பக்கத்து வீட்டு பரிமளம் வந்து அந்த விஷயத்தைச் சொன்னதிலிருந்து ரேகாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை.

“நீ என்னப்பா சொல்றே? சரியா பார்த்தியா?” என்று மீண்டும் நம்பமுடியாதவளாய்க் கேட்டாள் ரேரகா.

“பஜார்ல காய் கறி வாங்கப் போயிருந்தேம்பா. யாரோ ஒரு பொண்ணை ஸ்கூட்டர்ல உட்கார வச்சுக்கிட்டுப்போய்க்கொண்டிருந்தார் உன்னோட வீட்டுக்காரர்” – திரும்பவும் சொன்னாள் பரிமளா.

‘குபீர்’ என ஆத்திரம் அவள் உடல் முழுக்கப் பரவியது.

யாரவள்?

கேள்வி எழுந்து அவள் மண்டையைக் குடைய ஆரம்பித்தது.

கணவன் உதயகுமார் பணியாற்றும் அலுவலகத்தில் ஆண்டு தோறும் கலை நிகழ்ச்சி நடப்பதுண்டு. இவ்வாண்டு நிகழ்ச்சி நடத்தும்பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதற்காகவே அவன் இரவு, பகல் என்று பாராமல் பறந்துக்கொண்டிருக்கிறான்.

ஒரு வேளை, அது சம்பந்தமா அலுவலகத்தில் பணியாற்றும் சக பெண் ஊழியரைத் தன்னோடு கூட்டிக்கொண்டுபோயிருந்திருக்கலாம்.

வாய்ப்பிருக்கிறது. ஆனால், சந்தேகப் பேய் யாரை விட்டுவைத்திருக்கிறது?

அன்று தாமதமாய் களைத்து வீடு திரும்பியவனிடம் அது பற்றி கேட்கும் தைரியம் வரவில்லை. அவன் வேறு சீக்கிரமே படுத்துவிட்டான்.

மறு நாள்.

மாலையில் திடீரென வந்தவன், “என்ன ரேகா நீ? இதுவரையில் ரெடியாகாமல் இருக்கே? இன்னைக்கு என் ஆபீஸ்ல ப்ரோக்ராம் இருக்குன்னு உனக்குத் தெரியும்ல?” என பரபரத்தான்.

அவளுக்கு வெறுப்பாக இருந்தது.

இந்த ஆண்களையே நம்பமுடியாது. ரிகல்சல் அது இது என்ற சாக்கில் கூடப் பணிபுரியும் பெண்களிடம் வழியாமல் இருப்பார்களா?

சந்தேகம் வலுத்தது.

வேண்டாவெறுப்போடு அவனுடன் கிளம்பினாள்.

என்றாலும் ‘யார் அந்தப் பெண்?’ என்கிற கேள்வி மட்டும் அவள் மூளையைவிட்டு அகல மறுத்தது.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேவிட்டாள்.

“ஏங்க.. யாரோ ஒரு பொண்ணை நீங்க ஸ்கூட்டர்ல உட்கார வச்சுக்கிட்டுச் சுத்திக்கிட்டிருந்ததா பக்கத்து வீட்டுப் பரிமளம் சொன்னா. யாருங அது?”

“பொண்ணா..?” என்று குழப்பமாய்க் கேட்டான்.

நடிக்கிறான்.

சிறிது நேரத்தில், “அடடா.. அந்தப் பொண்ணா..? சரி நிகழ்ச்சி முடியட்டும் சொல்றேன்.” என்றவன் நாடகத்தில் ஒன்றி போனான்.

நாடகத்தில் நடித்த அந்தப் பெண் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தாள். அவளுடைய நடிப்பு அனைவரையும் கைதட்டவைத்தது.

ரேகாவும் அந்தப் பெண்ணின் நடிப்பில் மெய்மறந்துப்போனாள்.

ஒருவழியாக நிகழ்ச்சிகள் முடிந்தன.

ரேகாவை அழைத்துக்கொண்டு மேடைக்குப் பின்புறமிருந்த அறைக்குப் போனான் உதயகுமார்.

நாடகத்தில் பங்கேற்றவர்கள் அங்கேக் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்தப் பெண்ணும் இருந்தாள்.

அவளை ரேகாவிடம் அறிமுகம் செய்துவைத்தான் உதயகுமார்.

“ரேகா.. நீ கேட்டியேப் பெண், அவள்தான் இவள். இவளைத்தான் நான் ஸ்கூட்டரில் கூட்டிக்கிட்டு வந்தேன். நீ என்ன, எல்லோருமே இவனை பொம்பளைன்னுத்தான் நினைச்சுக்கிட்டிருக்காங்க. உண்மையில் இவன் என்னுடன் பணியாற்றும் ஆம்பளை. எப்படி இந்த மேக்அப்?” என்று சொல்லிச் சிரித்தான்.

சந்தேக வண்டு சடுதியில் காணாமல்போனது.

வெட்கித் தலைக்கவிழ்ந்தாள் ரேகா.

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »