உறங்காத உண்மைகள் – சிறுகதைத் தொகுப்பு

கண்ணோட்டம் : ஜெஸ்மி எம்.மூஸா

கல்முனைப் பிரதேசத்தில் இருந்து சிறுகதைகள் வெளிவருதல் என்பது புதிய விடயமல்ல. இலங்கையின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் தென்கிழக்குப்பிரதேசத்தின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அம்பாறை மாவட்டத்தின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் கல்முனையை விடுத்து எம்மால் இத்துறை பற்றிப் பேசமுடியாது. சிறுகதையின் தோற்றம் எப்போது ஆரம்பித்ததோ அப்போதிருந்து அதற்குக் கணிசமான அளவு பங்காற்றியவர்கள் எம்மவர்கள்.

சிறுகதை என்பதும் அதன் அடையாளம் என்பதும் எமக்குப் பழக்கப்பட்டவை.சிறுகதையின் தோற்றம் எப்போது ஆரம்பித்ததோ அப்போதிருந்தே அதற்குக் கணிசமானளவு பங்காற்றிய மாவட்டம் அம்பாறை. மருதூர்க்கொத்தன்-அஸ-உமா வரதராசன் போன்ற பெயர் சொல்லக் கூடிய பரம்பரையொன்று இங்குண்டு. அத்தொடரிலேதான் அஷ்ரஃப் உறங்காத உண்மை யைத் தந்துள்ளார்.

ஒரு சிறுகதையானது இப்படித்தான் இருக்க வேண்டும் என மட்டிட்டுக் கூற முடியாது. அது அவரவர் சுயத்தினூடாகவும் எழுத்தின் மூலமாகவும் வருகின்ற அடையாளம். விமர்சன உரை-கருத்துரை என்ற பெயரில் கருத்துக்களை நாம் சொல்லலாமே ஒழிய இந்தக் கட்டுக் கோப்புக்குள்தான் நீங்கள் வர வேண்டுமென்று எங்களுக்குள் இழுத்து வருகின்ற வேலையை எந்த எழுத்துக்களுக்கும் செய்து விட முடியாது. அந்த வகையில் அஷ்ரஃப்பின் நூல் அவரது முயற்சி. இம்முயற்சிக்காக அவர் செலவழித்த காலங்கள் அதிகம். ஏனெனில் இதிலுள்ள கதைகள் காலங் கடந்தவையாகவும் இருக்கின்றன.

இதில், பதினொரு சிறுகதைகள் உள்ளன. அளவு ரீதியாகப் பார்க்கும் போது இவை நீளமான கதைகள். கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெட்ணம் – மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத்-சர்மா ஆகியோரது உரைகள் நூலுக்கு உரமிட்டுள்ளன.சர்மாவின் உரை இந்நூலின் நூலின் இருப்பு – இவருடைய எழுத்தின் அடையாளங்கள் போன்றவற்றையெல்லாம் புடம் போட்டுள்ளன.

சிறுகதைகள் ஆரம்பகாலச் சிறுகதைத் தளத்திலிருந்து மாறி – தாவித் – தழுவி – பீறிட்டு இன்று எங்கெங்கோவெல்லாம் சென்று கொண்டிருக்கின்றன. இக்காலத்தில் சிறுகதைகளுக்கான ஒரு வகைமாதிரியாக இக்கதைகளை அடையாளப்படுத்த முடியும். சிறுகதை எழுதத் தொடங்குகின்ற ஒருவருக்கு இந்த நூலைக்காட்டி இப்படித்தான் சிறுகதையின் ஆரம்ப முயற்சி இருக்கும் என்று சொல்ல

ஜெஸ்மி. எம். மூஸா

முடியும்.

முஸ்லிம் தேசங்கள் – முஸ்லிம் இலக்கியங்கள் – முஸ்லிம் எழுத்தாளர்கள் – தமிழ் தேசியம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இலக்கியங்களைக் கூறுபோட்டு அதற்குள் பலவற்றையும் தேடுகின்ற நிலையுண்டு.அது காலத்தின் தேவையென்றும் சொல்ல முடியும். அப்படிப்பார்க்கும் போது இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் அவற்றிலிருந்து முற்று முழுதாக மாறுகின்றன.

இச்சிறுகதைகள் எதிலுமே முஸ்லிம் பெயர்தாங்கிய பாத்திரங்கள் இல்லை.அப்படியென்றால் முஸ்லிம் தேச இலக்கிய காரர்களுக்குள் இருந்து இந்நூல் எவ்வாறு தப்பித்துக் கொள்ளப்போகினறதோ தெரியாது.

சிங்கள – தமிழ் மக்களோடு தாம் சந்தித்த விடயங்களை எழுதியிருக்கிறார் அஷ்ரஃப். அவர் எடுத்தாண்டிருக்கின்ற விடயங்களுக்குள் முஸ்லிம் பாத்திரங்களை எடுக்கலாமா? என்றால் அதுவும் கேள்விக்குறிதான். ஏனென்றால் அவர் எடுத்திருக்கின்ற கருவுக்கும் எங்களுடைய லைத்தும்மாவுக்கும் பாத்திமாவுக்கும் இப்றாகிமுக்கும் வேலை கிடையாது. தான் எடுத்துக் கொண்ட விடயத்தில் வெற்றி பெற்றோ அல்லது வேறுவிதமாகவே இருந்தாலும் ஒரு நூலைத் தந்திருப்பது பாராட்டத்தக்கது.

இத்தொகுப்பிலுள்ள முதலாவது கதை ‘வாணி அவள் வாழப்போகிறாள்’ என்பதாகும். இது வழமையான கதைக்கரு. ஒரு நண்பனுக்காகத் தன் காதலை விட்டுக்கொடுக்கின்ற விடயம்.

‘உறங்காத உண்மைகள்’ என்கின்ற இந்நூலின் தலைப்பைத்தாங்கிய கதையொன்றும் உண்டு. இக்கதை எங்களுக்குள் உறங்காத உண்மைகள் பலவற்றைச் சொல்கின்றது. ஒரு சமூகத்தின் சீர்திருத்தகாரனாக நின்று கொண்டு தான் கூற நினைத்த விடயங்களைப் பாத்திரங்களினூடக இக் கதையில் பேசியுள்ளார் ஆசிரியர். சுனாமியின் வீடுகள் கட்டப்படாமல் சீரழிக்கப்படுவதனை இக்கதையில் சாடுகிறார். இதற்கு அதிகாரிகளும் காரணம் என்கிறார். நாம் சொல்கின்றோம். அதிகாரிகளே காரணம். அகதிவாழ்க்கை-அவர்கள் படும் துயரங்களை ஒரு கரைசலாகக் கூறுகிறார்.தேர்தல் வரும் போது வந்து மறைந்து விடுகின்ற அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் பற்றியும் இக்கதை கூறுகிறது.

‘சாதி சகுணம்’ சாதியினைப்பற்றிய கதை. மஹாகவி து.உருத்திரமூர்த்தி-செ.கணேசலிங்கம் போன்றோர் சாதி பற்றி எழுதியுள்ளனர். எனினும் அவர்கள் பேசுவதிலிருந்து விலகி முஸ்லிம் சமூகத்திலுள்ள ஒருவர் அக்கருத்தாடலை எடுத்தாண்டிருப்பது வித்தியாசமானது.

‘நல்ல மனங்களின் சந்திப்பில்’ என்ற கதை, தமிழ் சகோதரர் ஒருவர் சிங்களப் பெண்ணைத் திருமணம் செய்வதால் வருகின்ற உறவுப்பரிமாறல் பற்றிக் கூறுகிறது. மொழி சகோதர உறவுக்குத் தடையல்ல என்பது இதில் இழையோடியுள்ளது.

தொகுப்பிலுள்ள கதைகள், அனுபவங்கள் ஊடக வருகின்ற அம்சங்களாகவும் பரிசுப்போட்டியில் வென்றவைகளாகவும்-பத்திரிகைகளில் வெளிவந்தவைகளாகவும் இருப்பது இத்தொகுதியின் பலமாகும். புரிதலுக்கான தலைப்புக்கள்-சாதாரண மொழி வழக்குகள் முதலிய சிறப்பம்சங்களும் இதில் உண்டு.

இத்தொகுப்பில் வருகின்ற கதைகள் அனைத்துமே குறிப்பிட்ட ஓட்டத்துக்குள்ளும் வகைமைக்குள்ளும் நின்று ஊசலாடுகின்றன. நீண்ட வாசிப்பின் பின்னரும் மாற்றங்களை நோக்கிய தேடலை அடுத்தும் இன்னும் நல்ல சிறகதைகள் பலவற்றை அஷ்ரஃப் தருவார் என்ற நம்பிக்கை உண்டு. அதற்கான பலமான அடித்தளம் இத்தொகுதியில் உண்டு. எது எவ்வாறான போதிலும் பிரதேச சிறுகதையாளர்கள் வரிசையில் அஷ்ரஃப் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார் என்பது திண்ணம். அவரது பணி தொடர வாழ்த்துக்கள்.

முதல் பதிப்பு : அக்டோபர் 2017
விலை : இலங்கை ரூபாய் 400

தொடர்புகளுக்கு : mimazhraf@gmail.com


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

நூல்கள் அறிமுகம்

வெய்யோனின் வேந்தன்

இராமாயணம் வாசித்தவர்கள் அதில் பல காண்டங்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்…

அது போல இந்த இராவண காவியத் தில் மூன்று காண்டங்கள் தமிழ்போல.

த = தன்னிகரில்லா தமிழ்வேந்தனைப் பற்றி முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின் றார் எழுத்தாளர் ஸ்ரீமதி.

 » Read more about: வெய்யோனின் வேந்தன்  »