பதினைந்து வயதினிலே
பலகனவு எனக்குண்டு,
உதிரமது ஊறுகின்ற
உன்னதத்தின் காலமது,
எதுவுமில்லை உண்பதற்கு
எப்படியூறும் உதிரம்தான்,
விதியென்றே பள்ளியிலே
விளையாட மனமுமில்லை.
கட்டணத்தில் படிக்கின்ற
காலமொன்று இருந்ததாலே
எட்டாவது மாதத்திலே
எனக்குக்கட்ட பணமுமில்லை,
சட்டப்படி பள்ளியிலே
சேர்க்கவுமே மறுத்தார்கள்,
தொட்டெடுத்துப் புத்தகத்தைத்
தூக்கிசென்றேன் மரத்தடிக்கு.
என்னைப்போல் இன்னொருவன்
இணைந்திட்டான் சுற்றுதற்கு,
புன்னைமர நிழலடியில்
போக்கினோம் நேரமதை,
கண்ணைமூடி படுத்திருந்தோம்
கதைகள்பல பேசிவந்தோம்,
மணியடிக்கும் வேளையிலே
மயங்கியபடி வீட்டுக்கு,
இப்படியே சிலநாட்கள்
இன்னல்களைச் சந்தித்து
எப்படியும் பள்ளிக்குள்
இருவருமே சென்றிட்டோம்,
தப்பாமல் பாடங்களைத்
தவறாமல் கேட்டுவந்தோம்,
உப்பில்லா கஞ்சியுமே
உணவாக வாய்க்காமல்.
பள்ளியிறுதித் தேர்வுவரைப்
பயின்றுவந்தோம் ஒன்றாக,
துள்ளியெழும் மான்போல
தொடரவில்லை விளையாட்டை,
அள்ளிவந்த விதியாலே
அவனானான் கோடீசுவரன்,
எள்ளிநகை யாடபலர்
எளிமையாய்க் கவிஞனானேன்.