தங்கமகளாய் பிறந்தெமக்கு
தரணியினைப் புரியவைத்தாய்,
சிங்கமென நடைபோட
செகமதிலே பிறப்பெடுத்தாய்,
சங்கத்தமிழ் பயிலபாட
சாலையினைத் தேர்ந்தெடுத்தாய்,
வங்கக்கடல் அலைபோல
வார்த்தையிலே வளம்சேர்த்தாய்.
உயர்கல்வி பயில்வதற்கு
ஊர்விட்டு புறமிருந்தாய்,
பயமின்றி ஏழாண்டு
படிப்பறிவில் சிறந்திருந்தாய்,
அயர்வின்றி கடுமுழைப்பில்
அதிசயத்தைப் பெறவைத்தாய்,
சுயமாக சிந்தித்தே
சுறுசுறுப்பில் மலைக்கவைத்தாய்.
முதுகலையில் பட்டமதை
முனைப்புடனே பெற்றுயர்ந்தாய்,
புதுமைமிகு கோவையிலே
பழமையினை நீமறந்தாய்,
விதவிதமாய் உடையணிய
விருப்பமுடன் தான்வளர்ந்தாய்,
உதயமான புதுவாழ்வில்
உயர்வினையே நினைத்திருந்தாய்.
மணம்முடித்து புகுந்தவீடு
மகிழ்வுடனே சென்றிருந்தாய்,
குணமறிந்த பெண்ணென்று
குரல்கொடுக்க மகிழ்ந்திருந்தாய்,
பணம்பெரிதாய் நினையாமல்
பாசமதில் வீற்றிருந்தாய்,
இணக்கமுடன் குடும்பத்தில்
ஏற்றமுடன் செழித்திருந்தாய்.
கண்ணான செல்வனையும்
கருத்துடனே பெற்றெடுத்தாய்,
விண்ணோர்கள் வாழ்த்துரைக்க
வியனறிவு பெறவைத்தாய்,
மண்ணிலவன் புகழ்பெறவே
மகளேநீ துயில்மறந்தாய்,
பண்ணிலிசை வருவதுபோல்
பக்குவமாய் நீவளர்த்தாய்.
நீபிறந்த நன்னாளில்
நிறைசெல்வம் பெருகிவந்து
வான்சுரக்கும் மழைபோல
வளம்சேர்க்க வாழ்த்துகிறேன்,
நான்வாழ்த்தும் சொற்களிலே
நல்லாசி நிறைந்திருக்க
தேன்போன்று என்றென்றும்
திருமகளே வாழியவே!