தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை
என் தேசத்தில் தேடுகின்றேன்
வறுமையற்ற வாழ்வாய்
எனக்கான சந்ததிகளில்
விழிகள் நிறைய
கண்ணீரோடு கையேந்தும்
சிறுவர்களின் கெஞ்சலும்
தோல்சுருங்கி
கைவிடப்பட்ட மூதாட்டியின்
முனகலோடும்
நடுங்கும் கைகளில்
கைத்தடியின் ஆதரவில்
கால்இடறி ஆதரவின்றி
விழப்போகும் முதியவரிடமும்
தேடுகிறேன்
வறுமையற்ற வாழ்வை.
ஒரே துணியை பலமுறை
உடுத்தி சக மாணவரின்
கேலிக்கு உரித்தாகி
முகம் சுண்டி வீடு திரும்பும்
மாணவனிடமும்
கல்வியின் ஏக்கங்களில்
வீடு வீடாய் பாத்திரக் கரியினை
முகத்தில் தடவி
வீடு திரும்பும்
சிறுமியிடம் தேடுகிறேன்
வறுமையற்ற வாழ்வை.
மார்சுரக்க வழியின்றி
தண்ணீர் நிரப்பி
தன் கைக்குழந்தையின் பசி போக்க
வழியின்றித் தவிக்கும்
தாய்மையில் தேடுகின்றேன்
வறுமையற்ற வாழ்வை.
இப்படியாக அடுக்கிப்போனால்
கண்ணிர் தளும்பும்
என் விழிகளில்
உவர்ப்புநீர் வற்றி
உதிரம் கொட்டிப்போகும்
வறுமையற்ற
வாழ்வினைத் தேடி
இன்னும் தான் ஓடுகின்றோம்
இன்னும் அந்த கானல்
நீர் கண்ணுக்குத் தெரிகின்றது
கைகளுக்கு எட்டவில்லை.