பாடல் – 33

கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ
ஆலம்வீழ் போலும் அமைச்சனும் – வேலின்
கடைமணிபோற் றிண்ணியான் காப்பும்இம் மூன்றும்
படைவேந்தன் பற்று விடல்.

(இ-ள்.) கோல் அஞ்சி – (தன்) செங்கோலைப் பயந்து, வாழும் குடியும் – வாழ்கின்ற குடியும்; குடிதழீஇ – குடிகளைத் தழுவி, ஆலம் வீழ்போலும் – ஆலமரத்தின் விழுதைப்போல் (தாங்கவல்ல,) அமைச்சனும் – மந்திரியும், வேலின் – வேலினிடத்து, கடைமணி போல் – பூண்போல, திண்ணியான் – திட்பமுடையவனது, காப்பும் – காவலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், படை வேந்தன் – படையையுடைய அரசன், பற்றுவிடல் – பற்றுவிடாது ஒழுகுக; (எ-று.)

(க-ரை.) அரசியலுக்கு அடங்கி நடக்கும் குடிகளையும், குடிகளை ஓம்புவதில் சூழ்கண்ணாக விளங்கும் அமைச்சனையும், குடியை நீங்காதபடி உறுதியாகக் காக்குந் தொழிலையும் அரசன் கைவிடலாகாது என்பது.

கோல் அஞ்சி – கோலை அஞ்சி : இரண்டாம் வேற்றுமைத் தொகை. கோலுக்கு அஞ்சி என்று நான்காம் வேற்றுமையாக்குவாரு முளர். வாழும் என்ற குறிப்பால் கோல் பொதுமையின் நீங்கிச் செங்கோலை யுணர்த்தியது. குடி – குடிப்பிறந்தோர். தழீஇ : செய்தென் வினையெச்சம் : தழுவு : பகுதி, தழுவி என்று இருக்க வேண்டியது விகுதிகெட்டு, பகுதி தழி எனத்திரிந்து உயிர்நீண்டு அளபெடுத்து வந்தது, சொல்லிசை யளபெடை, வீழ் : வீழ்வது எனக் காரணக்குறியால் வந்தது, இகர விகுதி புணர்ந்துகெட்டது, தொழிலாகு பெயருமாம். அமைச்சன் அரசனோடு இருப்பவன் என்ற பொருளில் அமாத்யன் என்ற வட சொற்றிரிபு என்ப. விடல் : எதிர்மறை வியங்கோள் வினைமுற்று ‘பற்றி விடல்’ என்ற பாடங் கொள்ளுமிடத்துக் கைக் கொண்டு விடாதிருக்க என்று பொருள் கொள்க.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »