பொன்னந்தி மாலையிலே
      பொங்கிவரும் பாட்டு! – உன்
புன்னகையில் தான்மயங்கிப்
      பூத்ததுள்ளம் கேட்டு!
தென்றலுடன் ஆடிடுதே
      தென்னையிளங் கீற்று – பேசும்
செவ்வலகு கிள்ளையொன்று
      சித்திரம்போல் வீற்று!!

செம்மஞ்சள் சூரியனும்
      செல்லும் விடைபெற்று! – அந்த
செம்மாந்தப் பேரொளியோ
      செம்பவளத் தட்டு!
நம்மிதயம் சேர்ந்திணையும்
      நாளினில்கை தொட்டு – நம்
நற்றமிழில் சொல்லெடுத்து
      நானிசைப்பேன் மெட்டு!

கூடடையும் தாய்வரவில்
      குஞ்சுமுகம் பூக்கும் – அதன்
கொஞ்சுமொழி கேட்டவுடன்
      கூர்விழியால் பார்க்கும்!
ஓடமொன்று அக்கரையில்
      ஓசையின்றிச் சேர்க்கும்! – அதை
ஒட்டிவரும் சேல்கெண்டை
      உள்ளமதை யீர்க்கும் !!

கார்மேகம் கண்டமயில்
      கலாபம் விரித்தாடும்! – அந்த
காட்சியினைக் கண்டமனம்
      காதலியை நாடும்!
சீர்மிகுந்த வெண்ணிலவை
      திரையிட்டு மூடும் – முகில்
திங்களொளி பட்டதுமே
      சேர்த்தணைக்கத் தேடும்!!

கோலநிலா மீன்களுடன்
      கூடியெழில் காட்டும்! – அது
கும்மிருட்டு வந்தபின்னும்
      குலவியொளி கூட்டும்!
சோலைமலர் வாசமது
      துன்பத்தை ஓட்டும்!- என்
சுந்தரியே உன்நினைவோ
      சொர்க்கத்தைக் காட்டும்!!