வாழ்வின் எல்லாப்பக்கங்களிலும் கவிதைகளால் நிறைந்துள்ளது. ஆனாலும், அது எல்லோரின் கண்களுக்கும் புலப்படுவதில்லை. நாம் பார்க்கின்ற பார்வைகளும் நம் எண்ணங்களிலும் அது மாறுபடுகின்றது. நம் கண்முன் புலப்படாத ஒன்றைக்கூட அகக்கண்களினால்கூட கவிதையாக்கிட முடியும்.
அவ்வாறாக அந்த வானம் அதன் முழுவதும் மின்னுகின்ற நட்சத்திரங்கள், பூமி முழுவதும் பரவிக்கிடக்கின்ற கடல், மரங்கள், சருகுகள் என்பனவற்றையும், காதல், காமம், பிரிவு அகம்சார்ந்தும், புறம்சார்ந்தும் பேசுகின்ற கவிதைகளாக இத்தொகுப்பில் காணமுடிகின்றது.
அகம் சார்ந்து பேசுகின்ற கவிதைகளை விட புறம் சார்ந்து பேசுகிண்றபோது சமூக விழிப்புணர்ச்சியை, சமூக மாற்றத்தினை ஏற்படுத்திவிட முடியும்.
காலம் காலமாக இத்தமிழ் சமூகம் சாதி எனும் பெரும் தீயை இன்னும் இன்னுமாக எரித்துக்கொண்டுதான் இருக்கின்றது. இதில் பலநூறு குடிசைகள் எரிந்துக் கொண்டுதான் இருக்கின்றது. கால நீட்சியில் அதன் வீரியம் குறைந்ததாகத் தெரியலாம். ஆனால், அது உண்மையல்ல என்கிறார் கவிஞர் சசிகுமார்.
‘‘தப்பித்துச் செல்ல வழியில்லா
பாசப் பிணைப்புகளில்
இன்னுமெரிகிறது
பற்ற வைத்த சாதிகளின் வன்மம்
வெவ்வேறு வடிவங்களில்.’’
சாதியின் வடிவம் மாறி இருக்கிறதே தவிர, அதன் வீரியம் இன்னும் குறையவே இல்லை. இவ்வாறாக சாதீய பிற்போக்குத் தனத்திற்கு எதிரான பலநூறு கவிதைகள் வரவேண்டும்.
எளிமையான வரிகளால் எதார்த்தத்தை கவிதையாக்குகின்ற வல்லமை கவிஞருக்கு வாய்த்து இருக்கின்றது.
‘‘தனக்கான நிழல்
தன்னைத் தொடர்கிறது
ஏண்டாமென் நிர்பந்தித்தால்கூட’’
சமகால நிகழ்வுகளை, மிகச்சரியான நேரத்தில் கவிதையாக்குவது கவிஞனின் கடமை. புரட்சியின் வித்தாய் சமூக அக்கரையோடு பலகவிதைகளை இத்தொகுப்பு முழுவதிலும் காணக்கிடைக்கிறது. அதிலும் நெடுஞ்சாலைகளுக்காக அடியோடு அழிக்கப் பட்டுவரும் இயற்கை வளங்கள் குறித்த இந்த கவிதை சமூக மாற்றத்திற்கான ஒரு மரத்தின் விதை.
‘‘தடயமற்று
அழிக்கப்பட்ட
பலநூறு மரங்களின்
பிணங்களின் மீது
நீண்டு படுத்திருக்கும்
இந்த நெடிஞ்சாலையின்
கதையை.’’ பக் 84
மனிதனின் இறப்பு எவ்வளவு இழப்பாக, கவலைக்குரியதாக உள்ளதோ, அதேபோல ஒரு மரத்தின் இழப்பும், இழப்பாகப் பார்க்கின்ற மனோநிலை எல்லோருக்கும் வர வேண்டும்.
மரங்களின் குகைகளில் ஆதிமனிதன் வாழத் தொடங்கினான். அவற்றின் இலை களை ஆடையாக உடுத்தினான். அதன் காற்றை சுவாசித்தான். அவற்றின் கனிகளை ருசித்தான். விறகுகளை எரித்து உணவை புசித்தான்.
இப்போது மரமே வேண்டாமென வெட்டிச் சாய்க்கின்றான். ஏவாள் தொடங்கி இன்றுவரையுள்ள இந்த வாழ்வியல் இடைவெளி என்பது ந்மக்கு வெகு தூரமாகிவிட்டது. நவீனம் என்ற ஒற்றை வார்த்தைகளுக்குள் உலகம் சுருங்கிவிட்டதின் விளைவு இது. என்றாலும், எதிர்கால சந்ததிப்பிள்ளைகளுக்கு நாம் எதை கொடுத்துவிட்டுப் போகப்போகின்றோம் என்ற சமூகம் சார்ந்து எழுப்புகின்ற கவிஞரின் இந்தக் கோபம் கவிதைகலில் காண்கிறோம்.
‘‘ஏவாள் ருசித்த கனியில்
வெட்கம் துவங்கி
மறைக்கப்பட்ட அங்கங்களில்
ரசனித் தூவி
வெட்கம் மறைக்க வெட்டிய
என் கானக மரங்களில்
உன் இனம் செழித்துவிட்டது
என் இனம் செத்துவிட்டதெனக் கதறி
காற்றில் பறந்து மறைந்தது
உயிர் வற்றிய சருகொன்று’’ பக் 90
சொல் புதிது, பொருள் புதிது, வளம் புதிது சோதிமிக்க நவ கவிதை. எந்நாளும் அழியாத மாகவிதை என்பார் பாரதி.
பாரதியின் கவிதைக்கு இலக்கணமாக புதிய, புதிய வார்த்தைகளுடன், நல்ல தொகுப்பைத் தந்திருக்கிறார் கவிஞர் கோவை சசிகுமார். வாழ்த்துடன் வரவேற்போம்.
மண் பயனுற வேண்டும்.
சிறகசைப்பில் மிளிரும் வெயில்
கவிஞர் கோவை சசிகுமார்
பக்கங்கள் : 96
விலை : 70
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
சிறகசைப்பில் மிளிரும் வெயில் – ஒலி வடிவ விமர்சனம்
ஒலி வடிவம் – சகோதரி சூர்யா ஈஸ்வரன்