட்டஸ் பாவிப்பதை தவிர்த்துக் கொள்கிறார்கள்.
பேய் பிடித்தாலும் பரவாயில்லை, இந்தக் கொட்டஸ்களை சுகாதார முறையில் அகற்றுவது என்பதும் இன்னுமொரு சவால்மிக்க விடயமாகும். மரக்கறி தோட்டங்களிலும் புதைக்க முடியாது. ஏனெனில் மரக்கறிகளும் மரங்களும் பட்டு போய்விடும் என்பார்கள் குறிப்பாக கறிவேப்பிலை மரத்துக்கும் கத்தரிக்காவுக்குமே ஆபத்து . ஆகவே அவர்கள் இந்த கொட்டஸ்களை எங்கு புதைப்பது அகற்றுவது? கொட்டஸ்களை எரிக்கவும் முடியாது. காரணம், இரத்ததை எரித்தால் காட்டேறி பிடிக்கும் என்பார்கள். இத்தனை சவால்களையும் தாண்டி அவர்கள் இதனை பாவிக்கத்தான் வேண்டுமா? இந்த ‘கொட்டஸ்’ இத்தனை சமாச்சாரங்கள் நிறைந்திருப்பது எத்தனை பெரிய ஆச்சர்யம் என்பது மலையகத்தில் பெய்யும் ஓயாத மழையாய் தொடர்கின்றது.
நம் எல்லோருக்கும் தெரியும். பெண் மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறைக்கோ அல்லது பொது இடத்தில் இருக்கும் கழிப்பிட்த்துக்கோ சென்றால் ஆங்காங்கே கிடக்கும் இரத்தம் தோய்ந்த நப்கீன்களை காணும் போது சட்டென்று அருவருப்பு முகத்தில் வந்து முக்காடு போட்டுக் கொள்ளும். இரத்தவாடைக் கொண்ட அவைகளை யார்தான் விரும்புவர்? ஆகவே மலையகப் பெண்கள் இதனை எப்படி சமாளிப்பது? மிகவும் குறுகிய லயத்திலும் மலசலக்கூட வசதிகள் அற்ற பிரதேசத்தில் அவற்றை சிரமமாக அகற்ற போராட வேண்டியுள்ளது. கழிவகற்றல் முறையானது சவால்மிக்க இன்னுமொரு விடயம் மலையகத்தில். அத்தோடு சூழலியல் பிரச்சனையுமாகும்.
இதனாலேயே மலையகப் பெண்கள் தண்ணி யோடு தண்ணியாக கழுவிப் போகும் இரத்தக் கறைகளை துண்டு துணி பாவிப்பதன் மூலம் கழுவிடவே விரும்புகிறார்கள். ஏனோ அதுவே அவர்களுக்கு பழக்கப்பட்ட விடயம் அனுபவமாகவே மாறிப்போய்விட்டது. ஆகவே, அதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனில் நேர்த்தியான விழிப்புணர்வும் நடைமுறை சாத்தியமாவதற்கு சில காலங்களும் தேவைப்படுகின்றது.