அஞ்சலி

வரம்போடு தம்வாழ்வை
    வகுத்தளித்து வாழ்ந்துவந்த
பெரம்பலூரில் பிறந்திட்ட
    பெருவைரம் இராமதாசு,
உரமாக இருந்துவந்து
    உயர்வான சிற்றிதழைத்
தரமான எழுத்துகளால்
    தவழவிட்டு மகிழ்ந்துவந்தார்.

பெற்றெடுத்த பிள்ளையினும்
    பிரியமுடன் வளர்த்துவந்த
சிற்றிதழைத் தம்பொறுப்பில்
    சிரமங்கள் பலவிடையே,
முற்றும்நம் தமிழ்வளர
    முனைப்பாக பாடுபட்டு
உற்றதுணை யாயிருந்து
    உயிரையும் உவந்தளித்தார்.

துபாயிலவர் இருந்தாலும்
    துணிவோடு பலசெயல்கள்
சபாக்கள்தரும் வலுவோடு
    சாதித்துக் காட்டியதால்
அபாயங்கள் வந்தபோதும்
    அவைவீழ்த்தி வெற்றிகண்டு
சிபாரிசுகள் செய்வதெல்லாம்
    சிறுபிள்ளைத் தனமென்பார்.

அமிழ்தான மொழியாகி
    அகிலத்தில் சிறப்புற்ற
கமழ்கின்ற இனியமொழி
    கருணைமிகு தமிழ்மொழியைச்
சிமிழாக்கி சிற்றிதழில்
    சேர்த்தக்ருஷ் ராமதாசைத்
தமிழ்நெஞ்சம் இதழின்று
    தலைதாழ்த்தி வணங்குகிறது!