மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் கூட்டரங்கில் மஹாகவி ஆசிரியர் வதிலை பிரபா வாசித்த குதிரையாளி நூல் ஆய்வுரை:
குதிரையாளி சிங்க முகம் கொண்ட கற்பனை விலங்கு.
குதிரையைப் போன்று கடிவாளம்கொண்டு வீரன் ஒருவன் அமர்ந்திருப்பதால் அது குதிரையாளி என்று அழைக்கப் பட்டிருக்கலாம்.
குதிரையாளி யானையை தன் பலத்தால் தாக்கிக் கொல்லும் காட்சி கண்டு பராக்கிரம பலம் கொண்ட புலியே நடுங்கும் என்பர்.
இது கற்பனை விலங்கு. எனவே இதைத் தொன்மம் எனப் பார்க்கிறேன்.
இதைக் கோவில்களில், தூண்களில் சிங்க முகத்தில் பார்க்கிறேன். எனவே இதை கலையாகப் பார்க்கிறேன்.
லெமூரியா நாகரிகத்தின் உண்மையான மிருகம் என்று ஒரு கருத்தும் இருக்கிறது. எனவே இதை நிலமாகப் பார்க்கிறேன்.
கற்பனை என்பது கலையாகி இப்போது நிலமாக நிற்கிறது. நிலம் இயற்கையின் ஆதாரம். ஆக, இங்கிருந்துதாங்க ஹைக்கூ தோன்றுகிறது.
குழப்பம் வேண்டாம். இயற்கையைப் புரிந்தவன்தான் ஹைக்கூ உணர்வாளன்.
ஆனாலும், சுபிபிரேம் இந்தத் தலைப்பை ஏன் தேர்ந்தெடுத்தார்? என்கிற கேள்வி எழாமல் இல்லை.
தன் ஹைக்கூ மற்ற கவிதைகளைவிட வலிமை மிகுந்த கவிதைகளாக இருப்பதாக உணர்ந்திருக்கலாம்.
அது அவரின் நம்பிக்கை.. தவறில்லை. ஆனால், ஹைக்கூ கற்பனையா என்றால் இல்லை.
அது கற்பனை ஏற்குமா என்றால் இல்லை.
இங்கே குதிரையாளி கற்பனை மிருகம். ஹைக்கூ ஏற்குமா? ஏற்காது. மாறாக, தொன்மத்தை, கலையை, இயற்கையை ஏற்கின்ற ஹைக்கூ குதிரையாளியை இந்த வகைப்பாட்டிலேயே ஏற்றுக் கொள்ளும்.
●
“நமது தமிழின் தொன்மைக் கடலுள் மூழ்கி, குதிரையாளியைத் தேடிப்பிடித்து, கவிதை நூலின் தலைப்பிற்குள் அமர வைத்திருக்கிறார்” என்று அணிந்துரையில் கவிஞர். ஆரூர் தமிழ்நாடன் சொல்கிறார்.
●
“படையலிடும் சிற்பி
வாய் பிளந்து காத்திருக்கிறது
குதிரையாளி”
●
இந்தக் கவிதை – ஒரு சோறு பதம்
படையல் யாருக்கு இடுவார்கள்.. இரண்டாவது வரியில் வாய்பிளந்து காத்திருக்கிறது என்கிறார். தொடர்ந்து மூன்றாவது வரியில் ‘குதிரையாளி’ என்று வருகிறது. இங்கே குதிரையாளியை காலம் என்று பார்க்கிறேன். அடுத்து உனக்கும் காத்திருக்கிறது படையல் என்று சொல்லலாமா..
●
‘கவிதை வடிவத்தின் பாதிப்பில் மூன்று அடிகளில், குறைவான சொற்களைப் பிரயோகித்து, வாசிப்பவர்களையும் அந்த அதிர்வுகளை உணர வைக்கும் பல குறுங்கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது.” என்று அணிந்துரையில் கவிஞர் சுப்ரா சொல்கிறார்.
சுப்ரா அவர்களுக்கு என் பதிலாக மூன்று அடிகளில் குறைவான சொற்களைப் படைப்பதுதாங்க ஹைக்கூ என்கிறேன். குறைவான சொற்களில் கடலளவு அர்த்தங்கள் பொதிந்துள்ளது. தொடர்ந்து எழுதிய சுப்ரா இறுதியாக இப்படி முடிக்கிறார்..
”முதல் தொகுப்பான இதில் மூன்று வரிகளுக்குள் தன்னைச் சுருக்கிக் கொண்ட கவிஞர் சுபி பிரேம் தனது அடுத்த தொகுப்பில் அவரது கற்பனை வளத்தை மேலும் அதிகமாக வெளிப்படுத்தும் வகையில் பல நீள் கவிதைகளையும் தர வேண்டும்” என்கிறார்.
இந்த வரிகளை ஹைக்கூவிற்கு எதிரான கருத்துக்களாகப் பார்க்கிறேன்.ஹைக்கூவில் கற்பனை வளம் குறைவாகவா இருக்கிறது.
பொதுவாக ஒரு நூலுக்கு அணிந்துரை எழுதுகிறவர்கள் அந்நூலுக்குரிய பதிலாக – பதிவாக இருந்தால் அது சிறப்பு தரும்.
●
“இக்காலம் துளிப்பாக்களின் நூற்றாண்டு காலமாகும். புதுக்கவிதை நூல்களுக்கு இணையாக துளிப்பாக் கவிதை நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது பெருமைப்பட வேண்டும்” என்கிறார் பதிப்புரையில் தமிழ்நெஞ்சம் அமின்.
நண்பர் தமிழ்நெஞ்சம் கூற்று சரியானதே. நாள்தோறும் ஒரு ஹைக்கூ எழுதியது போய் இப்போது நாள்தோறும் ஒரு ஹைக்கூ நூல் வெளியிடும் அளவு தமிழ் ஹைக்கூ அடுத்தகட்ட நகர்வுக்கு வந்துள்ளது.
●
தமிழ் ஹைக்கூ 100 ஆண்டுகள் வரலாறு கொண்டது. ஜப்பானில் தோன்றி 355 ஆண்டுகள் ஆகிவிட்டது. எளிதில் ஹைக்கூ பற்றி நாம் விமர்சனம் செய்துவிட முடியாது! 300 கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
சில ஹைக்கூக்கள் என்னை வியக்க வைக்கின்றன. பல ஹைக்கூக்கள் அவசர கதியில் புனையப்பட்டதாகப் பார்க்கிறேன்.
●
“அசைக்க முடியாத கதவு
சிதைவுகளில் கொடி படர்ந்தபடி
அரண்மனை”
●
இங்கே கவிதையில் அசைக்க முடியாத கதவு என்கிறார். கதவு துருவேறி இறுகிப் போயிருக்குமோ? எனத் தோன்றுகிறது.. சிதைவுகளில் கொடி படர்ந்தபடி பயன்படுத்தப் படாத நிலையைத்தான் குறிக்கிறது. மூன்றாவது வரியில் அரண்மனை என முடிக்கிறார். இது ஒரு காட்சிதான். ஹைக்கூ எப்போதும் காட்சியைத்தான் உணர்த்தும். அதிலிருந்து நாம் எதை எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம்.
அரண்மனைச் சிதைவுகளில் படரும் இந்தக் கொடிகள் அரண்மனை பொலிவோடு இருந்தபோது தோட்டங்களில் படர்ந்து பசுமையாய் இருந்திருக்கலாம். அரண்மனைக்குச் சொந்தக்காரனின் இளகிய மனத்தைக் குறியீடாக உணர்த்துவதாகப் பார்க்கிறேன். அந்த அரண்மனைதான் இன்னமும் வாழ வைக்கிறதே என்கிற ஒரு பெரும் தாக்கத்தையல்லவா தருகிறது.
●
“ஊரடங்கிய சாமம்
பாதசாரிக்கு எதிரொலிக்கிறது
யாசகன் பாடல்”
●
இங்கே பாதசாரி யார்? நீங்களும். நானும்தான். இங்கே யாசகனின் பாடல் கேட்கவில்லை. மாறாக எதிரொலிக்கிறது. அவன் கேட்ட பாடலாகக்கூட இருக்கலாம். ஆனால் ஊரடங்கிய சாமம் என்கிறார். முதல் வரியில் இந்நேரமும் விழித்துக் கொண்டிருக்கும் ஒரு யாசகன் பாடிக் கொண்டிருக்கிறான். அவன் பசி மறக்கப் பாடுகிறானா? என்கிற எண்ணம் ஏற்படுகிறதே. அதுசரி யார் அந்த பாதசாரி? அவன் ஏன் இந்நேரம் நடந்து கொண்டிருக்கிறான்? எங்கே செல்கிறான்? எத்தனை எத்தனை கேள்விகளை இந்த ஹைக்கூ ஏற்படுத்துகிறது பாருங்கள்.
●
“கடையடைத்த இரவு
வட்டமிடும் சிறுவன் கையில்
காலி மது போத்தல்”
●
சிறுவனின் விளையாட்டுப் பொருள் காலி மது போத்தல் என்பதாகிவிட்டது. மது பலரின் வாழ்க்கையில் அல்லவா விளையாடிக் கொண்டிருக்கிறது. ஒரு சந்தேகம்! அந்தக் காலி மது போத்தல் யாருடையது? என்பதுதான். சிறுவனின் தந்தையுடையதாக இருந்தால் என் மனம் கனக்கிறது. அதிர்கிறது..
●
“இறுதி யாத்திரை
மிதிபட்ட மலர்களின் மீது நகர்கிறது
சாமி ஊர்வலம்”
●
இந்தக் கவிதை முரண் உணர்த்தும் கவிதை. இதோ நான் எழுதிய ஒரு கவிதை…
“தொலைதூர யாத்திரிகன்
சென்ற பாதையெங்கும் கிடக்கும்
உதிர்ந்த பூக்கள்! – வதிலைபிரபா
●
என் கவிதைக்குப் பின்னால் சுபிபிரேம் கவிதை வருகிறது. அல்லது என் கவிதையின் அடுத்தகட்ட நகர்வாக இந்தக் கவிதை வருகிறது என்பேன். நான் முன்னால் செல்கிறேன்.அவர் பின்னால் வருகிறார். மூன்றாவது வரியில் சாமி ஊர்வலம் எனும்போது பெரும் நம்பிக்கையைக் கட்டுடைக்கிறார். அதுசரி எது ஊர்வலம், எது யாத்திரை? இப்போது இந்தக் கவிதையை மீண்டும் வாசித்துப் பாருங்கள்.
●
“யாருமற்ற இரவு
நாய் நக்கி ரசித்தது
பால் தட்டில் நிலவு”
●
பால்தட்டில் நிலவு என்றால் தட்டில் இருப்பது பாலா? தண்ணீரா? பால் என்றாலும் நிலவை நாய் ரசிக்குமா? அதுவும் நக்கி ரசிக்குமா? அந்த நேரம் அது யாருமற்ற இரவாகவும் இருக்கிறது. ஹைக்கூவாளன் சிந்தனை இப்படித்தான்.. சிறகடிக்கும்.. வாலாட்டும்.. எனக்கென்னமோ அந்த நாய்க்கு அது நிலவா? அப்பமா? தெரியவில்லை.
●
“வற்றும் நிலையில் குளம்
தவளை தாண்டியது
பிறை நிலவை!”
●
ஒரு அழகியல் பார்வையாக இந்தக் கவிதையைப் பார்க்கிறேன். அற்புதமான காட்சிப்பதிவு இது. அதேசமயம் வற்றும் நிலையில் குளம் எனும்போது அது கோடைகாலத்தின் தொடக்கமாகவும் இருக்கலாம். ஹைக்கூவுக்குப் பருவகாலங்கள் மிக முக்கியமானது. எத்தனை நாளைக்குத்தான் இந்தத் தவளை பிறைநிலவைத் தாண்டும். பார்க்கலாம். கோடைகாலத்தின் உக்கிரம் என்ன செய்யப்போகிறதோ? தண்ணீர் வற்றி தவளை எங்கே போகும்? கவலை கொள்கிறது மனது.
●
தொடர்ந்து பல கவிதைகள் குறித்து எனக்கு விமர்சனம் இருக்கிறது. பெரும்பாலான கவிதைகள் அவசரகதியில் எழுதப்பட்டனவோ எனவும் தோன்றிது. நல்ல கவிதைகளை தரக்கூடிய ஆற்றல் உடையவர் சுபி பிரேம். கொஞ்சம் நிதானமாக எழுதியிருந்தால் இந்தத் தொகுப்பு கொண்டாடப்பட வேண்டிய தொகுப்பாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. இங்கே இந்தக் கவிதையில் தேனீக்கள் பற்றி எழுதியிருக்கிறார்;. பெரும்பாலும் தேனீக்கள் கிணறுகளில் கூடு கட்டுவதில்லை.
●
“நீரில்லாக் கிணறுகள்
இடம் தேடி அலைகின்றன
தேனீக்கள்”
●
ஆனால், முதல் வரியிலேயே ஒரு விடை கிடைக்கிறது எனக்கு. நீரில்லாக் கிணறுகள் என்று பன்மையாக சொல்லி இருக்கிறார். அது வறட்சியைக் குறிக்கிறது. அங்கே மலர்கள் இருப்பது அரிது.. ஆக தேனீக்கள் நீருள்ள இடம் நோக்கி – மலருள்ள இடம் நோக்கி தேடிச் செல்வதாகப் பார்க்கிறேன். இப்படி எழுதுகிற சுபி பிரேம்தான் மேலே சொன்னபடி இப்படியும் எழுதுகிறார்.
●
“பள்ளி முடிந்ததும்
உற்சாகமாக ஓடிவந்தன
குழந்தைகள்”
●
மூன்றுவரிகளை அப்படியே மடக்கிப் போட்டபடி.. இந்த வரிகள் கவிதை இல்லை. ஒரு செய்தி. statement அவ்வளவே.. இப்படியான கவிதைகள் சுபி பிரேமை தவறாக கணிக்கச் செய்துவிடும்.
●
“விழிகள் உருள
உருகி வடிந்தது
பனிக்கூழ்”
“ஆசையாகக் குழந்தை
வெயிலில் உருகியது
பனிக்கூழ்”
●
இப்படியான ஒத்த கருத்துள்ள கவிதைகளையும் தவிர்த்திருக்கலாம். மேலும்,
●
28, 37 ஆகிய பக்கங்களில் ஒரு கவிதை இரு முறை வந்திருக்கிறது.
86, 90 ஆகிய பக்கங்களில் ஒரு கவிதை இரு முறை வந்திருக்கிறது.
83, 97 ஆகிய பக்கங்களில் ஒரு கவிதை இரு முறை வந்திருக்கிறது
இது நூலின் சுவாரசியத்தைக் குறைக்கலாம்.
●
சுபி பிரேம் இன்னமும் கூட காத்திருந்திருக்கலாம். கவிஞன் காத்திருப்பவன்தானே. சுபி பிரேம் மட்டும் என்ன விதிவிலக்கா?
ஆனாலும்,குதிரையாளி தந்த கவிஞன்.. தன் பலம் உணர்ந்தவன். இன்னமும் பல காத்திரமான படைப்புகளைத் தந்து ஹைக்கூ உலகில் கம்பீரமாக வலம் வருவார். அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிற குதிரையாளியாக வருவார்.
●
கோவில் தூண்களில் வாய்பிளந்து நிற்கும் குதிரையாளிகள் கோவிலின் சிறபங்கள் மட்டுமல்ல. தொன்மங்கள் தாங்கி நிற்கும் இந்தக் குதிரையாளிகள் பெரும் வரலாற்றைச் சுமந்து நிற்கின்றன. அது கற்பனைக் குதிரைகள் அல்ல. அதன் பயணம் நீண்டது. ஒரு ஹைக்கூவாளனின் பயணத்தைப் போன்று அதன் பயணம் மிக நீண்டது. அவன் குதிரையாளியின் மீது ஒரு யாத்திரிகனாகப் பயணித்துக் கொண்டிருக்கிறான். அவனை கற்பனையாகப் பார்க்காதீர்கள். அவனே காட்சி. அவனே குறியீடு. அவன் பிரபஞ்சத்தைச் சுமந்து கொண்டிருப்பவன்.
சுபி பிரேம் கூட அப்படி ஒரு பயணிதான். ஒரு குதிரையாளியாக..
வாழ்த்துகள்..
●
நூல் : குதிரையாளி
நூலாசிரியர்: சுபி பிரேம், சிங்கப்பூர்
பக்கங்கள்: 100
விலை: 120/-
வெளியீடு: தமிழ்நெஞ்சம், பிரான்ஸ்.
Email : editor@tamilnenjam.com