எழுகின்ற விடியலிலே இனிமை வேண்டும்
      ஏரியிலே தூயதண்ணீர் ஓட வேண்டும்
உழுகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும்
      உணவினிலே விடங்கலக்கா தர்மம் வேண்டும்
இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும்
      இகல்வெல்ல ஒன்றிணைந்தே முயல வேண்டும்
விழுகின்ற தலைமுறையும் வாழ வேண்டும்
      விடியலிலே புதுதேசம் மலர வேண்டும்

சொந்தத்தில் அறிவுடைமை வளர வேண்டும்
      சோற்றுக்கோ பஞ்சநிலை மாற்ற வேண்டும்
சொந்தங்கள் தமிழ்மக்கள் எண்ணம் வேண்டும்
      சோர்வின்றி இனங்காக்க துடிக்க வேண்டும்
வந்தேறிக் கூட்டங்கள் ஓட வேண்டும்
      வக்கற்ற ஆட்சியினை மாற்ற வேண்டும்
குத்தகங்கள் செய்வோரை களைதல் வேண்டும்
      கூத்தாடிக் கூட்டங்கள் மாய வேண்டும்.

அறிவிழந்த மனிதரென்றே எண்ணித் தந்த
      அத்தனையும் இலவசமாம் என்ன சொல்ல
தறிகெட்ட ஆட்சியிலே சுருட்ட எல்லாம்
      தம்மக்கட் பணமென்ற எண்ண மின்றி
முறிக்கின்றார் நம்கழுத்தை உயிரைக் கொன்றே
      முயன்றிடுவோம் மாற்றத்தை செய்ய நன்றே
தெறிக்கின்ற கனலாகும் நம்மில் கோவம்
      திக்கெட்டும் வாழ்ந்திடுவோம் சிறந்தே நாளும்.