இரும்பைத்தான் காந்தம் கவரும். இனிமையால் கவர்ந்தவர், அன்பால் தன் மக்களின் ரத்தத்தின் ரத்தத்தில் கலந்தவர்.

நீதிக்குத் தலைவணங்கச் சொன்னவரிடம் நீதியே தலைவணங்கியது எனலாம்.

தாய்க்குத் தலைமகனிடம் தாய்க்குலங்களே எங்கள் வீட்டுப்பிள்ளையாக்கிக் கொண்டனர் இவரை.

தமிழ்நாட்டை நம்நாடாக்கிக் கொண்டு ஊருக்கு உழைத்தவர்.

அன்பே வா என ஏழை எளிய மக்களுக்கு நல்லறங்கள் செய்தவர். தொழிலாளி, விவசாயிகளுக்காக உரிமைக்குரல் கொடுத்தவர்.

1960, 70 களில் என் தந்தையின் மாமா திரு.K.A.ரஹ்மான் அவர்கள் திரைப்பட உடையலங்கார நிபுணர். பிரத்தியேகமாக முன்னனி கதாநாயகிகளுக்கு என்று சொல்லலாம்.

இன்றும் அன்பே வா திரைப்படத்தில் கன்னடத்துப் பைங்கிளி திருமதி. சரோஜாதேவி அம்மாவுக்கு என் தாத்தா தான் உடைகள் வடிவமைத்தவர். படத்தின் பெயர்ப்பகுதியில்(டைட்டிலில்) காணலாம்.

சிம்லா மிகவும் குளிர்ப் பிரதேசம் ரஹ்மான்பாய் அதற்குத் தகுந்தாற்போல் உடைகள் இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆயத்தமாக இருந்த உடைகளை என் தாத்தா காண்பிக்க, மகிழ்ச்சியில் கட்டியணைத்து வாழ்த்து சொன்னார்களாம்.

படத்தில் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலில் சரோஜா தேவி அவர்களின் உடையைக் கண்டதும் சொந்தப் பணத்தை எடுத்து அன்பளிப்பாக வழங்கியுள்ளார். பேசிய தொகை கிடைத்துவிட்டது. கொடுக்கப்பட்ட வேலையைத்தான் செய்தேன் அதிகப்படியாக வேண்டாம் என்றிருக்கிறார் தாத்தா. இல்லை ரஹ்மான்பாய் கொடுக்கப்பட்டதைவிட அதிக வேலைப்பாடுள்ள உடைகளைத் தயாரித்திருக்கிறீர்கள் அதிகப்பணமல்ல என் அன்பு இது. என் அன்பு வேண்டாமா உங்களுக்கு என்றிருக்கிறார் எம்ஜிஆர் அவர்கள். வாங்கிய பணத்தை நிறைய வருடங்கள் செலவழிக்காமல் வைத்திருக்கிறார் என் தாத்தா.

இவ்வாறாக பல நல்ல குணங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம். திரைப்படங்களில் கொடைவள்ளல்களாக நடிப்பவர்கள் சொந்தவாழ்வில் கருமிகளாகத் தானிருந்திருக்கிறார்கள். நடிப்பதில் செய்ததை, சொந்த வாழ்வில் நடிக்காமல் செய்தவர்.

ஒருமுறை தேர்தல் பிரச்சாரத்திற்காக காரைக்குடிக்கு மாலை 6 மணிக்கு வருவதாக இருந்தது. வழக்கம்போல் 9 மணிக்கு வந்தார்கள். சுற்றுவட்டார மக்கள் காலையிலிருந்தே வர ஆரம்பித்துவிட்டார்கள். தாமதமானதால் அவரது வாகனம் வேகமாகக் கூட்டத்திற்குள் நுழைந்தது. காவலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டுதான் இருந்தார்கள் அதையும்மீறி எம்ஜிஆரைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் 8 வயதுச் சிறுவன் கூட்டத்திலிருந்து நடுச்சாலைக்குள் வந்துவிட்டான்.

பிரேக் போட்டாலும் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்குள் சிறுவனைக் கார் இடித்துவிட்டது. முதலில் காரிலிருந்து இறங்கியது யார் தெரியுமா? திரு. எம்ஜிஆர் அவர்கள். குழந்தை குழந்தை என்று அவர் பதறிவந்து தூக்கியது இன்னும் என் மனதில் நிழலாடிக் கொண்டுதானிருக்கிறது. தன் காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சிகிச்சைக்கான செலவு, சிறுவனின் படிப்பு, உணவு, உடை எல்லாவற்றையும் தானே ஏற்றுக்கொண்டார். அடிபட்ட சிறுவன் ஒரு சலவைத் தொழிலாளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவனின் பெயர் முருகேசன். காரைக்குடி, காட்டுத்தலைவாசல் என்னும் இடத்தில் சலவைத்தொழிலாளியாக அவன் குடும்பத்தினர் இருந்தனர்.

ஒருமுறை பட்டுக்கோட்டையிலிருந்து இரண்டு இஸ்லாமியப் பெண்கள் தங்கள் வீட்டுக்குத் தெரியாமல் இரவோடு இரவாக சென்னைக்குச் சென்றிருக்கிறார்கள். நேற்று இன்று நாளை படம் பார்த்துவிட்டு எம்ஜிஆருடன் கதாநாயகியாக நடிப்பதற்காகவாம். எம்ஜிஆர் வீட்டுக் காவலாளிகள் அவரிடம் விவரத்தைக்கூற இருவரையும் அழைத்துவரச் சொல்லி இருக்கிறார். நீங்கள் எடுத்த முடிவு தவறானது என அழகாக அறிவுரை கூறி பட்டுக்கோட்டை ஜம்ஆத்தார்களுக்கு போன் செய்து எனது காரில் குழந்தைகள் வருவார்கள். யாரும் அவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று சொல்லி தனது காரிலேயே அனுப்பி வைத்திருக்கிறார்.

இதெல்லாம் சொந்தமாக அவரைப்பற்றி நான் அறிந்தவைகள். பொதுவாக என்றால் அவரைப்பற்றி அறியாதவர்கள் யாருமிருக்க முடியாது.

அவர் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல் பிரகாசமாக இருந்தார் என சரோஜாதேவி அம்மா சொல்லியிருக்கிறார்கள். நான் பார்த்தபோது ஆயிரம் பௌர்ணமியும் ஒரே நேரத்தில் உதித்ததுபோல் இருந்தார்.

பணமிருக்கும் மனிதரிடம் குணமிருப்பதில்லை என்ற வரிகளைப் பொய்யாக்கியவர்.

புத்திசாலிகள்தான் வெற்றிபெறுவார்கள் என்ற வரிகளை உண்மையாக்கியவர். தாயைக்காத்த தனயன் மட்டுமல்ல தன் மக்களையே தாயைப்போல் அரவணைத்தவர்.

அவர்வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பது பெருமையென்றால்,அவரது நூற்றாண்டுக்காக அவரைப்பற்றி எழுதுவதைப் பெரும் பாக்கியமாக எண்ணி மகிழ்கிறேன்!

என்றும் நிலைத்திருக்கும் அவர் புகழ்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »