பாலமுனை பாறுக் சேர் அற்புதமான, அருமையான மனிதர். கவிதைத்துறையைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு கடல். நூலின் மீதான சிறு குறிபொன்றை கவிதை வடிவில் இங்கு வரைகிறேன் .இந்த முயற்சி மஹாகவி உருத்திர மூர்த்தி ,குறிஞ்சித் தென்னவன், பாலமுனைப் பாறூக் என்ற மூத்த மேதைகளின் நடையில் அமைந்தது. ஈழத்தின் குறும்பா, உலகுக்கு ஒரு முன் மாதிரி. அதை தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள வாசகர்கள் அறிவார்கள் .
பாவேந்தல் பாறூக் சேர் அவர்கள் மிக எளிமையாக ,கற்பனையுடன், பொருட் செறிவுடன் குறும்பா அமைப்பதில் கை தேர்ந்தவர். அவரின் அனைத்துக் கவிதைகளும் ஏதாவது சமூக பிரக்ஞை சார்ந்த ஒரு தகவலைச் சொல்லும். அவருடன் நட்புப் பூண்ட பின்னர் தான் மரபில் நவீனத்தை புகுத்தும் கலையை அறிந்து கொண்டேன் .
இன்று வித்துவச் செருக்குடன் பின் நவீனம் அல்லது நவீனம் கவிதைக் கலையை உரைநடைச் சாயலில் வாக்கியம் அமைப்பதைக் கற்றுத் தந்திருக்கிறது.ஆனால் மரபுக் கவிதைகள் தான் கவிதைக்குரிய அழகியலை உலகம் அழியும் வரைக்கும் உணர்த்திக் கொண்டே இருக்கும்.
அந்த வகையில் , வலைக்குள் மலர்ந்த வனப்பு மிக எளிமையாக சமூகத்தை பிரதி செய்து காட்டுகிறது .
இன்னவைதான் கவி எழுத
ஏற்ற பொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீ திருப்பிச்
சொல்லாதே. சோலை, கடல்,
மின்னல், முகில், தென்றலினை,
மறவுங்கள். மானிடத்தில் மீந்திருக்கும்
இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு,
என்பவற்றைப் பாடுங்கள்
என்ற மஹா கவியின் கூற்றை ஞாபகம் ஊட்டுவதாக, இந்நூல் எனக்குள் சிறகு விரித்துப் பறக்கிறது. பாறூக் சேரின் நடையில் நூல் பற்றி சில குறிப்புகளை இங்கே தருகிறேன்.
பாலமுனை மண்ணீன்ற கலைஞர்
பாவேந்தல் பாறுக் நம் கவிஞர்
காலமுனை வரலாற்றில்
கவி வேந்தர் என்றழைக்கும்
சீலமுறுங் குணங் கொண்ட சுவைஞர்
கிழக்கிலங்கை கவி மரபில் மூத்தவர்
கிளர் மதியில் கூறும் பாவை யாத்தவர்
வழக்கொழிந்து போகின்ற
வண்மரபை எமக்களித்து
முழக்குகின்ற பெருந்தகைமை பூத்தவர்
வலைக்குள்ளே மலர்ந்த வனப்பிற் சென்றேன்
வடித்தெடுத்த சாரங்களைக் கண்டேன்
கலைக்குள்ளே மூத்த கலை
கவிதையெனும் தெள்ளமுதை
மலைக்குள்ளே எடுத்த தேனாய் உண்டேன்
மலர்ச்சியென ஒருவரியிற் தலையங்கம்
மலர்ந்த காலை மலர்வோம் நிலை எங்கும்
புலர்ச்சி அடைகின்றதொரு
புது விடியற் கறை கூவல்
வளர்ச்சி யடைகின்றவகை முழங்கும்
பணி தொடங்க நல்லெண்ணம் வேண்டும்
பகரும் வழி நடப்போமே யாண்டும்
கணிப் பொறியில் மலர்ந்தவற்றை
கைகளிலே தவழ விட்டார்
துணிச்சலுடன் பணி செய்வோம் மீண்டும்
புன்னகையின் வலிமை யினைச் சொன்னார்
புலன் கொள்ளும் மௌனத்தைச் சொன்னார்
தன் வாழ்வின் அனுபவத்தைத்
தந்தார்கள் மற்றோர்க்கும்
நன்னெறி யைக் கோர்த்து வைத்தார் அன்னார்
முகமலரில் புகுத்தி வைத்த கருத்து
முத்துக்கள் என்றகத்தில் நிறுத்து
நகைகளிலே புன்னகைதான்
நானிலத்தில் முதன்மை யெனச்
சுகமாகச் சொன்னவையும் இருத்து
புதுக்கவிதை இலக்கணத்தைப் படித்தேன்
பூட்டி வைத்த சிந்தனையை உடைத்தேன்
எது கவிதை என்பதற்கு
ஏற்றதொரு தத்துவத்தைப்
பதுக்கி வைத்து எனக்குள்ளே வடித்தேன்
கவி மழையில் வாசித்து நனைந்தேன்
கடும் விகடம் அதற்குள்ளே அறிந்தேன்
செவி நுகரும் வேளையிலே
சிந்தனைகள் ஆர்ப்பரித்து
நவின்றிடத்தான் நளினமாகப் புனைந்தேன்
அப்பப்பா அத்தனையும் சாரம்
அது அவரின் சிந்தனையச் சாரும்
ஒப்பில்லா லயத்தோடு
ஓசையுடன் கற்றறிந்தேன்
எப்படித்தான் உரைப்பேன்…?
விலை : 320 LNR (ஸ்ரீலங்கா ரூபாய்) அஞ்சல் செலவு தனி
மின்னஞ்சல் : farookpalamunai@gmail.com
பர்ஹாத் வெளியீட்டகம்,
14 A, பர்ஹானா மன்ஸில்,
பாலமுனை- 03.
32354.
இலங்கை
1 Comment
? · ஆகஸ்ட் 22, 2017 at 3 h 02 min
அருமை.